Wednesday, May 18, 2011

மொழியும், மொழிதல் சார்ந்தும்..


ஒன்பது வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே அதிகமாக இருக்குமாம். எங்கோ படித்த ஞாபகம். அதற்குள்ளாகவே எத்தனை மொழிகளை முடியுமோ, அத்தனையையும் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டேனோ என்றெண்ணுகிறேன். ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்தல் என்பது எத்தனை சுவாரசியமான, உபயோகமான ஒரு செயலாக இருக்க முடியுமல்லவா?

தாய்மொழி தமிழ். தமிழ்வழிக் கல்வியென்பது ஒரு தடைக்கல்லாகி விடாமல், எப்படி எனக்கு ஆங்கிலம் தடையற வந்தது என்பது இன்றுவரை எனக்கிருக்கும் ஆச்சரியம். எம்பெருமான் ராமபிரானின் கருணையென்பதைத் தவிர வேறெதையும் காரணமாக சிந்திக்க சிந்தை ஒப்பவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக பெங்களூரில் வாசம் செய்வதன் காரணமாக மட்டுமல்ல. கொஞ்சம் ஆர்வமும் இருந்ததன் காரணமாக, கன்னடம் வருகிறது. 

இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் தினமும் அலுவலகக் காரில் தான் செல்வது வழக்கம். அதன் ஓட்டுநர் தேவராஜ்தான் எனக்குக் கன்னடம் பயிற்றுவித்த குரு. தினமும் ஏதேனும் சில சொற்றொடர்களைச் சொல்லி, அதைக் கன்னடத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்டு, மனதில் இறுத்திக் கொள்வேன்.

கன்னடத்தில் பேச வேண்டும் என்ற சூழ்நிலை வரும் என்பது தெரிந்தால், பேசப் போகும் காட்சிக்குத் (context) தகுந்தாற்போல முன்பே ஒத்திகை பார்த்து, தளை தட்டிக் கொள்வேன். இல்லாவிடில் கடினம். அத்துணை சரளமாக சித்தி வீட்டு வழக்கு வாய்க்கவில்லை இன்னும்.

தினசரி வாழ்க்கையில் பெங்களூரானது தமிழ் தவிர்த்து ஏனைய மொழிகள் தெரியாதோருக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. அது எப்படியோ.. பெரும்பாலான கன்னடத்தாருக்கு தமிழ் வந்து விடுகிறது தத்தித் தத்தியேனும்.. இது தமிழின் சிறப்பா, இல்லை கன்னடத்தின் சிறப்பா.. இல்லை தமிழ் திரைப்படங்களின் மசாலாச் சிறப்பா என்பதைத் தெளியச் செய்வோருக்கு ’தக்க சன்மானம்’ தரலாம் என்றிருக்கிறேன். :)

வயது வந்த பின், புதியதாகவொரு மொழி கற்றுக் கொள்வதற்குத் தேவையானவை இரண்டு. ஒன்று படைப்பாற்றல் (Creativity). இரண்டு, தவறாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சங்கோஜமே இல்லாமை. தவறாகப் போய் திருத்தப்படும் விஷயங்கள்தானே நினைவில் நிலைக்கின்றன. வாய்க்கும், வாழ்வுக்கும்.

இவ்விரண்டையும் காரணிகளாக எண்ணியதற்குக் காரணம் என்னவென்று சொல்ல அவா. 

கன்னடத்தினர் பேசும் தமிழில் ஒரு வித்தியாசமான வார்த்தையொன்றை அவதானிக்கலாம். இடையிடையே, ’அப்படியா..’ என்று கேட்க நேருமிடங்களிலெல்லாம் ‘ஆமாவா..’ என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். 

தமிழில் நாம் வழங்கும் ‘அப்படியா..’என்ற வார்த்தைக்கு ஈடானவொரு சொல் கன்னடத்தில் இல்லை. கன்னடத்தில் ’ஹவுதூ..’ என்றால் ஆமாம் என்ற பொருள். ‘ஹவுதா..’ என்றால் அப்படியா என்ற பொருள். ஆக அவர்களுடைய கன்னட ’ஆமாவா..’-வை நம்முடைய தமிழ் ’அப்படியா’-வுக்குப் பதிலீடாக்குகிறார்கள். எனவே புதிய மொழியில் உரையாடிப் பழக, மேற்சொன்ன இரண்டு பருப்பொருட்களும் தேவையென்பது ஓரளவுக்கு நிரூபணமாகிறது.

-0-

Bachelor என்ற வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை என்னவென்று யோசித்ததில் ஸ்பஷ்டமாய் தலைவலி மிஞ்சிற்று. பிரம்மச்சாரி என்றால், பெண்ணைத் தீண்டாதவன் என்றுதானே பொருள். (முதலில் இது தமிழ் சொல்லா என்றே சந்தேகம்!) திருமணமாகாதவன்.. ஆனால், அவனுடைய பெண் சகவாசத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.. என்பதுதானே வழக்காற்றில் நாம் கொள்ளும் Bachelor-க்கான பொருள். இதற்கிணையான தமிழ் சொல் அடியேனின் சிற்றறிவுக்கெட்டவில்லை. எவருக்கேனும் எட்டினால், சுட்டுங்கள்.

சமீபமாய் கதா காலக்ஷேபங்களில் நேரம் அதிகமாய் செலவாகிறது. என் வயதுக்கு இதெல்லாம் சற்று விபரீத விதிவிலக்கோ என்ற ஐயப்பாடு எனக்கே சில நேரங்களில் எழுந்தாலும், வல்லான் வகுத்த வாய்க்காலில், வழி தப்பும் பயமெதற்கு என்று திருத்திக் கொள்வேன். 

வேளுக்குடி வைணவத்தை திகட்டத் திகட்டத் தருகிறார். டியெஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு சைவ, வைணவ வேறுபாடெல்லாம் இல்லை. சுகி சிவத்தை ஆன்மிக சொற்பொழிவாளர் என்று சொல்வதை, அவருடைய சுய முன்னேற்றக் கருத்துகள் முறைக்கின்றன. விசாகா ஹரி.. பார்த்த, கேட்ட மாத்திரங்களில் கவர்ந்திழுத்துக் கட்டிப் போடுகிறார். சங்கீத உபன்யாசம் என்ற கான்செப்ட் அட்டகாசமாய் பொருந்துகிறது இவருக்கு. இவரைப் பற்றி பிறிதொரு சமயம் விஸ்தாரமாய் பகிர எண்ணமிருக்கிறது. வாரியார் சுவாமிகள், இவர்கள் எல்லோருக்கும் மூத்தவர். அனுபவம், ஆன்மிகம், ஹாஸ்யம்.. எல்லாமும் கிடைக்கும் அவரிடம். 

வாரியார் சுவாமிகள் சொல்கிறார். மதர் என்ற சொல் மாதா என்ற சொல்லிலிருந்தும், ஃபாதர் என்ற சொல் பிதா என்ற சொல்லிலிருந்தும், பிரதர் என்ற சொல் பிராதா என்ற சொல்லிலிருந்தும் உருவானவை. ’அங்கே’யிருப்பதெல்லாம், ’இங்கி’ருந்து சென்றதுதான் என்று. இவர் இக்கருத்தைத் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துவதற்காகச் சொன்னார் (பேசிக் கொண்டிருக்கும் தலைப்பு அவ்வையும், தமிழும்!). அவர் குறிப்பிட்ட எல்லா சொற்களுமே சம்ஸ்கிருதச் சொற்கள் என்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்காது என்பது என் அபி. தமிழின் மீதிருக்கும் பிரியம் கண்ணை மறைக்கிறது. வாயை மறைக்கவில்லை. 

இன்னொன்றும் சொன்னார் பாருங்களேன். இதற்காகத்தான் இத்தனை கதையையும் சொல்ல நேர்ந்தது. திருமணமாகாதவன் அதிகம் பேசமாட்டானாம். வெட்கப்படுவானாம். அதாவது பேச்சிலன். இதுதான் Bachelor என்றானது என்றார். 

மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லிச் சென்ற மகானை நினைத்துக் கொண்டேன்! :)3 மறுமொழிகள்:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! May 18, 2011 at 2:48 PM  

நேர்த்தியான எழுத்து நடையில் பல மேற்கோள்களுடன் அழகாய் ஒரு சிந்தனை . பகிர்ந்தமைக்கு நன்றி

வி.பாலகுமார் May 18, 2011 at 4:52 PM  

நேர்த்தியான மொழிநடை. வாழ்த்துகள்.

மதன் May 18, 2011 at 6:39 PM  

மிக்க நன்றி சங்கர்.. :)

பாலகுமார் - உங்களுக்கும்! :)

  ©Template by Dicas Blogger.

TOPO