Sunday, June 19, 2011

சாருவுடன் ஒரு சந்திப்பு - சில பதிவுகள்..இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாரு ஒருமுறை பெங்களூருக்கு வந்தார்.
ஏர்போர்ட் ரோடில் ஒரு ஹோட்டலில் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது. அன்றைக்கு என்று எனக்கு சரியான காய்ச்சல். செல்ல முடியவில்லை. பின்னர் அவர் தளத்தில் புகைப்படங்களைக் கண்டபோதுதான் அந்தப் பட்டு வேட்டிக்காகவாவது சென்றிருக்கலாமே என்றிருந்தது.

இந்த வாரத் துவக்கத்தில்தான் அறிவித்திருந்தார். பெங்களூரில் வாரக்கடைசியில் ஒரு சந்திப்பு உள்ளதென்று. இம்முறை தவறவிடக்கூடாது என்பதற்கான என் முயற்சிகள் வீண் போகவில்லை. ஜூன் 18 சனிக்கிழமை மாலை 5 மணிக்கெல்லாம் சரியாகக் கிளம்பி விட்டேன். 5 மணிக்குத்தான் நிகழ்வு துவங்குகிறது. goobe's புத்தகக் கடையைக் கண்டுபிடித்துப் போய் சேரும்போது மணி ஐந்தரை.

சாலையிலிருந்து தாழ்வாக இறங்கினால் அந்தக் கடை இருக்கிறது. படிகளில் இறங்கும்போதே மெலிதாய் எனக்குள்ளே ஒரு பரபரப்பு. எத்தனை பக்கங்கள் படித்திருப்போம்.. வாசகனும், எழுத்தாளரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றி. எனக்கிதுதான் முதல் இலக்கியக் கூட்டம். பெங்களூர் வாசத்தின் காரணமாக நான் தியாகம் செய்ய நேர்ந்த ஒன்றே ஒன்று இலக்கியக் கூட்டங்களில் பங்குகொள்ள முடியாமலிருப்பதுதான். இறங்கிக் கொண்டே இருக்கையிலேயே என்னால் பார்க்க முடிந்தது. மையமாய் கையில் புத்தகத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இருபதிலிருந்து முப்பது பேர் இருக்கலாம். உட்கார இடமில்லையாதலால் நின்று கொண்டிருந்த சக நேயர்களுடன் சங்கமிக்க நேர்ந்தது.

வீடியோவில் அவர் பேசுவதை பார்க்கும் போதெல்லாம் மனிதர் எழுத்தில் எப்படி வெளிப்படுவாரோ, அச்சசல் அதேபோலத்தான் பேசுகிறாரே என்று வியந்திருக்கிறேன். சமீபமாக எழுதியவற்றில் சிலவும், பேசுகையில் வெளிப்படுவதுண்டு. இன்றும் அது நிகழ்ந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. தமிழ் புத்தகங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கையில் நேரும் நடைமுறைப் பிரச்சினையைப் பற்றியது அது. 'மொழிபெயர்ப்பாளர்களுக்கு தற்கால ஃப்ரெஞ்சு அல்லது ஜெர்மன் இலக்கியத்தைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. 100 ஆண்டுகள் பின் தங்கியவர்கள் மொழிபெயர்ப்பதால்தான் தமிழ் படைப்புகள் மேலை மொழிகளில் சோபிப்பதில்லை' என்ற கருத்து ஒரு உதாரணம்.

ஸீரோ டிகிரியைப் பற்றி சாரு பேசினார். வாசகர்கள் கேள்வி கேட்டனர். ஸீரோ டிகிரிக்கு, தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில் நேர்ந்த எதிர்வினைகள் பற்றி சில கேள்விகள். பின்நவீனத்துவம் குறித்து பல கேள்விகள். அதில் நண்பர் கார்த்தி கேட்ட மார்க்ஸியம் மற்றும் போஸ்ட் மார்டனிஸம் குறித்த கேள்விக்கு, மார்க்ஸியத்தை ஆண் பாலினம் என்றும் (பிரமிட் வடிவில், ஒரே சீராக வலுப்பெற்று, தலைமைப் பதவிக்கு வந்து, அதோடு முடிந்து/வீழ்ந்து விடுதல். Ejaculation!) போஸ்ட் மார்டனிஸத்தை பெண் பாலினம் என்றும் (சுழல் வடிவில், முடிவும், துவக்கமும், மையமும் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருப்பது. Orgasm!) விளக்கியது truly அட்டகாசம்.

போஸ்ட் மார்டனிஸமானது civil society அல்லது human society, எதற்குப் பயன்படுகிறது என்பதும் technically நல்லதொரு கேள்வி. எந்தவொரு சமூகப் பிரச்சினைக்கும் தெருவில் இறங்கிப் போராட போஸ்ட் மார்டனிஸத்தில் வழியில்லையே என்ற ஆதங்கம் இந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்தது நண்பர்கள் செந்தில் மற்றும் கார்த்தியுடன் பின்னர் உரையாடுகையில் புரிய வந்தது. இந்தக் கேள்விக்கான பதில் தன்னிடம் இல்லை என்றவர், பின்னர் அவரால் இயன்ற வரை தன் கருத்தைக் கூறினார்.

நானும் ஒரு கேள்வி கேட்டேன். எழுத்தாளனாக ஆக வேண்டுமென்பதற்காக நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு உக்கிரமாகும் போது, எழுதப்பட்டிருக்கும் இத்தனைக்கும் மேல் நானெதை சாதிக்கப் போகிறேன் என்ற அயற்சியிலிருந்து மீள்வதைப் பற்றி.

அவர் பதில்களிலேயே படு ஷார்ப்பான பதில் இந்தக் கேள்விக்குத்தான். You can't learn sex by reading books. இதான் என் பதில் என்றார்.

ரோமியோ ஜூலியட்டை முத்தமிட்ட போது, 'you kiss by the book?' என்று ஜூலியட் ஏளனம் செய்தாளாம். அவள் எதிர்பார்த்த முத்தத்தைப் போல எழுத வேண்டும் என்ற தீ உன் குருதியில், மூளையில் கனன்று கொண்டிருக்க வேண்டுமென்பதன் stylish one linerதான் You can't learn sex by reading books என்பது. புரிய வைத்ததும் அவர் கடனே.

குடித்திருந்தார் என்பதையும் அவரேதான் சொன்னார். கேரளாவில் அவர் பாப்புலாரிட்டி பற்றிய கேள்விக்கு, சற்று நேரம் முன்பு, பாரில் குடித்துக் கொண்டிருந்த போது அங்கு பணிபுரிபவர் அவர் காலில் வந்து விழுந்ததையும், அவர் ஒரு மலையாளி என்பதையும் பகிர்ந்து கொள்வதன் பொருட்டு.

கேள்வி பதில் செஷன் முடிந்த பிற்பாடு, புத்தகம் வாங்கிய வாசகர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். 'மதனுக்கு' என்று தமிழில் கையெழுத்து எனக்கு மட்டும்தான் வாய்த்தது. தான் கையில் வைத்திருந்த மற்றும் இருந்த ஒரே ஒரு தமிழ் பதிப்பை நண்பர் பாலசுப்ரமணியம் எனக்கே கொடுத்தார். அவரிடம் இன்னொன்று இருக்கிறதாம். நன்றிகள் பல.

முகஸ்துதி எல்லாம் இல்லை. எனக்கு என்ன வருகிறதோ அதைத்தான் எழுதுவேன் எப்பொழுதும்.  மனிதரின் ஒவ்வொரு அசைவிலும் அவரிடமிருக்கும் கனிவு என் வழியாகப் பாய்ந்து ஊடுருவிப் பின்னாலிருந்த புத்தக ரேக்குகளைத் தகர்த்துக் கொண்டேயிருந்தது. கேள்விகளுக்குக் காதைக் கூர்தீட்டுகையில், பதில் சொல்கையில், நம்மிடம் பேசுகையில் என்றெப்பொழுதும் கனிவே நம் காட்சி. இவை போன்ற நேரங்களில், ஒருவர் எழுதுவதை வைத்து, அவர் இந்த மாதிரி மனிதர்தான் என்று மேலோட்டமாக முடிவு செய்வதிலிருக்கும் மடமை பொட்டிலடித்தாற் போல் விளங்கும். எனக்கு அவர் கனிவானவர், அன்பானவர் என்பது தெரியும். ஆனால் இந்த அளவுக்கு என்பதுதான் ஆச்சர்யம்.

நிகழ்வு முடிந்த பின்னர், நண்பர் ராஜேஷ் அவர் வண்டியை எடுத்து வரச் சென்றிருக்கையில் (அவருடன் தான் சாரு செல்ல வேண்டும்), ஒரு இரண்டு நிமிடம் சாருவும், நானும் மட்டும். அந்த நிமிடங்களின் கனம் இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. That was something really special.

ராஜேஷ் வந்தவுடன், டூவீலரில் பின்னாடி உட்கார்ந்து, பை சொல்லிக் கிளம்பி விட்டார். மிஷல் ஃபூக்கோ, சார்த்தர், லெனின், ரோலான் பாக் அனைவரும் பெங்களூரின் குளிர் காற்றில், மிதமான பீர் வாசத்துடன் கரையத் துவங்கினார்கள்.0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO