Thursday, December 31, 2009

என் முதல் கவிதைத் தொகுதி!

ஆண்டின் இறுதி நாளென்பதாலோ என்னவோ வானம் துளிர்த்து விட்டிருக்கிறது இந்த மாலையில். மென் சில்லிடலுடன் வெளியே இறைந்து கிடக்கும் மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பெங்களூர் வானில் சற்று மிதந்து கிடந்தால் தேவலாம் போல!

வழக்கம் போல 'எனக்கு எழுத நேரமே இருப்பதில்லை' மற்றும் இன்ன பிற புலம்பல்களை விடுத்து, மிகுந்த மகிழ்வுடனும், நிறைந்த மனதுடனும் எழுதத் துவங்குகிறேன். நாட்களின் இறுதி மற்றும் துவக்கம் என்பன போன்ற செயற்கை செய்கைகளினின்று சற்று பக்குவப்பட்டு, ஒவ்வொரு நாளும் இதே மனோநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.

என் மகிழ்வுக்கும், நிறைவுக்குமான காரணிகளைப் போட்டுடைப்பதை விட்டு, விட்டு, கண்ட வர்ணனைகளில் கவனம் செலுத்தும் விரல்களின் மேல் மெலிதாய் கோபம் வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் பிறக்கப் போகும் புத்தாண்டை வரவேற்க இன்முகம் காட்டுவதற்காகவும், என் முதல் கவிதைத் தொகுதியான 'உறங்கி விழித்த வார்த்தைகள்' தயாராகி வருகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்தான் எனக்கிந்த மகிழ்ச்சி! ஆனாலும் உள்ளுக்குள் சற்று பயமாகவுள்ளது.

ஆம். ஏதோ விளையாட்டாய் வலையில் எழுதத் துவங்கினேன். என் அன்றாட அவதானிப்புகள், சமூகக் காழ்ப்புகள், கவிதைக்கே உரித்தான சுய புலம்பல்கள் என்று நீளும் எல்லாவற்றையும் கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். கட்டற்ற இணையம் தரும் சுதந்திரத்தில் எனக்கு வாய்க்கப் பெற்ற இந்த மனோநிலையை சற்று தாமதமாகவே புரிந்து கொண்டேன்.

மிக விரைவாக முடிவு செய்யப்பெற்று, உருக்கொண்டு, புத்தகமும் வெளிவரும் சமயத்தில், என் பதற்றம் ஏனோ சற்று கூடியது. நான் எழுதியிருப்பதெல்லாம் கவிதை என்ற பரிமாணத்தில் அடங்குமா என்ற சந்தேகம் கூடத் தோன்றியது.

கூர் மிகுந்த இலக்கிய வெளியின் விமர்சனக் கத்திகளை சமாளிக்கும் அளவுக்கு, தயார் செய்து கொண்டு களமிறங்கியிருக்கவில்லையோ என்ற ஐயப்பாடுதான் இந்தக் குழப்பத்தின் துவக்கப் புள்ளி.

இந்த இருதலைக் கொள்ளி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், இத்தொகுப்புக்கு
அணிந்துரை எழுதியிருக்கும் வா.மணிகண்டன் அவர்கள். ‘விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே; கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை’ என்று ஆரம்பத்திலேயே அட்டகாசமாகப் போட்டுடைத்திருக்கும் அவரின் பார்வை, மிக நேர்த்தியான, சார்புகளில்லாத சமநிலை பொருந்திய ஒன்றாகக் கருதுகிறேன்.

என் கவிதைகள் என் குழந்தைகள். அவற்றில் பிழை இருந்தாலும் அது என்னுடையதாக இருக்கட்டும். பக்கத்து வீட்டுக்காரனுடையதாக இல்லாத வரை மகிழ்வே. நிறையென்று ஏதேனும் இருந்தால் அது பாரதி முதல் பிரமிள் வரையான மூதாதையர்களின் சாயல் என்று நினைத்துக் கொள்ளலாம்!

’இந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன’ என்ற நேர்மையின் உச்சத்தில் வெளிப்பட்ட வா.மணிகண்டனின் கருத்துடன் என் முதல் தொகுப்பு வெளிவருவது, என் நேர்மைக்கும் ’கொஞ்சூண்டு’ கம்பீரமூட்டுகிறது.

என் குழப்பம் தீர்த்து வைத்த வா.மணிகண்டன் மற்றும் புத்தகம் வெளிவர உதவிகரமாயிருந்த சகோதரி
உயிரோடை லாவண்யா மற்றும் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும், வலை வழி வாசித்து, பின்னூட்டமிட்டு, ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! சென்னையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தகம் கிடைக்கும்.

சமீபத்தில் நான் நிறுவனம் மாறவிருப்பதாக
எழுதியிருந்தேன். இப்பொழுது மாறியும் விட்டேன். விஷயம் என்னவென்றால், நிறுவன மாற்றத்தால் டிசம்பர் மாதம் சம்பளம் வராததால், கையில் காலணா இல்லை. காசில்லாத காரணத்துக்கே புத்தகப் பதிப்பை நிறுத்தி விட உத்தேசித்தேன். அதைத் தடுத்து, நல்ல புத்தி சொல்லி, புத்தக வெளியீட்டை ஊக்கப்படுத்திய தாக்ஷாயணிக்கும், சமயத்தில் கடன் தந்து உதவிய என் சகோதரி என்பதற்கும் மேலான காயத்ரி மற்றும் நண்பன் என்பதற்கும் மேலான பரத், ஆகிய அனைவருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் நன்றியெல்லாம் சொல்லப் போவதில்லை. வெறும் நன்றி சொல்லித் தீர்க்க முடியாதென்பதால், வாழ்ந்து நிறைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

அனைவருக்கும் இந்தச் சிறியேனின், மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



11 மறுமொழிகள்:

na.jothi January 1, 2010 at 12:25 AM  

வாழ்த்துக்கள் மதன்
புத்தாண்டுக்கும் கவிதை தொகுப்பிற்கும்

அன்புடன்
ஜோதி

மதன் January 1, 2010 at 7:48 AM  

மிக்க நன்றி ஜோதி! தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

Ashok D January 1, 2010 at 12:14 PM  

வாழ்ந்து நிறைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)

வாழ்த்துகள்

கதிரவன் January 1, 2010 at 2:03 PM  

மிக்க மகிழ்ச்சி மதன்

வாழ்த்துக்கள் - இதற்கும், இன்னும் பல கவிதைத்தொகுதிகள் படைக்கவும் சேர்த்து !!

மதன் January 1, 2010 at 6:27 PM  

அஷோக் மற்றும் கதிரவன் - நன்றி! தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Joe January 1, 2010 at 8:28 PM  

வாழ்த்துக்கள் மதன்!
கவிதைத் தொகுப்பு பெருமளவில் விற்கும் என்று நம்புகிறேன். இதையும் தாண்டி நீங்கள் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்!

கடைசி மாதச் சம்பளம் வரலையா? மென்பொருள் நிறுவனங்கள் பலவும், ஏன் இப்படி அற்பமாக நடந்து கொள்கிறார்கள்?

மதன் January 1, 2010 at 8:32 PM  

இல்லை ஜோ. அவர்கள் பாலிஸியின்படி கடைசி நாளிலிருந்து 21 நாட்கள் கழித்துதான் FFS எனப்படும் செட்டில்மெண்ட் தொகையை அளிப்பார்கள். அதுதான் பிரச்சினை. பத்தாததற்கு புது நிறுவனத்தின் ஒன்றரை மாத சம்பளம் பிப்ரவரி 2 தான் வருமாம். எல்லாம் நம் நேரம்! :)

மக்கள் தளபதி/Navanithan/ナパニ January 1, 2010 at 11:02 PM  

வாழ்த்துக்கள் நண்பா. (அப்படியே உங்க கையெழுத்து போட்டு ஒரு புத்தகத்தை அனுப்பி வையுங்க :-)

anujanya January 2, 2010 at 12:24 AM  

மணியின் பதிவு மூலம் உங்கள் கவிதைத் தொகுப்பு வருவதை அறிந்தேன். மிக மிக மகழ்ச்சி. இன்னும் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்.

புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.

அனுஜன்யா

மதன் January 3, 2010 at 10:49 PM  

ஷோபிகண்ணு - அன்புக்கு மிக்க நன்றி.

அனுஜன்யா - மணியின் பதிவில் தங்கள் பின்னூட்டம் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி அனு!

பா.ராஜாராம் January 3, 2010 at 11:28 PM  

சந்தோசமாய் இருக்கு மதன்!

வாழ்த்துக்கள்!

  ©Template by Dicas Blogger.

TOPO