Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, March 3, 2011

127 Hours - இயற்கைப் பெருந்தாயின் முன் மண்டியிடும் மானுடம்..



யாருமிலா வனத்தினுள் வெறி கொண்டு தனித்தலையும் மிருகம் போல, ஏனென்றே அறியாமல் திரைப்படங்களாகப் பார்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. The Shutter Island, Memories of Murder, Primal Fear, Good Fellas, Taxi Driver, The American Gangster போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

இப்பட்டியலில், இவ்வாண்டு அகாதமி விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டவைகளுள் ஒன்றான 127 Hours ஏனோ உள்ளே பதுங்கிக் கிடந்த எழுத்துப் பூனையின் வாலை இழுத்துப் பார்த்து விட்டதில், மனவெளியெங்கும் இறைந்து கிடந்த வார்த்தைக் குப்பைகளைத் துழாவித் துழாவி, சிலதை அனுப்பிக் கொண்டிருக்கிறேன் விரல் முனைகளுக்கு.

என்ன சொல்ல? ஒரே வரியில் சொல்வதென்றால், இயற்கை என்னும் சொல்லிலடங்காப் பெருந்தேவிக்கு முன்பாக மானுடம் எனும் அற்பத்தின் ஆழத்தைக் கூறு போட்டிருக்கிறார் Danny Boyle. படம் முழுக்க எனக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது இதுதான். இவ்வுலகையே நாம்தான் ஆள்கிறோம் என்பதை வெட்கமில்லாமல் முரசு கொட்டும் வண்ணமாக மரங்களைக் கொன்றழிக்கிறோம். நீர்நிலைகளை அபார்ட்மெண்டுகளாக்குகிறோம். ஐந்நூறடிக்கு போரைப் போட்டு அவள் குருதியை உறிஞ்சியெடுக்கிறோம். யார் கொடுத்த உரிமையிது நமக்கு?

படத்தின் துவக்கத்தில் James Francoவின் சைக்கிள் வேகத்தில், உடல் மொழியில் தென்படும் அசாத்தியம், அனாயாசம், வீறு கொண்டெழுந்திருக்கும் மலையைக் காண்கையில் துலங்கும் அலட்சியம், ஆகிய அனைத்தும் நாமாகவே கையிலெடுத்துக் கொண்ட இயற்கைக்கு எதிரான செயல்களின் குறியீடாகவே தோன்றுகிறது. Francoவைப் போலவே நாமும் மண் துகள்களாலான மகா பிண்டமான அத்தாயின் முன் மண்டியிட்டுக் கதறும் நிலை வரும் என்பதைக் கூறும் அபாய மணிதான் 127 Hours.

உலகமறிந்த நேரடிக் கதை. மலையேறுபவன், எதிர்பாராமல் பாறை தன் கையின் மீதேறி சிக்கிக் கொள்கிறான். கையை அறுத்துப் போட்டுவிட்டுத் தப்பிப்பதற்குள்ளான 127 மணி நேரங்களை ஒரு திரைப்படமாக எடுப்பது பெரிதல்ல. கதை தெரிந்த ரசிகர்களையும் கட்டிப் போடும் வித்தையை செயல்படுத்திக் காட்டும் சாமர்த்தியம் இருப்பவன்தான் அதில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

இயற்கையை ஏளனமாய் பார்த்துத் திரியும் ஒருவன், காலை 9.30க்குத் துவங்கி 15 நிமிடங்கள் மாத்திரமே தன்மேல் படும் சூரிய ஒளிக்காக ஏங்குவது, தினமும் காலை அவ்வழியே பறந்து செல்லும் கழுகைக் கண்டு ஆச்சரியப்படுவது, தொங்கிக் கொண்டே தூங்கும் அவன் மேல் எறும்புகள் ஊர்கையில், அவனுக்கும், எறும்புக்கும் என்ன பேதம் என்றென்னை யோசிக்க வைத்தது, என ஒவ்வொன்றுமே இயற்கையின் பேராண்மையை, பெரும் பெண்மையைப் பேசுவதாகவே எண்ணுகிறேன்.

இவற்றுள் மிக முக்கியமான குறியீடு நீர். இருக்கும் ஒரே ஒரு பாட்டில் நீரை வைத்துக் கொண்டு தீர்ந்து விடும் பதற்றத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அருந்துகிறான். தாகத்தின் வெக்கை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஊடுபாய்ந்து ஒவ்வொன்றையும் ஆயிரந் துணுக்குகளாக சிதறடிக்கிறது. திடீரெனப் பெய்யும் பெருமழை அவன் சிக்கிக் கொண்டிருக்கும் நீளமான பாதை முழுக்க நீரால் நிரப்பி, இந்தா.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.. குடி.. குடி.. என்று அவனை மூழ்கடிக்கும் காட்சியின்போது, பக்கத்தில் இருந்த என் வாட்டர் பாட்டிலை இறுகப் பற்றிக் கொண்டேன்.

பஞ்ச பூதங்களின் முன் பச்சைக் குழந்தைகள் நாமெலாம்!

நம்மையெல்லாம் பிரசவித்து விட்ட போதும் நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கும் இயற்கைத் தாயின் பன்னீர்க்குடம்தானே மானுடத்திற்கு நீரைக் கொடுக்கிறது.

Franco சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்படியே பின்னால் வரும் கேமராக்கண்கள், சில ஆயிரம் அடி உயரம்வரை உயர்ந்து நின்றன. இரு மலைகளுக்கு இடையேயான பிளவுக்குள் கிடக்கிறான் Franco. தொண்டைக்குழி கிழியக் கத்திக் கொண்டிருக்கும் அவன் சத்தம் எவர் செவிகளையும் சேரவியலாத சூழலை மட்டும் உணர்த்தவில்லை அக்காட்சி.

வெறும் வார்த்தை ஜாலத்துக்காக சொல்லவில்லை. அப்பிளவு எனக்கு இயற்கை அன்னையின் பிறப்புறுப்பாகவே தோன்றியது. இங்கிருந்து தான் வந்தோம். அங்குதான் சென்று மடியப் போகிறோம் என்று தோன்றியதில் உள்ளே சற்று கிலி கிளம்பியது.

தாகம் ஒரு உடற் தேவை மாத்திரமல்ல. அது ஒரு தொப்புள் கொடி பந்தம். நாமே நினைத்தாலும் அறுத்துக் கொள்ள முடியாதவாறு பிணைக்கப்பட்டிருக்கிறோம் பெற்றவளோடு.

நான் பார்த்தவற்றுள், தாகமும் ஒரு பாத்திரமாகக் கூடவே பயணிக்கும் சில திரைப்படங்கள் Sahara (1995) - இரண்டாம் உலகப்போரின் போது ஒரு பீரங்கியில் சஹாரா பாலையைக் கடக்க முயற்சிக்கும் இராணுவ வீரர்களின் கதை மற்றும் The Alive (1993) - 1972ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு ரக்பி அணி மற்றும் உறவினர்கள் பனி மலைகளுக்கு நடுவே பரிதவிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகிய இரண்டும் சட்டென நினைவுத் திரையில் கீறல் விழச் செய்தவை.

127 Hours போலவே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு திரைப்படம் என்று நான் கருதுவது மிகப் பிரபலமான Cast Away (தல Tom Hanks!). Cast Awayல் மனோ வலி அதிகம். 127 Hoursல் உடல் வலி அதிகம். முன்னதில் ஐந்து ஆண்டுகள். பின்னதில் ஐந்து நாட்கள். வலியைத் தாங்குவதில் மனத்தின் மகத்துவம், உடலுக்கு மிகக் குறைவு என்பேன். உடல், வலியோடு மோதத் திராணியின்றி சிதைவுறுகிறது. மனம், வலியை விழுங்கிக் கொண்டு திண்மையுறுகிறது. இரண்டு படங்களிலும் ஸ்தூல உடல் தரும் வேதனையை மீறி மேலெழுந்து வரும் கிளர்ச்சியை நாயகர்களுக்கு அளிப்பது அவர்களின் மனோதிடமே.

என் கையின் மேல் விழத்தான் இந்தப் பாறை இலட்சம் ஆண்டுகளாகக் காத்திருந்தது. எனதொவ்வொரு மூச்சும், செயலும், இந்தக் கணத்தை நோக்கித்தான் தள்ளின என்ற வசனம் எனக்கு மிகப்பிடித்தது.

மற்றபடி, அம்மா, அப்பா, தங்கை, மனைவி ஆகியோரின் நினைவு, அவர்கள் அனைவரும் தன் முன்னிருப்பது போல் அவன் மனம் சிருஷ்டித்துக் கொள்ளும் காட்சிகள் இயல்பாய் அமைந்திருக்கின்றன. நம் மனம் ஒன்றிலிருந்து மிகத் தீவிரமாக, மிக ஆவேசமாகத் தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனித்து, அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள்கையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் நிகழ்கிறது. அச்சூழலில் இருந்து தற்காலிகமான விடுதலையைத் தனக்குத் தானே அளித்துக் கொள்ள ஒரு கனாச் சூழலை உருவாக்கிக் கொள்கிறது.

சிறிய வயதில் கிரிக்கெட் பைத்தியத்தில், இந்திய அணிக்காக ஆடுவது போலவும், அத்தனை பந்துகளிலும் சிக்சர் அடிப்பது போலவும் (விழித்திருக்கையில்!) கனவு கண்டு மொத்த பந்துகளை ஆறால் பெருக்கிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், இக்கனவுகள் மாறினவே தவிர கனவுகள் வருவது மாறவில்லை.

James Franco மிகையில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழுவதிலிருந்து, நரக ரணத்தில், கற்பனையில் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி வரை குறையாக எதுவும் படவில்லை. சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுப் பரிந்துரைக்குத் தகுதியான performanceதான் என்பது என் தாழ் அபி!

ரஹ்மான் ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார். மனிதருக்கு இன்னமும் அள்ளித்தர காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அறுத்துப் போட்ட கையை புகைப்படமெடுத்துக் கொண்டு திரும்பும்போது Franco சொல்லும் ஒரு Thank You நிறையச் சொன்னது எனக்கு. அந்தளவுக்கு நிறைவான Thank Youக்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சிக்கிறேன். உடலிலிருந்து உலகு வரை அனைத்துமாகி, அனைத்திலுமாகி, உறைந்திருக்கும் பஞ்ச பூதங்களுக்கும், அவற்றுள் உயிர்த்திருக்கும் பரம்பொருளுக்கும்!

Read more...

Friday, September 24, 2010

Band of Brothers! – சில கருத்துகள், பகிர்வுகள்..



Saving Private Ryanல் துவங்கிய யுத்தத் திரைப்படங்களின் மீதான மோகம், எனையறியாமலேயே என்னுள் காட்டுத்தீயென உருக்கொண்டு, இரண்டாம் உலகப்போரில் நானும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலெனக்குக் கனவுகள் வருமளவுக்கு யுத்தக்களத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த படைப்பு என்று கருதக் கூடியது Saving Private Ryan என்றுதான் நினைத்திருந்தேன், சமீபத்தில் Band Of Brothersஐப் பார்க்கும் வரை. HBOவில் வாரமொரு முறையென்று பத்து வாரங்களுக்கு ஒளிபரப்பான இந்த மினி-சீரீஸ், உலகத்தரம் வாய்ந்தவொரு படத்துக்கான எல்லாத் தகுதிகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.

Title Cardன் இசையே என்னமோ செய்ய ஆரம்பித்து விடுகிறது. மெது மெதுவாகப் பெயர்கள் திரையில் நகரத் துவங்கிய பின், Executive Producers என்ற titleக்காக நான் காத்திருப்பேன். ஏனென்றால் BOBன் Executive Producers, எனக்கு ‘ரொம்பப் பிடிச்ச’ Steven Spielbergம், Tom Hanksம்! (ஒரு நல்ல படைப்பாளியின் பணத்தில் உருவாகும் படைப்பு நல்லதாகத்தானே இருக்கும்!) ஒவ்வொரு எபிசோடிலும் அவர்கள் பெயரைப் பார்க்கையில் உள்ளே பொங்கிய உற்சாகம், அவர்கள் மேலான என் பிரியத்துக்குப் பதமான ஒரு சோறு!

Saving Private Ryan-ன் நீட்சிதான் Band Of Brothers என்பது என் அபி! ’போர்’ என்ற ஈரெழுத்து வார்த்தை தருவிக்கும் வதையை, வாதையை, போதையைப் பதிவிக்க 120 நிமிடங்கள் போதாதென்பதால்தான், 600 நிமிடங்களுக்கு நம்மைக் கட்டிப் போட்டுப் பாடம் கற்பிக்கிறார்கள் போலும் இருவரும்.

Band Of Brothers-ல் ‘கதை’யென்றெல்லாம் எதுவும் கிடையாது. போர்! இதுதான் கதை. அமெரிக்க இராணுவத்தின் 101st Air Borne, அதாவது Easy Company எனப்படும் Para-Trooper  (விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துப் போர் செய்யும் வீரர்கள்) போர்க்குழுவின் பயிற்சிக்காலம் முதல் (1942), இரண்டாமுலக யுத்தம் முடிவுறுவது வரை (1945) Easy Companyயின் வெற்றிகளை, தோல்விகளை, ஒவ்வொரு வீரனும் போரின் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை, அதில் சிலர் வெற்றி பெறுதலை, சிலர் தோல்வியுறுதலை, உணவு, நீர் மற்றும் ஐரோப்பியக் குளிருக்குத் தக்க ஆடைகளென்று இன்றியமையாத பொருட்கள் கூட இல்லாமல் போரின் ரணத்தில் அவர்கள் அலைக்கழிதலை, நில்லாது நீளும் இன்னபிற காற்புள்ளிகளை.. என்று ஒரு யுத்தப் பட இரசிகனுக்குத் தேவையான அத்துணை விஷயங்களும் Band Of Brothersல் அடக்கம்.

பத்து எபிசோடுகளில், ஐந்தாறு முறை கண்களில் நீர் பூத்திருக்கும். யூதர்களை அகதிகளாக அடைத்து வைத்திருந்த முகாம் காட்சிகளை நினைத்தாலே பதைக்கிறது. மிகுந்த யதார்த்தமுடன், அச்சு அசல், உண்மைக் காட்சிகளைப் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மானியர்களால் கருக்கப்பட்ட யூத உடற் பிண்டங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் அமெரிக்க வீரர்கள் அடையும் அதிர்ச்சி நம்மிலும் அதிர்கிறது.

ஒவ்வொரு எபிசோட் துவங்கும் முன்பும் சில நிமிடங்களுக்கு இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு உயிர் தப்பிய நிஜ வீரர்கள் (இன்றைய தாத்தாக்கள்!) சிலர் பேசுவார்கள் பாருங்களேன். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய்த் தைக்கின்றன. கண்களுக்கு முன்பு நடந்தேறிய குருதிக்களரிகளை நினைத்து, குரல் தழு தழுக்க, பேச முடியாமல் விக்கித்துப் போகிறார்கள் சிலர். போலவே நமக்கும்!


 பெரும்பாலான கதாபாத்திரங்கள் முகந்தெரியாத நடிகர்களாம். ஆகச்சிறந்த தேர்வுகள் ஒவ்வொன்றும். Casting was bloody brilliance I ‘d say! அவரவர்களுக்குக் கொடுத்த வேலையைக் கன கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். குறிப்பாக Major.Richard Winters ஆக வரும் Damian Lewis, மற்றும் Captain.Lewis Nixon ஆக வரும் Ron Livingston. மொத்த சீரீஸுமே உண்மைச் சம்பவங்களைத் தழுவியெடுக்கப்பட்டது என்ற தகவல் சற்று கிலியூட்டுகிறது.

2001ல் வெளிவந்த இப்படைப்பு Golden Globe விருது பெற்றிருக்கிறது.

வெறுமனே வெடித்துச் சிதறும் உடற் குவியல்களை மட்டும் காட்டுவது யுத்தம் சார்ந்தவொரு நல்ல படைப்பின் கருதுகோளாக இருக்க இயலாது. உடன், அவ்வீரர்களைப் பீடிக்கும் உளவியல் அழுத்தக் கூறுகளைக் காட்சிகளின் வாயிலாகப் பதிவு செய்வதும்தான் யுத்த சினிமாவைக் கையிலெடுக்கும் கனவான்களின் கற்பனைக்கேற்ற சக்தி வாய்ந்த சவால். அதிலும் கேள்விக்கே இடமில்லாமல் சபாஷ் போட வைக்கிறது BOB.

என் வரிகள் உங்களுக்கு சற்று உயர்வு நவிற்சியாகப் படலாம். ஆனால் நீங்கள் BOBஐப் பார்க்கக் கூட வேண்டாம். இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்தாலே புரியும், நான் மிகை கூட்டியெழுதவில்லை என்பது.

பத்துப் பாகங்களில் ஐந்தாவதானதை இயக்கியிருப்பவர் Tom Hanks என்பது உபரித்தகவல். அவரேதான் இயக்கினாரா, இல்லை மற்றொரு தயாரிப்பாளர் உதவினாரா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை! J

Steven Spielbergம், Tom Hanksம், மீண்டுமொரு 200 மில்லியன் டாலரைக் கொட்டி உருவாக்கிய The Pacific என்ற மற்றொரு மினி-சீரீஸ் 2010ல் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடனான அமெரிக்கப் போர் பற்றியது. இதுவும் பத்து எபிசோடுகள். இன்னுமென்ன.. தரவிறக்கியாயிற்று! மற்றுமொரு கொண்டாட்டத்துக்குத் தயாரானது போல் குதிக்கிறது மனது. பார்த்து விட்டு நான் எதுவும் எழுதப் போவதில்லை. நன்றாகத்தானிருக்கும். நீங்களும் ஒரு யுத்தப் பிரியரென்றால் (?!) இவ்விரு படைப்புகளையும் தவற விடாதீர்கள். விடவே விடாதீர்கள்!

BOBஐ ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகவும் என் காலத்துக்கும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

-0-

என் கல்லூரிக் காலத்தில் தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட இருவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஒருவர் கமல்ஹாசன். இன்னொருவர் இளையராஜா. இப்பொழுது அந்த ஆசையில்லை என்றல்ல. ஏனோ கால மாற்றத்திலோ, நெஞ்சமுறும் முதிர்வில் நிகழும் சத்தமிலா நகர்வுகளிலோ நீர்த்து விட்டது அவ்வாசை. இப்பொழுது கேட்டால், Steven Spielbergஐயும், Tom Hanksஐயும் சந்திக்க ஆசை என்று சொல்கிறது மனது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. மனமெனும் குரங்குக்குக் கிளைகளுக்கா பஞ்சம்?

கீழே நான் கொடுத்திருக்கும் வீடியோக்களைப் பாருங்களேன் (I Insist!).


சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்ன இருவரும், ஆஸ்கர் விருது வாங்கிய மேடையில் கூட எத்தனை அடக்கத்துடன், நேயத்துடன் பேசுகிறார்கள் என்பது புலனாகும்.

Tom Hanks அவர் மனைவியின் மேல் எத்தனை காதலுடன் பேசுகிறார் பார்த்தீர்களா? (...and I am standing here because the woman I share my life with, has taught me and demonstrates for me everyday, just what Love is!)

Spielberg – சொல்லவே வேண்டாம். அவர் ஆஸ்கர் வாங்கிய இரண்டு படங்களும் அஸ்சாதாரணமான படங்கள். (Schindlers List மற்றும் Saving Private Ryan) அப்படியிருந்தும் அவரால் இவ்வளவு அடக்கத்துடன் எப்படித்தான் பேச முடிகிறதோ?

Schindlers Listக்காக ஆஸ்கர் வாங்கிய மேடையிலேயே, படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காகப் பொங்கிய கண்ணீரை மறைக்கத் தெரியாமல் மறைக்கும் அவரின் மனிதம், அவரும் ஒரு யூதர்தான் என்பதால் மட்டுமல்ல என்று நம்புவதால்தான் எனக்கும் வரச்செய்கிறது கண்ணுக்கொன்று வீதம் இரண்டே துளிகளை!

Read more...

Tuesday, September 14, 2010

ஸ்வர்ணலதா!

மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

சில வாரங்களுக்குப் பின்னர் இன்றுதான் வலையைத் திறந்தேன். பார்த்தால், அவர் காலமான செய்திக்குப் பின், ஸ்வர்ணலதாவின் பெயரை இணையத்தில் தேடிய சில அன்பர்கள் ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி என்ற இந்தக் கட்டுரையைப் படித்திருந்தார்கள்.

நல்லதொரு பாடகிக்கு என்னாலானதைச் செய்ய இயன்றதே என்ற எண்ணம் தரும் திருப்தி போதுமானதாக இல்லை, மனதுக்குள் நேற்று முதல் என்னையறியாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் காரணமாக! :(

Read more...

Thursday, July 29, 2010

சில ஹாடம்பாக்கத் திரைப்படங்கள்..

மஞ்சளாய் இருத்தலை விட வெளுத்த மதியங்கள்தான் இந்நாட்களில் அதிகம் வாய்க்கின்றன பெங்களூரில். வெயில் நாட்களில் கடவுள் குண்டு பல்பு போட்டுவிட்டார் எனவும், வெயிலில்லாத குளிர் நாட்களில் ட்யூப் லைட் போட்டுவிட்டார் எனவும் சிறு வயதில் எண்ணித் திரிந்திருக்கிறேன். அதுபோன்றதொரு ட்யூப்லைட் மதியத்தில் எழுதத் துவங்குகிறேன்.

உடன் எவருமில்லாத நாட்களைப் பொசுக்கும் எரிபொருளுக்காகவேனும் என்னால் எல்லாக் கோணங்களிலும் புணருறும் மடிக்கணினியில் சமீபமாய் பார்த்த சில ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றி சில வார்த்தைகள் பேச உத்தேசம்.


 Bob Zemeckis எனக்குப் பிடித்த இயக்குனர்களிலொருவர். Forrest Gump அவர் இயக்கியவைகளுள் நான் பார்த்த முதல் திரைப்படம். மூன்று முறை பார்த்த  பின்னர்தான் Tom Hanks என்ற எக்காளமிடும் நடிப்பாசுரனைத் தாண்டி இயக்குனரின் யுக்திகள் புலப்படவே துவங்கின. இருவருக்குமே ஆஸ்கரைப் பெற்றுத் தந்த பெருமைக்குத் தகுதியான படம் Forrest Gump.

Zemeckis, Forrest Gumpக்கு முன் இயக்கிய படம் Back to the Future. தலைப்பே கவிதை. அறிவியற் புனைகதைகளின் காட்ஃபாதர் கான்செப்ட்டான டைம் மெஷின் கதை. 1985ல் வெளிவந்தது. டைம் மெஷினைப் பயன்படுத்தி எதிர்பாராமல் 30 ஆண்டுகள் பின்னே (1955க்கு) சென்று விடுகிறான் கதையின் 18 வயது நாயகன் Marty.

30 ஆண்டுகள் வித்தியாசத்தில் அவன் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்கள், காலாச்சார, வாழ்வியல் மாற்றங்களென்று எல்லாவற்றையும் கதையின் போக்கிலேயே சுட்டிக் காட்டுகிறார் Zemeckis. Marty பருவ மங்கையாகவிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். நண்பர்களிடம் அடிவாங்கும் அசடாக தன் தந்தையைப் பார்க்கிறான். தாயோடு பேசுகையில் ‘நீ இவ்ளோ ஒல்லியா..’ என்று ஆரம்பித்துத் தடுமாறுவதில் துவங்கி, அவன் தாய் தந்தைக்குள் ஈர்ப்பு வர அவனே உதவுவது வரை காட்சிகள் சுவாரசியம் மங்காது செல்கின்றன.

அவன் வேண்டாமென்று சொல்லச் சொல்ல, அவன் தாய் அவனுடன் சல்லாபிக்க ஆசைப்படும் காட்சிகள் கொஞ்சம் கொழ கொழா. நல்ல வேளையாக முத்தம் கொடுத்த பின்பு, உன்னை முத்தமிடுவது என் சகோதரனை முத்தமிடுவது போலத்தானிருக்கிறது என்று சொல்லிவிடுகிறாள் தாய்.

நிகழில் டைம் மெஷினைக் கண்டறிந்த புத்திஜீவியும் அப்போது இளமையாக இருக்கிறார். தான் எதிர்காலத்தில் கண்டறியப்போகும் டைம் மெஷின் பற்றிய அரைகுறைக் குறிப்புகளை Martyயிடம் அவரே பெற்றுக் கொள்கிறார். அவரின் உதவியுடன் Marty மீண்டும் எதிர்காலத்திற்கு எப்படி வருகிறான் என்பதுதான் ஒற்றை அங்குல லாஜிக் கூட பிசகாமல் Zemeckis உருவாக்கியிருக்கும் Back to the Future. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் வந்துள்ளனவாம். எல்லாவற்றையும் பார்க்கலாமென்றிருக்கிறேன்!


அடுத்து Beowulf. இதுவும் Zemeckisன் படைப்புதான். தொழில்நுட்ப அடிப்படையில் வலிமையான திரைப்படம். ஆனால் கதை என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னைப் பொறுத்தவரை. சும்மா ஒரு monster வந்துச்சு. அதக் கொல்ல ஒரு ஹீரோ வேணும். ஆ.. தோ வந்துட்டாண்டா Beowulf..  என்பதாய்த் தொடரும் fantasy heroism வகையறாதான் Beowulf.  

இதில் monsterன் அம்மாவாக வரும் ஏஞ்சலினா ஜோலியை ஏன்தான் அரை நிர்வாணியாகவே அலைய விட்டார்களோ. அனிமேஷன் திரைப்படம் என்பதொரு சிறப்பம்சம். ஒருமுறை பார்க்கலாம்.. இஷ்டப்பட்டால்!


 A Clock Work Orange. IMDB-ன் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் எப்போதும் இருக்கும் படம். காலஞ்சென்ற திரைமேதை Stanley Kubrick இயக்கியது. மிகு வன்முறையும், பாலியல் வன்கொடுமை குறித்த எள்ளலும் படத்தை மூன்று நான்கு முறை வயதுக்கு வரச் செய்திருக்கின்றன. 1971லேயே ஹாலிவுட்டில் இத்தகு படங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

முதற் பாதியில் கதையின் மையப் பாத்திரத்தின் மேல் நமக்கு ஏற்படும் அளவு கடந்த கோபம், பிற்பாதியில் கருணை வழியும் பரிதாபமாய் நம்மையறியாமலேயே உருமாறுவதில் இருக்கும் ஆச்சர்யம், அது நிகழ்ந்து முடிந்த பின்தான் நமக்குப் புலனாகிறது என்பதில் Stanley Kubrickன் மேதைமை பளிச்சிடுகிறது. A Classical Thriller!


ஆ.வி ஹாய் மதன் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னொருமுறை ’கமல்ஹாசனுடன் Spartacus படத்தின் பெருமைகளைப் பேசினால், பேசிக் கொண்டேயிருக்கலாம்..’ என்று மதன் (எ) கோவிந்த குமார் (!) சொல்லியிருந்தது நினைவில்(ஏயே) இருந்த ஒரே காரணத்துக்காகவே Spartacus படத்தைத் தரவிறக்கினேன். 1960ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்தப் படம்.

ஆச்சரியம் என்னவென்றால் இப்படமும் Stanley Kubrick-னுடையதுதான் என்பது படம் ஓடத் துவங்கிய பின்னர்தான் தெரிய வந்தது. பணத்திற்காக விற்கப்படும் அடிமாட்டு அடிமைகளாயிருந்து, மக்களின் குரூர ரசனைக்காக சண்டையிட்டு மடியும் க்ளாடியேட்டர்களைப் பற்றி அப்போதே படமெடுத்து விட்டார்கள் என்பது கூட பிறகுதான் தெரிய வந்தது. இந்த விஷயத்தில் Ridley Scottஐத்தான் முன்னோடியென்று நினைத்திருந்தேன்.

இரண்டு தலைமுறைகளுக்குப் பிந்தைய ஒருவன், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பார்க்கும் வகையில் தொய்வில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் சிறையிலிருந்து தப்பிக்கும் அடிமைகள் தடுப்பு சுவராக வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளை ஒரு கும்பலாகத் தலைக்கு மேல் தூக்கி, இன்னொரு தடுப்பின் மீது மோதிச் சாய்க்கும் காட்சி. என்னடா எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே என்று யோசித்தால்.. ஆம்.. அதேதான்.. விருமாண்டி க்ளைமேக்ஸ்.

