Friday, May 20, 2011

கலிலியோவிற்கு ஏன் விஷம் கொடுத்தோம்?


சில விஷயங்களுக்கான காரண காரியங்கள் நம்மால் அறிய முடியாதவையாக இருக்கும். ஆனால் மனம் அதனையே சுற்றிச் சுற்றி வரும். நாம் நம் வாழ்வின் இரு வேறு தருணங்களில் சந்திக்க நேர்ந்த இருவருக்கு, ஒரே மாதிரியான முக ஜாடை இருப்பது ஏனோ என்னை, அதன் அனிச்சைத் தன்மையை உணரச் செய்யாமல், செய்யும் தொந்தரவு அதிகமாக இருக்கிறது.

மடிவாலாவில் கல்லடா ட்ராவல்ஸுக்கு அருகில் A1 Travelsன் அலுவலகம் உள்ளது. இங்கே இருக்கும் மது என்ற மனிதரை, கோவை செல்ல பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யச் செல்லும் வகையில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.

ஒரு நாள் உடல் நலம் சரியில்லாமல், மருத்துவரைக் கண்டுவிட்டு, மாத்திரை வாங்குவதற்காக எங்கள் ஏரியாவில் இருக்கும் பிரேமா மெடிக்கல்ஸில் மேற்சொன்ன மதுவைக் கண்டேன். அவரிடம் சென்று, சம்பிரதாயமாகச் சிரித்து, மாத்திரை கேட்டேன். ஹேகிதீரா என்றேன். அவர் கண்களிலோ குழப்பம் மிதந்தது. என்னை அவருக்குத் தெரியவில்லை என்ற பரம ரகசியம் ஒருவழியாக எனக்குப் புரிந்த பின்னர், A1 Travelsல் தானே வேலை பார்க்கிறீர்கள் என்றதற்கு அவர் சிரித்தார். இல்லையென்றார்.

என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களிருவரும் அவ்வளவு நெருக்கமான முக வெட்டுடையவர்கள். வெறும் 2 கிமீ தொலைவில் வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர்கள், இன்னொருவரைக் கண்டு இதுவரை எந்தக் குழப்பமும் நேரவில்லையென்பது மிக்க ஆச்சர்யமூட்டியது. இன்றைக்கும் அவரைப் பார்த்தால் இவரையும், இவரைப் பார்த்தால் அவரையும் நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. தனியாகச் சிரித்துக் கொள்கிறேன்.

இவை போன்ற நிகழ்வுகள் எல்லோருக்குமே நிகழ்பவைதானெனினும், நான் மட்டும் ஏனிப்படிக் காணாததைக் கண்டது போல் உணர்கிறேன் என்று தெரியவில்லை. இவர்களாவது பரவாயில்லை சாதாரணர்களாக வாழும் மிஸ்டர் பொதுஜனங்கள். அடுத்த கதையைக் கேளுங்கள்.

ஹாலிவுட் நட்சத்திரம் Matt Damonக்கும், WWE சூப்பர் ஸ்டார் John Cenaவுக்கும் என்னால் ஆறு வித்தியாசங்களைக் கண்டறிய இயலவில்லை. என்னைத் தவிர வேறு எவருக்கும் இது தோன்றினாற் போலும் இல்லை. வாசன் ஐக் கேருக்குத் தான் செல்ல வேண்டுமோ?




பிரபலங்களின் வரிசையில் இன்னொரு உதாரணம். இது ஓரளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஜோடி! ஹாலிவுட்டின் Tom Hanks-ம், பாலிவுட்டின் Aamir Khan-ம்.




அவ்வளவு ஏன். நம் பதிவுலக எழுத்தர், நண்பர் செல்வேந்திரனும், என் அலுவலகத்தில் பணிபுரியும் சோமுவும் ஒரே போன்றிருப்பதாகவும் பிரம்மையெனக்கு. 




இதுவரை மனுஷ்ய கணக்குகள் தாம். இனிதான் இருக்கின்றன தெய்வானுகூல மஹாத்மியங்கள்!

நான்காண்டுகளுக்கு முன்னர் JP நகரில் இருக்கும் ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் ப்ராசீனமானதொரு ஆலயம். அங்கே வரையப்பட்டிருந்த ஓவியங்களில் இருந்த ஒரு ராகவேந்திரர் என்னைப் போட்டுப் படுத்தியெடுத்தார். அது ஏனோ தெரியவில்லை. அந்த ராகவேந்திரரின் முகத்தில் நமது ரஜினிகாந்தின் சாயல் என் கண்களுக்கு மட்டும்தான் வழமை போலவே புலப்பட்டது.


ஏறக்குறைய இந்தப் படம் போலத்தான் அதுவுமிருந்தது. இணையத்தில் பிடித்தேன். நிச்சயமாக அந்தப் படம் வரையப்படும் போது ரஜினிகாந்த் பிறந்தே இருக்க மாட்டார். பின் எப்படி அவர் சாயல்? சரி போகட்டும். காக்காய் விழுக்காட்டிய பனம்பழம் என்றே வைத்துக் கொள்வோம். அது ஏன் ஒரு கமல்ஹாசனோ.. இல்லை இப்பூவுலகில் வசிக்கும் வேறொருவரோவன்றி, ரஜினிகாந்தின் சாயலாக அமைய வேண்டும்? நான் இங்கே கிடந்துழல வேண்டும்?

ரஜினிகாந்த் ஒரு தீவிர ராகவேந்திர பக்தர் என்பது உலகறிந்த விஷயந்தானே. இதற்கும், அந்தப் படத்தில் அவர் சாயலிருந்தமைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ?

ரஜினியின் ஒரு பேட்டியில் கேட்ட ஞாபகம். மந்த்ராலயமும், துங்கபத்ரா நதியும் தன் கனவில் வந்த பிறகுதான் தான் அங்கு சென்றதாகச் சொன்னார். ஒரு வேளை இதற்கும், என் குழப்பத்துக்கும் ஏதும் முடிச்சு இருக்குமா? ஸ்ஸ்ஸபா.. கண்ணைக் கட்டுகிறது போங்கள்.

ஒரே மாதிரி இருக்கும் பிரச்சினையை சற்றே பரணில் போடுவோம். நாம் வேறு வேறு சமயங்களில் சந்தித்த இரு மனிதர்கள், அவர்களிருவரும் வேறேதோ சூழலால், காரணத்தால் நண்பர்களாக இருப்பது இதுகாறும் கண்டது போல ஆச்சர்யத்தை அல்ல.. சுவாரஸ்யத்தைக் கிளப்புகிறது.

என்னுடைய நண்பனும், என்னுடைய வேறொரு நண்பனுடைய நண்பியும், சிறுவயது முதல் நண்பர்கள் என்பது ஆர்க்குட்டின் மூலமாகத் தெரிய வந்தது சில ஆண்டுகளுக்கு முன். அதாம்பா.. ம்யூச்சுவல் ஃப்ரெண்ஸ்!

இறுதியாய் ஒன்றேயொன்று.. என் சகோதரி, தன் கைத்தலம் பற்றக் கனாக் காணும் ஜானகிராமன் அவர்கள், அண்ணன் வா.மணிகண்டனின் கல்லூரி ஜூனியராம்!

இப்போது சொல்லுங்கள்..

உலகம் என்ன வடிவென்று சொன்னதற்காகக் கலிலியோவிற்கு விஷம் கொடுத்தோம்? :)



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO