Tuesday, January 12, 2010

இந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா?

’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ - இந்த வாசகம் குறித்து நான் புரிந்து கொண்டது இதுதான். 1960களில் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப் பாடமாக்க அப்போதிருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கொதித்தெழுந்த மொழிப்பற்று காரணமாக, அரசின் உத்தரவை எதிர்த்துக் களமிறங்கிய இளைஞர் பட்டாளம், தங்கள் நோக்கத்தில் செவ்வனே வெற்றி பெற்று, இந்தியை நீக்கியது மட்டுமல்லாது, அதன் மூலம் பெற்றுவிட்ட 'தமிழ் காவலர்கள்' அடையாளத்தினை முதலாகக் கொண்டு, தமிழகத்தை ஆளும் வாய்ப்பையும் பெற்று, தங்கள் வாரிசுகளுக்கு மாத்திரம் இந்தியுடன், ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் பயிற்றுவித்து, தத்தம் துறைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்து விட்டார்கள் என்பதுதான்.

2005-ஆம் ஆண்டு நான் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியிலமர்ந்தேன். என்னோடு, இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒரே சமயத்தில் பணியிலமர்ந்தோம். அப்போதே, 'தேசிய மொழியைக் கூடத் தெரியாதென்று சொல்கிறாயே..'என்று அம்ரித் ராஜ் என்னை அசிங்கப்படுத்தினான். 'சொல்கிறாயே..' என்ற வார்த்தையின் தொடர்ச்சியாக, ’உனக்கு வெட்கமாக இல்லையா..’ என்ற தொடரை அவன் கேட்கவில்லை. ஆனால் எனக்குக் கேட்டது.

அன்றிலிருந்து இன்று வரை, இதுபோன்ற எண்ணற்ற அவமானங்களை சந்தித்து விட்டேன். மென்பொருள் துறையில் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகளாகப் பணிபுரியும் வட இந்தியர்களிடம் நான் அறிமுகமாகுகையில், நான் தமிழன் என்று தெரிந்ததுமே, அவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம், எனக்கு இந்தி தெரியாது என்று கூறிய உடனேயே, நிறையத் தாடி வைத்திருந்த சிங் ஒருவர், ”தூ.. மதராசி?” என்று கேட்டார். நான் பயந்து விட்டேன். என்னடா.. துப்புகிறாரே என்று. ஆனால் அவர் துப்பவில்லை. 'தூ' என்றால் இந்தியில் 'நீ' என்று அர்த்தமாம்!

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். இன்னொரு மொழி நம் மாநிலத்தினுள் வந்தால், அது நம் மொழிக்கு நாம் செய்யும் துரோகமா? இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா? முதலில் நாடு, நதி, மொழி என்று எல்லாக் கருமங்களையும், அம்மா, தங்கை என்று பெண்ணுறவு கொண்டு விளிக்கும் கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும்.

பள்ளி நாட்களில், ’தமிழன்னை’ என்று கூறும் போது, ஏதோ ஒன்று உள்ளே பொங்குவதை உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு உணர்வு வருவதில் தவறில்லை. ஆனால், அது நம் மொழியின் மீதான வெறியாகவும், இன்னபிற மொழிகளின் மீதான துவேஷமாகவும், உருமாறுவது இயல்பாக நடந்தேறி விடுகிறது. அதனால் தான் இந்த அம்மா, தங்கை செண்டிமெண்ட்டெல்லாம் வேண்டாமென்கிறேன்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட சில தமிழ் பெற்றோர், தத்தம் குழந்தைகளுக்கு இந்தி டியூஷன் வைத்தாவது, கற்பித்து விடுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முற்போக்கு எண்ணமில்லாத, போதுமான படிப்பறிவில்லாத, அறிவிருந்தாலும் டியூஷனுக்குக் காசில்லாத நிலையில்தானே பெரும்பான்மையான நம் பெற்றோர் சமூகம் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்கையில், நம் நாட்டின் தேசிய மொழியை, அரசே, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் என்ன பாதகம் வந்து விடப் போகிறது?

இந்தி தெரியாமல் வட மாநிலம் ஒன்றுக்கு நம்மால் போக முடிகிறதா? எல்லா சூழ்நிலைகளிலும் ஆங்கிலம் உதவாதே அய்யா!

தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலையைப் பார்க்க முடியாது. கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று எல்லாருக்கும் இந்தி தெரியும்போது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அது பெருமையா? பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை! செய்து வைத்திருக்கும் அறிவீனத்துக்கு பெருமை ஒரு கேடு.

இந்தி நமக்குத் தெரிந்திருந்தால், மென்பொருள் துறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் இன்னும் பரிமளித்திருப்பார்கள். நான் உட்பட! 3 அல்லது 4 பேர், ஒரு issue-வை investigate செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்மந்தமான நம் உரையாடல் அல்லது விவாதம், நம்மை அந்த issue-வைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும். இங்கே நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியில் உரையாடத் துவங்கி விடுகிறார்கள். நமக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் வருவதில்லை. இதனாலேயே appraisal வரும்போது நம்மவர்கள் பின்தங்குகிறார்கள். இந்தி தெரிந்தவர்கள் முந்துகிறார்கள்.

இங்கே இந்தியில் பேசுபவர்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. 4 தமிழர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில், தமிழில்தானே பேசுவீர்கள். 5ஆவதாக அங்கிருக்கும் மாற்று மொழியானை நினைவிலா வைத்திருப்பீர்கள்?

வட இந்தியர்கள் பணிக்கு வர சென்னையை விட, பெங்களூரை ஏன் பெரிதும் விரும்புகிறார்கள்? மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான்? ஆக, நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கூட இந்நிலை இடையூறாகத்தான் இருக்கிறது.

சற்றே நிதானத்துடன் யோசித்தால் 'மொழியைக் காப்பாற்ற எந்தக் கொம்பனும் தேவையில்லை' என்பதும் 'மொழியைக் காப்பாற்றிக் கொள்ள, மொழிக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியாலும் முடியாது' என்பதும் விளங்கும்.

எங்கே நானும் மொழியைக் காக்கப் பிறந்த ஆபத்பாந்தவனாகவும், அநாதரக்ஷகனாகவும், இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தில், தமிழின் மீதிருக்கும் இயல்பான அன்பு குறித்து கூட சற்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

எங்களூர்ப்பக்கம் ஒரு பழமொழியுண்டு. 'கொளத்து மேல கோவப்பட்டு, கால் களுவாம வர்றது..' என்று. குளத்தின் மேல் கோபப்பட்டு, 'கழுவாமல்' வந்தால், யாருக்கு நஷ்டம். குளத்துக்கா? அப்படித்தான். இந்திக்கும் சரி. எல்லாவற்றுக்கும் காரணமான அசிங்கவாதிகளுக்கும் சரி. ஒரு நஷ்டமும் இல்லை.

எல்லா எளவும் மிடில்கிளாஸ் வெங்காயங்களான நமக்குதான்!


-சென்ற வார உயிரோசைக்கு அனுப்பினேன். ஏனோ பிரசுரமாகவில்லை.



20 மறுமொழிகள்:

ஜெகதீசன் January 13, 2010 at 11:08 AM  

நல்ல பதிவு!
இந்தி படிக்காததால் நான் வீணாய்ப் போனேன்..
அனைவரும் நமது "தேசிய" மொழியான இந்தியைக் கட்டாயம் படிக்கனும்.

வெற்றி-[க்]-கதிரவன் January 13, 2010 at 9:10 PM  

உங்கள மாதரி ஆளுங்களுக்கு பதில்சொல்லியே நெரம்ப டயர்ட் ஆகிறோம்,

பெங்களூருல வேலை செய்றதுக்கே இவ்வளவு இந்தி பில்டப்பா ?????

இந்தி தெரியாம வடயிந்தியாவுல குப்ப கொட்டுனவங்கா யாரும் இல்லதமாதறி எழுதிருக்கிங்க ???

நானும் ரெண்டு வருடம் வட இந்தியாவுல குப்ப கொட்டிருக்கேன்

இந்தியாவுக்கு தேசியமொழி என்று எதுவும் கிடையாது (இருக்குன்னு அரசியல் அமைப்பு சட்டத்துல எடுத்து காமிங்க பாப்போம் ) , அலுவல் மொழி மட்டுமே அத தெரியாம தேசியமொழின்னு பில்டப்பு வேற

உங்கள மாதரி ஆளுங்க கேக்குற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவுகளிலும் / பின்னூடங்களிலும் பதில் கிடைக்கும்

jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html (பின்னூட்டங்களை பாருங்க.)

govikannan.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

வெற்றி-[க்]-கதிரவன் January 13, 2010 at 9:12 PM  

//ஜெகதீசன் said...
நல்ல பதிவு!
இந்தி படிக்காததால் நான் வீணாய்ப் போனேன்..
அனைவரும் நமது "தேசிய" மொழியான இந்தியைக் கட்டாயம் படிக்கனும்
//

யோவ் இது எல்லாம் உனக்கே ரொம்ப ஓவர் நக்கலா தெரியல -:)))) பாவம்யா அவரு

வெற்றி-[க்]-கதிரவன் January 13, 2010 at 9:13 PM  

நேரமின்மையின் காரணமாக வரிக்கு வரி பதிலை பிறகு தருகிறேன் -:))

மதன் January 14, 2010 at 1:15 AM  

நன்றி ஜெகதீசன்.

வெற்றிக் கதிரவன் -

அழகான பெயர் உங்களுக்கு! முதன்முதல் வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

கருத்துப் பரிமாற்றமென்பது, ஆரோக்கியமானதொரு விவாதத்திற்கு வழி நடத்திச் சென்றால் அது நம்மனைவருக்குமே பயனளிக்கும்.

யார், யார் மேல் குற்றம் சொல்லி வெற்றி பெறுகிறார்கள் என்ற பொதுப்புத்தி மனோபாவத்தை விட, தவறானதொரு கருத்து பொதுவில் வைக்கப்படுகையில், அந்தக் கருத்தின் உட்பொருள், யதார்த்தத்திலிருந்து முரண்படுவதை, எதிர் சாரார் சுட்டிக் காட்டுவதில் முயற்சியை செலவிடலாம்.

என் அனுபவத்தில் நான் உணர்ந்த மற்றும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், "பில்டப்" என்று வகைப்படுத்தப் பட்டது, வருத்தமளிக்கிறது கதிரவன்.

நான் ஒரு சராசரியன், சாதாரணன் என்பதை எப்பொழுதும் நம்புபவன் நான். அப்படி இருப்பதுதான் என் வாழ்வின் இயல்பான சந்தோஷங்களுக்கு மூல காரணம். எனவே "பில்டப்" கொடுக்கும் எண்ணமெல்லாம் எனக்கில்லை.

எங்கே பணிபுரிந்தால் என்ன கதிரவன்? என் கருத்தை நான் முன்வைப்பது எப்படி பில்டப்-பாகும்? சொல்லுங்கள்.

/இந்தியாவுக்கு தேசியமொழி என்று எதுவும் கிடையாது/ - என்ற தகவலுக்கு நன்றி. எனக்கு இது தெரியாது. மன்னிக்கவும்.

தேசிய மொழியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. உங்கள் தாய் மொழியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, அம்மொழியின் மேல் ஏவப்படும் வன்முறைகளுக்கு நான் உடந்தையாக இருக்க ஒப்பவில்லை கதிர்.

எனக்கு ஒன்று புரியவில்லை. நான் சொல்ல வருவது அனைத்தும் தவறாகவே இருக்கட்டுமே. அதென்ன, 'உங்கள மாதிரி ஆளுங்க' என்ற பிரயோகம்? உங்கள் கருத்துடன் முரண்படுபவர்கள் அனைவரும், 'உங்கள மாதிரி ஆளுங்க' ஆகிவிடுவரா கதிர்? :)

நான் சொல்வது (அ) செய்வது தவறென்று தோன்றினால், சொல்லுங்கள். உண்மையென்று உணரும் பட்சத்தில் திருத்திக் கொள்கிறேன். அதை விடுத்து, இழிவான பிரயோகங்கள் வேண்டாமே. போலவே "யோவ்" என்று அழைப்பது!

இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி கதிர். எனக்கும் தற்போது நேரமில்லை. நேரம் கிடைக்கையில் கண்டிப்பாகப் படிக்கிறேன்.

உங்களுக்கும் நேரம் கிடைக்கையில் வாருங்கள்.

மாறா பிரியமுடன்,
மதன்

damildumil January 14, 2010 at 1:14 PM  

எந்த மொழியையும் கற்பது தவறில்லை ஆனால் ஹிந்தியை கற்றால் தான் இந்தியாவில் பிழைக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

எந்த ஒரு வட இந்தியனும் மற்ற மாநிலங்களுக்கு வரும் பொழுது அங்கே பேசப்படும் மொழியை தெரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியையும் எடுப்பதில்லை மாறாக அவனது மொழியை நாம் தெரிந்திருக்க வேண்டும் எனறு எதிர்பார்பது எந்த வகையில் நியாயம்.

நீங்கள் குறிப்பிடும் பெங்களூரையே பாருங்கள், எங்கே பார்த்ததலும் ஹிந்தி. கண்ணட படம் வெளியிட அவர்களுக்கு திரையரங்கு கூட கிடைப்பதில்லை. அங்கே வசிக்கும் கண்ணட மக்கள், கண்ணட படம் பார்க்க வேண்டுமென்றால் மெஜஸ்டிக் போய் எதாவது ஒரு லோக்கல் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். இது சரியா.

அதே போல தான் மும்பையும், அங்கே இப்பொழுது மராட்டிய மொழியை பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி எங்கே போனாலும் தங்கள் மொழியை தான் மற்றவர்கள் பேச வேண்டும் நாங்கள் மற்ற மொழியை கற்றுக்கொள்ள வேண்டியதில்லைன்னு மிதப்பாய் திரிவது அயோக்கியதனம்.

நீங்கள் சொல்வதை போல் இங்கும் ஹிந்தியை கட்டயமாக்கியிருந்தால் மும்பை, பெங்களூர்,ஹைதை நிலைமை தான் சென்னைக்கும்.

இன்று சென்னை இந்தியாவில் எந்த ஊருக்கும் சளைத்தது இல்லை. ஹிந்தி தெரியததால் நாம் எங்கே குறைந்து விட்டோம். வட இந்தியர்கள் சென்னைக்கு வர விருப்பமில்லை என்றால் மிக்க மகிழ்ச்சி அந்த வேலை இங்க தகுதி உள்ள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் கஷ்டப்படுவார்கள் என்பதற்காக எல்லாம் நாம் ஹிந்தி கற்க வேண்டிய அவசியமில்லை.

அப்புறம் முக்கியமான ஒன்றை இங்கே தெளிவுபடுத்தி விடுகிறேன், ஹிந்தி தேசிய மொழின்னு யார் சொன்னது? இது தவறான தகவல்.official language is still english.

இது போன்ற விவாதங்கள் எல்லாம் பின்னூட்டங்ளில் விவாதிக்க முடியாது,ரூம் போட்டு பேச வேண்டிய மேட்டர் :)

உங்களுடைய எழுத்து நடை அருமை.வாழ்த்துகள்.

மதன் January 14, 2010 at 2:32 PM  

வாங்க டமீல்டுமீல்!

இந்தியைக் கற்றால்தான் இந்தியாவில் பிழைக்க முடியுமென்று நான் கூறவில்லை. ஆனால் இந்தி தெரிந்திருந்தால் நமக்கு அது இன்னும் சவுகரியமாக இருந்திருக்கும். விடுத்து, தமிழைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பதைத்தான் தவறென்று கூறுகிறேன்.

தமிழ் மட்டுமல்ல. எந்த மொழியுமே ஒரு அனுபவம். அது வெறும் வெற்று வார்த்தைகளின் கோர்வையினின்று வெளிப்படும் சத்தப் பூச்சு அல்ல. ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தக் கூறை உள்வாங்கிப் பதிவித்து, இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்திப் பழகும் அழகியல்.

சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. 3 ஆண்டுகளில், சொல்லிக் கொள்ளுமளவுக்கு கன்னடம் பேசக் கற்றிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.

வட இந்தியர்கள், நம் பக்கம் வந்தால் இந்தி மட்டும் தான் பேசுகிறார்கள் என்றெல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ வட இந்தியர்கள் கற்றுக்கொண்டு மழலைக் கன்னடம் பேசுகிறார்கள். ஆனால் எல்லா சமயங்களிலும் அவர்களால் கன்னடத்தை மட்டும் பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை வருகையில், கன்னடர்களுக்குத் தெரியும் இந்தியை வட இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் சென்னையில் இது சாத்தியப்படாமல் போனதற்கு காரணம் நம் பிடிவாதம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

எனக்கென்னவோ வட இந்தியர்கள் அவர்கள் மொழியைத்தான் பேசுவோம் என்று அடம் பிடிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அதனைச் செய்வது யாரென்பதையும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! :)

தியேட்டர் கிடைக்கவில்லை என்பதெல்லாம் மொழியுடன் தொடர்புப்படுத்த வேண்டாம் டமீல். அது கன்னடத் திரைப்படங்களின் தரம் பற்றி ஆராய வேண்டிய அறிவியல். அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

மும்பை, பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் நாம் பார்த்துப் பாவப்படும் நிலைமையில் இல்லை. மாற்று மொழி என்று பேதம் பாராமல் கற்றுக் கொண்டு, தங்கள் வாழ்தலை எளிமையாக்கியதோடு அல்லாமல், பிற மாநிலத்தாருக்கும் தொழில் முறையில் தொடங்கி வேறுபல வழிகளிலும் உதவியிருக்கிறார்கள். இதிலென்ன தாழ்வு வந்து விட்டது?

இப்படியே பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். நீங்கள் சொன்னாற்போல் ரூம் தான் போட வேண்டும் போலுள்ளது! :)

உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி டமீல்டுமீல்.

-மதன்

Joe January 14, 2010 at 5:51 PM  

நல்லதொரு இடுகை, மதன்!
ஹிந்தி நாற்பது சதவிகிதம் மக்களாலே மட்டுமே பேசப்படுகிறது, மற்ற அறுபது சதவிகிதத்தில் தமிழர்கள் தவிர மற்றவர்கள் அதனை இரண்டாவது மொழியாக கற்றுக் கொள்கிறார்கள்.

இரண்டு வருடங்கள் பூனாவில் இருந்தபோதும் எனக்கு இன்னும் ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியாது. ஓரளவுக்கு பேச மட்டுமே கற்றுக் கொண்டேன். மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் ஹிந்தி கற்கவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

நான்கு வட இந்தியர்கள் நிறைந்த அணியில் வேலை பார்க்கும் போது, requirements discussion போன்ற சமயங்களில் பொது மொழியான ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கேட்காதது உங்கள் தவறு. மதராசி என்று உங்களை அழைத்தவரை இனவெறியர்கள் பயன்படுத்தும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடுக்கலாம்.

ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசுவதால் உங்களுக்கு பல நன்மைகளுண்டு. ஹிந்தி கற்றுக் கொண்டால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா என்ன?

இந்திய ஒரு தேசமா என்பதில் என்னையும் சேர்த்து பலருக்கு சந்தேகமுண்டு. பிறகு தேசிய மொழி என்பது எது, எதைக் கற்றுக் கொள்வது?

ஹிந்தி கற்றுக் கொள்வது நல்ல விஷயம் தான். கற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுவொன்றும் தேசதுரோகமில்லை, தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Barari January 14, 2010 at 6:32 PM  

neengal poi hindi karppathai yaar kaiyayai pidiththu thaduththaarkal.eththanaiyo veli naattu mozikalai tamilnaattil katru kodukkiraarkal appadi hindiyayum karkka vendiyathu thaane.yarum thadukka povathillai.kattaaya paduththi karkka solvathai thaan ethirkkiraarkal.

வெற்றி-[க்]-கதிரவன் January 14, 2010 at 9:24 PM  

யோவ் என்று நான் சொன்னது ஜெகத்தீசனைத்தான் உங்களை அல்ல :) ஜெகதீசன் என்னுடைய நண்பர் இந்த விசயத்தில் எனக்கும் அவருக்கும் ஒரே கருத்துதான். அவரும் சிங்கையில் தான் இருக்கிறார் ( வீனபோனவர்கள் தான் சிங்கையில் இருகிறோமோ என்னவோ :)

உங்கள் பின்னூட்டத்தில் இருந்த தெளிவு பதிவில் இல்லை நான் பயன் படுத்திய சொற்கள் உங்களுக்கு வருத்தம் கொடுத்திருந்தால் அதற்க்கு என் வருத்தங்கள்,
//இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் //

இந்த சொல்லை நீங்கள் தெய்வீக சொல்லாக பார்க்கும் பட்சத்தில் என்னுடைய பில்டப் உங்களுக்கு இழிச்சொல்லகதான் தெரியும் :)

இங்கு யாரும் இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.

இந்தியாவில் நாற்ப்பது சதவிகிதம் பேசும் ஒரு மொழியை மீதி அறுபது சதவிகிதம் மக்கள் மீது திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

நாட்டுல காக்கத்தான் அதிகம் தேசிய பறவை காக்கவா ?,

ஆங்கிலேயனால்தான் நாம் இந்தியர்கள் என்பவர்களாகிவிட்டோம், அவன் வரவில்லை எனில் தனி தனி நாடுதானே ?
ஒண்ணா சேத்தவன் மொழியதானே பொது மொழியாக்கவேண்டும். அதவுட்டுபுட்டு எவன் ஊட்டு மொழியையோ நான் படிக்கணுமாம் எந்த விதத்தில் ஞாயம் ?

நாம் இந்தி ஆங்கிலம் என்று நம் தமிழுடன் மூன்று மொழியை கற்பதற்கு பதிலாக அவர்களும் ஆங்கிலம் கற்க்கட்டுமே, ஆங்கிலம் என்பதும் ஒரு மொழிதானே ? படிக்காதவனும் கற்கலாமே அதில் என்ன தடை,

அவன் ஒரு மொழிய படிப்பானாம் நாங்க மூணு மொழிய படிக்கணுமாம், என்ன கூத்து இது ?

சரி இந்தி படிக்காத தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் இந்தி பேசும் மாநிலங்களைவிட அதிகமாகத்தானே இருகின்றது. எந்த விதத்தில் குறைந்துவிட்டோம் ?

இந்திய பேசி பேசி வடக்கில் பலரோட தாய்மொழி இந்தியாகிவிட்ட கதை உங்களுக்கு தெரியாது போலும், தாத்தா பேசின மொழிய பேரன் அங்க பேசாததால் இன்னைக்கு பேரனின் தாய்மொழி ஹிந்தி. மொழி அழியாது என்ற உங்கள் கருத்து தவறு.

தமிழ்நாட்டிலிருந்து வடக்கே சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? இரண்டு மூன்று சதவிகிதம் தான் இருக்கும் அவர்களுக்காக மீதி தொண்ணூற்றி எட்டு சதவிகிதம் தேவையில்லாமல் இந்தியை படிக்கவேண்டுமா ? ஏற்கனவே குழந்தைகளுக்கு பாடசுமை அதிகம் என்று கருத்து நிலவுகிறது.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மட்டும் இந்தி படிகிராங்கன்னு சொல்லுவது அறியாமையின் வெளிப்பாடு , யார் வேண்டுமென்றாலும் எந்த மொழியையும் படிக்கலாம் தமிழகத்தில் அதற்க்கு தடையில்லை, அரசியல்வாதியின் பிள்ளைகள் டெல்லியை மைய்யமாக கொண்டு படிக்கிறார்கள். உங்களுக்கு தேவை என்றால் நீங்களும் படிக்கலாமே.

வெற்றி-[க்]-கதிரவன் January 14, 2010 at 9:24 PM  

பேச்சு வழக்கில் இந்தியை ஒரு மாதத்திற்குள் சமாளிப்பதற்கு கற்றுக்கொள்ளலாம், அத போய் பன்னிரண்டு வருடம் படிப்பது நேரம், பணம் என்று எல்லாம் வீண். வேண்டும் என்றால் இந்தி பிரச்சார சபா வில் சேர்ந்து படித்துக்கொள்ளலாமே ( என்னுடைய காசில், எங்கள் மக்கள் கட்டும் காசில் ஊராவூட்டு மொழியை கற்றுகொடுப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை )

" வென் யு ஆர் இன் ரோம் பி லைகிய ரோமானியன்" நான் வட இந்தியாவிற்கு சென்றால் இந்தி பேசுவது போல அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ் பேசட்டுமே"

பெங்களூரை விரும்புவதற்கு மொழி முதல் காரணமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை, வெயிலின் அளவு சென்னையை ஒப்பிடும் பொழுது மிக குறைவு அது தான் முதல் காரணமாக இருக்க கூடும்.