எதையெதையெல்லாம் உருவலாம் என்பதற்காக சினிமாக்காரர்கள் உலக சினிமா பார்க்கிறார்கள். எதையெதையெல்லாம் உருவியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களாகிய நாம் உலக சினிமா பார்க்கிறோம். ஆஹா.. இப்படியல்லவா வாழ வேண்டும் கலை!

இந்த லட்சணத்தில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று சொல்லக் கூடாதாம். ஹாலிவுட்டைத்தான் ஹாடம்பாக்கம் என்று சொல்ல வேண்டுமாம். இந்தக் கருத்தை உதிர்த்த நடிகரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அல்லக்கை ஒருவர் இதைப் பெருமையாக வேறு சொல்கிறார். யப்பா.. சாமி.. உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா.. எங்கள் கோய்ந்த்தூர்ப்பக்கம் சொல்லும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கேக்கறவன் கேணயனா இருந்தா எரும் மாடு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..

‘கமல்ஹாசன் எதற்கு இப்படி சொன்னார்.. இது டி.ராஜேந்தர் டைப் வசனமாக இருக்கிறதே..’ என்றுதான் நினைத்தேன். டி.ராஜேந்தர் தானே நிஜத்தை மறந்து விட்டு இப்படி தன்னம்பிக்கைக் குழைச்சலாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்? உங்கள் மேலெல்லாம் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை மிச்சமிருக்கிறது அய்யா. பேசுவதை.. கொண்டாட்டங்களை.. விருதுகளை.. இவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்களேன்.. ப்ளீஸ்!

ஒரு நடிகருக்குக் குழந்தை பிறந்ததை சிங்கத்துக்கு சிங்கம் பிறந்திருப்பதாக எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொண்டாடும் ரசிகர் மந்தைகளான எங்களை வைத்துக் கொண்டு இந்தப் பேச்செல்லாம் ரொம்பவே ஓவராகப்படுகிறது! 


சும்மாயிருக்காமல் பார்த்துத் தொலைத்த இன்னொரு படம் Patch Adams. இது இன்னும் மோசம். ஹாலிவுட்டிலிருந்து இந்திக்கு வந்து, அங்கிருந்து ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவும் காப்பியடித்த முன்னாவசூல் ராஜாபாய்க்களின் மூலம்தான் Patch Adams.

Memento – கஜினி, Derailed – பச்சைக்கிளி முத்துச்சரம், Planes, Trains and Automobiles – அன்பே சிவம்.. என்று நீளும் பட்டியலைப் பற்றியெல்லாம் யாராவது பேசுவீர்களா.. ம்ம்.. மூச்ச்..!

எங்கேயோ துவங்கி, எங்கோ சென்று விட்டேன். அதனாலென்ன.. பரவாயில்லை. அப்படி எழுதினால்தானே பின்னால் உட்கார்ந்திருக்கும் நவீனாவின் கள்ளக் காதலனென்று ஒத்துக் கொள்வார்கள்!

Read more...

Friday, April 23, 2010

பாடும் நிலா பாலு.. பாட வந்த கதை!


AMIE படித்துக் கொண்டிருந்த இளைஞரான SPBக்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவு. சுமார் 17 வயதில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார் அவர். தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் அந்தப் போட்டியில் முதல் பரிசு வென்றிருந்த SPBக்கு அது மூன்றாம் வருடம். இந்த வருடமும் அவருக்கே கொடுப்பதா என்ற அயற்சியா, இல்லை வேறேதேனும் உள்ளரசியலோ தெரியவில்லை.. முதற் பரிசு வேறொருவருக்கும், இரண்டாம் பரிசு SPBக்கும் தரப்படுகிறது.

பரிசளிப்பு விழாவுக்கு வந்த பாடகி S.ஜானகி அவர்களின் முன் வெற்றி பெற்ற இருவரையும் பாடச் சொன்னபோது, இரண்டாம் பரிசு பெற்ற பையன்தான் நன்றாகப் பாடினான். அவனுக்குதானே முதற் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்று மைக்கிலேயே கடிந்து கொள்கிறார் ஜானகி. சினிமாவில் முயற்சிக்க வேண்டியதுதானே என்று கேட்கும் ஜானகியிடம், இல்லை அதெல்லாம் எனக்கு சரி வராது. நான் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்று கூறும் SPBயிடம், நானும்தான் சங்கீதம் கற்றதில்லை.. பாடவில்லையா? முயற்சி செய்தால் பாடலாம் என்று கூறுகிறார் ஜானகி.

