இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..!
சமீபத்தில் ஒருநாள், அலுவலக நண்பன் ஒருவன் என்னிடம் மிக ஆவலுடன் அவன் தொலைபேசியில் இருந்த ஒரு ஆடியோ ஃபைலைக் கேட்கச் சொன்னான். ’இருடா இந்த மெயிலை அனுப்பிட்டு வரேன்’ என்றால் கேட்காமல், இப்போதே கேளுங்கள் என்று அடம். சரியென்று நான், அவன், மற்றும் ஒரு நண்பன், அனைவரும் வட்டங்கட்டி உட்கார்ந்து கேட்டோம். அதன் சுருக்கம் பின்வருமாறு:
குறிப்பு: ஆழமான கோவைத்தமிழ் சற்று சிரமமாகவே இருக்கும். பொறுத்துக்கொள்ளவும்.
ஏர்டெல் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்: வணக்கம் ஏர்டெல் அழைத்தமைக்கு நன்றி.
தினேஸ் பாபு: கண்ணு.. வணக்கங் கண்ணு.. நான் தினேஸ் பாபு பேசறங் கண்ணு. நம்ப லைன்லிருந்து அப்பா லைனுக் கூப்ட்டா, எடுக்க மாட்டேங்குதுங் கண்ணு.. கொஞ்சென்னனு பாருங் கண்ணு..
க.கே.எ: உங்க போன்ல இருந்து அப்பா போன் கூப்ட்டா கெடைக்கலிங்ளாங் சார்? (எண்ணை வாங்கிக் கொள்கிறார்).
க.கே.எ: எப்பக் கூப்ட்டீங் சார்?
தி.பா: (பக்கத்திலிருந்தவனைக் கேட்டு..) 12 மணிக்குங் கண்ணு.. அப்பதாங் கண்ணு நம்ப அப்பா ப்ரீயா இருப்பாரு.(பின்னால் சிரிப்புச் சத்தம்).
க.கே.எ: (எண்ணைப் பரிசோதித்து விட்டு) உங்க எண்ல எந்தப் பிரச்சினையும் இல்லைங் சார்.. உங்க சிம்ம வேறொரு போன்ல போட்டு ட்ரை பண்ணிப் பாருங்க..
தி.பா: ஏங்கண்ணு.. சிம் கார்ட்னா.. இந்த அட்டையாட்ட இருக்க்குமுல்ல.. அதானுங் கண்ணு..?
க.கே.எ: ஆமாங் சார். அது தான்.
தி.பா: அதெப்படிங் கண்ணு.. நம்ப சிம்ம வேற போன்ல போட்டா போன்காரவிக சண்டைக்கு வர மாட்டாங்ளா..?
(க.கே.எ, வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு..)
இல்ல சார்.. நீங்க போட்டுப் பாருங்க.. அப்டியும் வேல செய்யலனா திரும்ப அழைங்க..
தி.பா: கண்ணு.. நம்ப அப்பா செத்தப்பவே போனையும் போட்டுப் பொதச்சுட்டமுங் கண்ணு.. அதுனால எதா பிரச்சினை இருக்குமுங்ளாங் கண்ணு..?
(க.கே.எ ஒன்றும் பேசவில்லை. சில நொடி மௌனத்திற்குப் பின்..)
தி.பா: ஏங்கண்ணு.. நம்ம கூடொப் பேசி இந்தப் பொலப்ப் பாக்றதுக்கு, நீ வேறெதா நல்ல பொலப்ப் பாத்துக்க்லாமுல்ல கண்ணு..
க.கே.எ: (இதற்கு மேலும் அவர் பொறுமையாக..) உங்க எண் பத்தின வேற எதா சந்தேகம் இருந்தா கேளுங்க சார் சொல்றேன்.
தி.பா: வேறொண்ணுமில்ல.. செரி சாப்ட்டியா கண்ணு..?
க.கே.எ: இல்ல சார்.. நீங்க ஏர்டெல் பத்தி கேளுங்க.. பதில் சொல்றேன்.
தி.பா: என்ன கண்ணு நிய்யு..? நம்ம புள்ளையாப் போய்ட்டினு கேட்டா.. செரி உனக்குப் புடிக்க்லினா உட்ரு கண்ணு..
(சிதறும் சிரிப்பொலிகளுக்கு நடுவே, தொலைபேசியில் பதிவு செய்வது நிறுத்தப்படுகிறது).
இதே போல அடுத்த ’ஒலிப்பதி’வில், வேறொரு வாடிக்கையாளர், அவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாததால், வீட்டிலிருந்து பெரியவர்கள் யாரையாவது அழைத்து வரச் சொன்னார்களாம். உங்களால் சற்று வர முடியுமா? என்று கேட்கிறார்.
இன்னுமொரு பதிவில் ஒரு பெண் க.க.ஏ-விடம், ஹலோ ட்யூன் வைக்க வேண்டும் என்றும், தனக்கு ஜெமினி ஜெமினி பாடல் தான் வேண்டும் என்றும், அதை ஒரு முறை பாடிக் காட்ட முடியுமா என்றும் கேட்கிறார், நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மற்றுமொரு மேலான 'வாடிக்கையாளர்'.
சுழற்றியடிக்கும் வாழ்க்கையின் சுமையில், கிடைத்த ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை கவனிக்கும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்களை எண்ணி, உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. இந்தப் பொன்னான உரைக்குக் காரணகர்த்தாக்கள் மரியாதைக்குப் பேர்போன நம் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்கள்.
இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இல்லை.. டோப்பைப் போட்டு நாசமாய்ப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? ஆனால் சக மனிதனின் உணர்வுகளை இப்படி அற்ப சந்தோஷங்களுக்காக, வேண்டுமென்றே குத்திக் கூறு போட்டு, அதில் இன்பம் காணும் குரூரம் எங்கிருந்து வந்தது என்றுதான் புரியவில்லை.
வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிவோர், மறுமுனை என்ன பேசினாலும், பொறுமையுடன்தான் பதிலளிக்க வேண்டுமாம். இது அவர்களுக்கு ஒரு விதியாம். ’ஏர்டெல் மற்றும் பல தொலைதொடர்பு நிறுவனங்களால் வாடிக்கையாளருடனான எல்லா உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதால், சேவையாளர் மீறி எதுவும் பேசவும் முடியாது. ஆகவே, வேறு வழியே இல்லாமல் அவர்களின் உணர்வுகளையடக்கிக் கொண்டு பதிலளிக்கிறார்கள்’ என்று வியாக்யானம் வேறு.
அப்படியே எதாவது நடவடிக்கை எடுத்தாலும் அதிகபட்சம் சேவையை நிறுத்துவர். அந்த சிம் கார்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குவதற்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது? அதுதான் முக்குக்கு மூன்று ’ஏஜன்சி’கள் இருக்கின்றனவே செல்தொலை பேசி சேவைகளுக்கு.
சரி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றால் ஏற்கெனவே இங்கு சட்ட சிக்கல்கள் மிகக்குறைவு(?!). ஏர்டெல் அதன் வியாபாரத்தைப் பார்க்குமா.. இல்லை.. கேவலம் ஒரு க.க.எ-விற்குப் பரிந்து கொண்டு வழக்குத் தொடுக்குமா?
ஆனால் அந்த சேவையாளரைப் பொறுத்தமட்டில், இந்நிகழ்வு அந்த சமயத்தில் ஏற்படுத்தும் கோபத்தோடு நில்லாமல், இப்படி ஒரு பணியில் தான் இருக்க நேர்ந்துவிட்ட இயலாமையை நினைத்து அவர் தனக்குள் புழுங்கும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மன அழுத்தமும், உளைச்சலும் இலவச இணைப்புகள் ஆகலாம்.
இதே ரீதியில் சென்றால் நம் மாணவ மாமணிகள், கஸ்டமர் கேர் பெண்களை சினிமாவுக்கோ இல்லை வேறெதற்கோ அழைத்தாலும் வியப்பதற்கில்லை.
சமீபத்தில் சாரு கூட இதே போன்றதொரு கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கித் தமிழகமெங்கும் புகழீட்டிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைப் பாடலொன்று, சென்னையிலிருக்கும் மகளிர் கல்லூரிகள் வரை பிராபல்யம் அடைந்திருந்ததை சுட்டிக் காட்டியிருந்தார்.
சமூகப் பிரச்சினையொன்று வந்தால், அதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்கக் களமிறங்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் மேற்கூறியவை போன்ற கூத்துகளைப் பார்க்கையில், அடுத்த தெருவிலிருக்கும் ஒருவனின் உணர்வுகளை மதியாத இவர்களா, எங்கோ இருக்கும் கண்காணாத சகோதரர்களின் சாவுக்குக் குமுறுகிறார்கள் என்று நம்மை சந்தேகத்திற்குள்ளாக்குவதும் இவர்களேதான்.
ஆங்காங்கு காணக்கிடைக்கும் ஓரிரு அத்திப்பூ விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இக்கால இளைஞர்கள் விவேகானந்தருக்கெல்லாம் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள் என்ற உண்மையின் கசப்பு, நானும் இளைஞன்தானென்ற போதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.
நீங்க சொல்வது சரி ...எப்போதுமே நம்மாளுங்க.. ஒரு பயன்பாட்டை கெட்ட விதமா எப்படி use பண்ணாலாம் தான் யோசிங்கிறாங்க...இவங்களும் , Tele-Markteting பண்ற ஊழியர்கள் வாங்கும் திட்டு அதிகம்...
ஆனா , இப்படி எல்லா ஏட கூட மான விசயங்க்ளை எல்லாம் எப்படி handle பண்ணனும்னு அவங்களுங்கு எல்லா நிறுவனங்களிலும் பயிற்சி அளிக்கபடுது..அதனால் அவ்ங்க இதை பெரிதா எடுத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்..
very nice post
////"இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இல்லை.. டோப்பைப் போட்டு நாசமாய்ப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? ஆனால் சக மனிதனின் உணர்வுகளை இப்படி அற்ப சந்தோஷங்களுக்காக, வேண்டுமென்றே குத்திக் கூறு போட்டு, அதில் இன்பம் காணும் குரூரம் எங்கிருந்து வந்தது என்றுதான் புரியவில்லை."////
சம்பந்த பட்ட மாணவர்கள் மற்றும் நபர்கள் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் ,பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவது என்னவோ உண்மை.
நம்ம நடிகை திலகம்...ஒரு பாடலில் சொல்வார்.."பச்சை விளக்கு"...என்று நினைக்கிறேன்..."வீட்டை விட்டு வெளிய வந்தா, நாலும் நடக்கலாம்...அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா...நல்லா இருக்கலாம்"...இந்த பதிவை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது...Its all in the day to day walks of our life...Let us forget and forgive...Thats all...Always opinion differs....நல்ல பதிவு...
@mvalarpirai - பயிற்சியளிக்கப்பட்டாலும் அவர்களும் மனிதர்கள்தானே. கருத்துக்கு நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முரளிகண்ணன்.
@ASSOCIATE - நன்றி.
RAMASUBRAMANIA SHARMA - பகிர்வுக்கு நன்றி.
Thank you for posting a very rare view. That too from a person of this age. But I dont see any good change in this generation in near future. Sad...
-Reena
நன்றீ ரீனா.
தங்களின் மறுமொழிக்கு நன்றீ....தவறூதலாக "நடிகர் திலகம்" என்பதற்கு பதில், "நடிகை திலகம்"...என்றூ தட்டச்சு செய்துவிட்டேன்....
நன்றீ , என்றூ - திரும்ப தவறூதலாக தட்டச்சு செய்துவிட்டீர்கள்.. :)
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. இந்த பதிவு இன்னும் வன்மையா வந்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. இங்க நம்ம மதன் கொடுத்திருக்கிற உரையாடல் ஒரு சின்ன எடுத்துக்காட்டு.. இதை விட மோசமான வார்த்தைகளை உபயோகபடுத்திய உரையாடல்களால் மனசு நொந்து போன தோழர்களையும் தோழிகளையும் சாந்த படுத்துறது எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்ச எனக்கு நல்லாவே தெரியும்... இவனுங்கள எல்லாம் திருத்த முடியாது பாஸ்...
-Alb
@Alb - இன்னும் மோசமாக நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பது வேதனையளிக்கிறது. இன்னும் வன்மையாக எழுதியிருக்கலாம் என்று சொல்வதிலேயே எவ்வளவு மோசமாகப் பேசியிருக்கின்றனர் என்பதும் புரிகிறது.
//இவனுங்கள எல்லாம் திருத்த முடியாது...
//
மிகச்சரி..!
நல்ல பதிவு... இனிமேல் Customer Care அன்பர்களுடன் உரையாடும்போத, அவர்கள் சேவையில் என்ன குறையிருந்தாலும் அதனைக் கோபமில்லாமல் சரியான வார்த்தைகளில் சொல்ல முயற்சிப்பேன்...
நன்றி சுப்பு..!
எதார்த்தம் சுடுகிறது
அன்பின் மதன்
தவிர்க்க இயலாத ஒன்று - என்ன செய்வது - எச்செயலிலும் எந்நிகழ்வினிலும் இது போன்ற புல்லுருவிகள் புகுந்து பேசி இன்பம் காணுகின்றனர். விழுக்காடு குறைவே - ககேஎக்கு இதெல்லாம் இயல்பாக புறந்தள்ளி அடுத்த செய்லைக் கவனிக்கும் திறமை உண்டு. இருப்பினும் இத்தவறுகள் களையப் ப்ட வேண்டிய ஒன்று தான். ம்ம்ம்ம்
மதன் வித்தியாசமான சிந்தனையில் உருவான் இடுகை நன்று - நலம் பயக்கட்டும் - படிப்பவர்கள் திருத்தட்டும் - திருந்தட்டும்.
நல்வாழ்த்துகள் மதன்
நட்புடன் சீனா
Post a Comment