நான் வட இந்தியாவில் இருந்த பொழுது முதல் ஒரு வருடம் அனைவரிடத்திலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசினேன் ( எனக்கு இந்தி எழுத படிக்க தெரியும், அலுவலகத்தில் இந்தியில் பேசவேண்டும் என்ற தேவையை நான் உருவாக்கிக்கொள்ளவில்லை, இது உங்கள் கையில் தான் இருக்கிறது) ,உங்கள் ப்ராஜெக்ட் பற்றி பேசும் பொழுது அவர்கள் இந்தியில் பேசியதே தவறு நீங்கள் உங்கள் மீது தவறிருப்பதாக நினைப்பது அறியாமையின் வெளிப்பாடு.

சேர்மன் போகபோரிங்கன்னா சேர்மன் கற்றுக்கொள்ளுங்கள் , ஸ்பெயின் போறிங்கன்னா ஸ்பானிஷ் கத்துக்குங்க எது தேவையோ அதை கற்றுக்கொண்டாலே போதும் கண்டத தேவ இல்லாம கர்க்கவேண்டாம், அதே போல் ஒரு மொழியை மட்டும் முன்னிலை படுத்துவதன் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும், ஆங்கிலமும் அலுவல் மொழிதானே அதை ஏன் படிக்க
சொல்வதில்லை (இந்தியை ஒப்பிடும் பொழுது) நம் மத்தியரசு, வரவன் போறவன் எல்லாம் அவன் தாய்மொழியை படிக்கசொல்லுவான் நாம படிக்கணும் ????,

கொடுத்த வலைபூக்க்களில் சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்கள் நான் "உங்கள போல ஆளுங்கள்" என்று எழுதியதன் அர்த்தம் விளங்கும்.

அரவேக்காடு முழுவேக்காடு என்று எழுதாமல் ஆழமாக யோசித்து பாருங்கள், இந்தியா என்ற நாட்டில் பிறந்த அனைவரும் சமம் தானே பிறகு எதற்கு இந்திய மொழிகளில் இந்தி மட்டும் அலுவல் மொழியாக இருக்கிறது மற்றவர்களின் மொழி ????????????

எனக்கு இந்த உலகத்தை கற்றுக்கொடுத்தது தமிழ், மற்ற நாடுகளுக்கு செல்லும்பொழுது பயன்படும் கடவுசீட்டில்கூட அந்த மொழி இல்லை எவனோ ஒருவனின் மொழி (இந்தி) மட்டும் இருப்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் ?


தேசியமொழி இந்தி தெரியாதா ( தேசிய மொழி இல்லை என்பது வேறு விசயம் ) என்று கேட்பவரிடம், இந்திக்கு இருக்கும் அதே உரிமை ஆங்கிலத்திற்கும் தானே இருக்கிறது, ஆகிலத்தில் பேசலாமே என்று கூறுங்கள் :)))

இந்தி மட்டும் அல்ல எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் நமக்கு தேவைப்படும் என்றால்

இனிய தமிழ் புத்தாண்டு / தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

வாழ்க தமிழன்னை

Unknown January 14, 2010 at 9:31 PM  
This comment has been removed by the author.
Unknown January 14, 2010 at 9:33 PM  

Lot of north Indians in chennai are surprised to see our english skill, I heard them saying our petty shop and auto drivers speak better english then their north Indian counterparts, and I don't think you will have any difficulties in Chennai if you speak English.All MNC software companies are only encouraging English. Please retrospect on whether people are logging because of communication skill of language skill :)

May be thanks to the fact that we didn't learn Hindi, we are doing well in english.

மதன் January 15, 2010 at 4:50 PM  

வாங்க ஜோ!

ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று அலுவலகத்தில் நான் கேட்காமலில்லை. முன்பிருந்த அலுவலகத்தில் எனக்கு இந்தி தெரியாது என்று அனைவருக்கும் தெரியும்.

இப்போதிருக்கும் அலுவலகம் புதியது என்பதால், இந்தி தெரியாது என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

அதிலுமிந்த ஆரம்பத்தில் KT கொடுத்தல், கூட்டிக் கொடுத்தல் என்று பல சடங்குகள் இருக்கின்றனவே நம் சாஃப்ட்வேர் துறையில். ஒவ்வொரு KTயின் போதும், ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டியிருக்கிறது! :(

நான் கவலைப்படாமல் ஆங்கிலத்தில் பேசச் சொல்லிவிடுவேன் ஜோ. இங்கே இப்போதுதான் கல்லூரியிலிருந்து கார்ப்பரேட்டுக்குள் வந்திருக்கும் ஒருவர் இருக்கிறார். பாவம். 'ஆங்கிலத்தில் பேசுங்கள்' என்று 'சீனியர்களிடம்' சொல்வதற்கு பயமாக இருப்பதாக என்னிடம் சொன்னான். சங்கடமாகப் போய்விட்டது.

அதெல்லாம் ஒன்றும் தவறில்லை. நீ சொல்லித்தான் ஆக வேண்டும் என்று அவனுக்கு தைரியம் சொன்னேன்.

இந்தி கற்றுக் கொண்டால்தான் பதவி உயர்வு கிடைக்கும் என்றில்லை. ஆனால் கிடைக்கப்போகும் பதவி உயர்வுக்கு நாமும் முழுத் திறனுடன் போட்டியிட அது உதவும்.

நன்றி ஜோ. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

@Barari - நன்றி.

@கதிர் - ரைட்டு.. விடுங்க!

@James - நன்றி.

வெற்றி-[க்]-கதிரவன் January 15, 2010 at 6:41 PM  

//James Arputha Raj, January 14, 2010 9:33 PM
Lot of north Indians in chennai are surprised to see our english skill, I heard them saying our petty shop and auto drivers speak better english then their north Indian counterparts, and I don't think you will have any difficulties in Chennai if you speak English.All MNC software companies are only encouraging English. Please retrospect on whether people are logging because of communication skill of language skill :)

May be thanks to the fact that we didn't learn Hindi, we are doing well in english.
//

100 % உண்மை, மென்பொருள் துறையில் வடக்கத்தியரை விட தெற்க்கத்தியரின் ஆதிக்கம் தான் அதிகம், சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தால் சிரமபடமாடார்கள் ஆனால் வடக்கே படும் பாடு நேருல பாத்தாதான் தெரியும், :)))

***
மதன்,

ரைட்டுன்னு சொன்னா என் கருத்தை ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்க கூடும் :)))
இங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போடுறதுக்கு காரணம் மதன் என்ற ஒரு பதிவருக்காக இல்லை, இன்று தமிழகத்தில் பலரும் இந்தி படிகாததால குறைந்து போகிட்டோம் அரசியல்வாதிகள் கெடுத்துட்டானுகன்னு நினைக்குறாங்க,
இந்த மாதரி பதிவை படித்தால் மேலும் அந்த எண்ணம் அதிகமாகிவிடும் அதற்குத்தான்.

மதன் January 15, 2010 at 7:23 PM  

கதிர் -

’ஆப்பீஸ்’ல வேல அதிகம்-ங்கறதால உங்களுக்கு விரிவாக பதில் சொல்ல முடியவில்லை.

அவசரமாக ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதால், வந்து பின்னூட்டம் போடுகிறேன். இல்லாவிட்டால் பஸ் போய்விடும்! :)

Mohan January 21, 2010 at 1:13 PM  

மதன்! நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறதென்றால்,தமிழ் நாட்டு மக்கள் வட இந்தியாவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சென்றால் அங்கு தமிழர்கள் பொதுவாக‌ சாப்பிடும் சாப்பாடு கிடைக்காமலும், வட இந்திய/அமெரிக்கர்களின் உணவு முறையும் பிடிக்காமல் சிரமப்படுகிறார்கள்.அதனால் தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மதிய உணவுத் திட்டத்தில் 'Burger' சேர்ப்பது நன்றாக இருக்கும் என்று கூறுவது போல் உள்ளது.

Aravindan January 23, 2010 at 9:59 AM  

Hi na.. Gud one... Bt whats done is done.. The true reasons behind the Hindi edhirpu porattam was learnt by us only on retrospective.. Coming to think of it, to stop people from learning another language is degenerative... It never helps progress...

shaan February 3, 2010 at 1:34 AM  

பார்த்தீர்களா, பெங்களூரில் வேலைப் பார்க்கும் நீங்கள் "எனக்கு கன்னடம் தெரியவில்லையே" என்று வருத்தப்படாமல் "இந்தி தெரியவில்லையே" என்று வருத்தப்படுகிறீர்கள். கொஞ்சம் இந்தியை உள்ளே விட்டதற்கே பெங்களூர் இந்தப் பாடுபடுகிறது. மும்பை மராத்தியர்கள் கைவிட்டு போயே போய் விட்டது. ஒரு மராத்தியர் எழுதுகிறார் - "எனது வயதான தாத்தா கடைக்குச் சென்ற போது அவர் மராத்தியில் பேசியதற்கு கடைக்காரன் இந்தி தெரியாதா என்ன என்று கேட்டு ஏளனமாகக் கேட்டு சிரித்தான். இப்போது எனது தாத்தா எம்.என்.எஸ் செய்வது சரி என்று கூறுகிறார்". இதில் வட இந்தியர்களை குறை சொல்வதை விட மராத்தியர்களை தான் குறை கூற வேண்டும். ஏனென்றால் என்று இந்தி திணிக்கப்பட்டபோது இந்தி கற்றால் இந்தியாவில் எங்கும் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று அதனை அனுமதித்தனர், இன்று படுகின்றனர். தமிழ்நாட்டில் கூட இந்தி படிக்கக்கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே. உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நான் கூட 8ஆம் வகுப்பு வரை இந்தியை ஒரு பாடமாகப் படித்தேன். ஆனால் அதனால் ஒரு பைசா பலனில்லை. ஏனென்றால் பாடபுத்தகத்தில் படிக்கும் இந்தியும் மக்கள் பொதுவாக பேசும் இந்தியும் வேறாக இருக்கிறது. மற்றபடி ஏதோ ஒரு சிங் கேட்டுவிட்டார் என்பதற்காகவெல்லாம் இந்தி படிக்கவேண்டும் என்று சொல்வது குழந்தைத்தனம்.

-/சுடலை மாடன்/- February 3, 2010 at 5:39 AM  

இது போன்ற கேள்விகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டேயிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு (2004ல்) திண்ணை இணைய இதழில் வந்த விவாதத்தின் போது நரேந்திரன் என்பவருக்கு நான் அளித்த பதில். நேரமின்மையாலும், பின்னூட்டத்தில் 4096 எழுத்துக்களுக்கு மேலாக அனுமதிப்பதில்லையென்பதால் கொஞ்சம் வெட்டி ஒட்டுகிறேன். முழு விவாதத்தையும் படிக்க வேண்டுமென்றால் திண்ணையில் தேடிப் பார்க்கலாம்.

----------------
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20401082&format=html

சவாலாகக் கேட்கிறேன் கூறுங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை கிடைத்த பின்னும், இந்தி தெரியாத ஒரே காரணத்தால் அங்கு செல்லாத ஒரு தமிழரின் பெயரையும், முகவரியையும் சொல்லுங்கள்.

வட இந்தியாவுக்கு வேலை செய்யச் செல்லும் தமிழர் இந்தி தெரியாமல் முதல் ஒரு வருடம் சிரமப்பட்டிருக்கலாம். மற்ற தென் மாநிலத்தவரும் இந்தி நன்றாகத் தெரியாததால் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதை நான் டெல்லியில் பணியாற்றிய பொழுது கூறக்கேட்டிருக்கிறேன். தமிழர்களை விட கொஞ்சம் குறைவாகச் சிரமப்பட்டிருப்பர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான தமிழர், குறிப்பாக ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்கள், ஓரிரு வருடங்களுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூட பார்த்தறியாத நான், டெல்லிக்குச் சென்ற ஒரே வருடத்தில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்து கொண்டேன், பேசுவதையும் ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தும் உச்சரிப்பு வேறுபாட்டால் அமெரிக்காவில் கூட முதல் வருடம் நாம் சிரமப் பட்டிருக்கிறோம். பின்னால் போகப் போக எல்லாம் பழகிவிடும்.

உலக வரலாற்றில் மொழி, பண்பாடு போன்றவற்றால் முற்றிலும் வேறுபட்ட நாடுகளுக்குக் கூட பிழைப்பைத் தேடி எளிதாக இடம் பெயர்ந்து சென்ற இனங்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. (Guilmoto, C.Z., 1993. The Tamil Migration Cycle, 1830-1950, Economic and Political Weekly, January 16-23, 111-120.) இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணிபுரியும் தமிழர்கள் யாருமே தமிழ்நாட்டில் இந்தி மற்றும் ஏனைய மொழிகளைத் கற்றுக் கொண்டவர்களில்லை.

இந்தியென்ன எந்தவொரு மாற்று மொழியைத் கற்றுக் கொள்வதிலும் நிறைய நன்மைகளுண்டு, தீமைகள் எதுவுமேயில்லை என்பதை அனைவரும் அறிவர். அதற்கான எந்தத் தடையும் தமிழ் நாட்டிலில்லை. குறைந்தபட்ச செயல்பாட்டுக்கான இந்தி கற்க வேண்டும் என்ற ஆவல் உண்மையிலேயே இருந்தால் 40 ரூபாய்க்கு கிடைக்கும் 40 நாள் மொழிக்கல்விப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே போதும். வட நாட்டுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்கள் மக்கள் தொகையில் 1% கூடத் தேறமாட்டார்கள். அந்த 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களைக் காரணம் காட்டி அனைத்து மக்களின் வரிப்பணத்தில் தேவையோ இல்லையோ, விருப்பமோ இல்லையோ எல்லாரையும் இந்தி படிக்க வைக்க வேண்டுமா?

தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தங்களுடைய தனித்தன்மையை இன்னும் இழக்காமலிருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும், அந்த எழுச்சிதான் இந்திவெறி பிடித்தவர்களின் வேகத்தைத் தடுத்தி நிறுத்தியது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும் முன்னாள் துணைவேந்தருமான யூ.ஆர்.அனந்தமூர்த்தி. அது தற்பொழுது என் நினைவுக்கு வருகிறது.

உண்மையிலேயே இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அக்கறையிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களை விட பல வகைகளிலும் பின்தங்கியிருக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் அப்பாவி ஏழை எளிய மக்களின் எழுத்தறிவுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிக்க வாரி வழங்கும் பெரும்பணத்தைச் செலவழிக்கலாம். மீதிப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ விருப்பப்படும் எந்த இந்தியரானாலும், தங்களைப் புது இடங்களுக்குத் தயார் செய்ய தேவைப்படும் பொழுது மட்டும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இலவசமாகக் கற்றுத் தர எல்லா மாநிலங்களிலும் மொழி மையங்களை ஏற்படுத்தலாம்.

---

நன்றி - சொ.சங்கரபாண்டி

  ©Template by Dicas Blogger.

TOPO