சரியென்று சில தயாரிப்பாளர்களை அணுகும் SPBயிடம், வாய்ஸ் இன்னும் மெச்சூராகவில்லை. இன்னும் சில காலம் ஆகவேண்டும் என்ற பதில் தரப்படுகிறது. சரி இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று படிப்பை கவனிக்கத் துவங்குகிறார் SPB.

இந்நிலையில் சென்னை ஆந்திரா கிளப்பில் தேசிய அளவிலான இசைப் போட்டியொன்று நடக்க, அதில் SPBக்குத் தெரியாமல் அவருடைய அறைத் தோழர் 10 ரூபாய் கட்டிப் பதிவு செய்துவிடுகிறார். சினிமாப் பாடல்களைப் பாடக்கூடாத போட்டியது. வேறு பாடல்களேதும் தெரியாததால், அவரே தெலுங்கில் ஒரு பாட்டெழுதி, ஒரு ட்யூனையும் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார் விளையும் பயிர் SPB.

ஆல்ஃபபெட்டிகல் வரிசையில் Aவில் யாருமில்லாமலிருக்க, பாலுதான் முதல் போட்டியாளர். கண்டசாலா மாஸ்டர், நாகேஸ்வர ராவ், தட்சிணா மூர்த்தி முதலிய நடுவர்களின் முன்பு கண்ணை மூடிக் கொண்டு பாடிவிட்டு வந்து அமர்ந்து விடுகிறார் SPB.

குள்ளமான, வெளுத்த மனிதரொருவர், அவரிடம் வந்து சினிமாவில் பாடுகிறாயா என்று கேட்கிறார். அம்மனிதர் தன்னை கிண்டல் செய்கிறாரென்று நினைக்கும் SPB எழுந்து கூட நிற்காமல், சினிமாவில் பாட எனக்கு விருப்பமில்லை. இங்கே பாடிவிட்டால் சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடுமா என்று கேட்கிறார். நான் சான்ஸ் தந்தால் பாடுகிறாயா என்று கேட்கிறார் அந்த மனிதர். பின்னர்தான் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர் போலிருக்கிறது என்று உணர்கிறார் SPB.

அதன்பின் தன் பெயர் கோதண்டபாணி என்றும், தான் 4 படங்களுக்கு இசையமைத்திருப்பதாகவும் கூறும் அவர், தயாரிப்பாளரிடம் SPBயை அழைத்துச் செல்கிறார். குரல் இன்னும் சற்று அமெச்சூராக இருப்பதால் ஹீரோவுக்கும் பாட வைக்க முடியாது, குழந்தைக்கும் பாட வைக்க முடியாது.. பிறகு பார்ப்போமே என்ற பதில் கிடைக்கிறது மீண்டும். முதலிலேயே This is not my cup of Tea என்றிருக்கும் SPB தன் தொலைபேசி எண்ணைக் கூடத் தராமல் வெளியேறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எப்படியோ அலைந்து திரிந்து SPBயை அவரின் கல்லூரியில் கண்டுபிடித்து விடுகிறார் கோதண்டபாணி. பாடல் ரிகர்சலெல்லாம் நடக்கிறது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. 2 மணிக்கு விஜயா கார்டன்ஸில் ரெக்கார்டிங். ப்ரொடக்ஷன் காரனுப்புகிறோம் வந்துவிடுங்கள் என்கிறார்கள் கடைசியாக.

இருந்த 3 செட்டுத் துணியில் பிடித்ததான வெள்ளை பேண்ட் சட்டையைப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறார் SPB, நண்பர் முரளியுடன். (இன்றும் SPBயின் ஸ்டுடியோவில் அசிஸ்டண்ட் ரெக்கார்டிஸ்டாகப் பணிபுரிகிறார் இந்த முரளி) மணி நாலாகியும் வண்டி வரவில்லை. நாம் பாடியது பிடிக்கவில்லை. அதனால்தான் வண்டி வரவில்லை என்றெண்ணும் SPB சட்டையைக் கழட்டப் போக, எதற்கும் ஒரு முறை ஸ்டுடியோவுக்குச் சென்று பார்க்கலாம் என்று முரளி வற்புறுத்த, சைக்கிளில் கிளம்புகிறார்கள் இருவரும்.

விஜயா கார்டன்ஸ் வாசலில் கூர்க்கா க்யா ச்சாயியே என்று முறைக்கிறார். இல்லை இவன் பாடணும் என்று முரளி SPBயைக் கைகாட்ட, ஏண்டா இங்க எல்லாரும் நடிக்கணும்னு வந்து ஏமாத்தறானுங்க. நீங்க பாடணும்ங்கிறீங்களா? போய்ப் படிக்கற வேலையப் பாருங்கடா என்று கூர்க்காவிடம் வசவு வாங்குகையில் கண்களில் நீர் முட்டுகிறது SPBக்கு.

இல்ல சார் இந்தப் பையன் வேணா இங்கயே இருக்கட்டும். ரெண்டு சைக்கிளும் இங்கயே இருக்கட்டும். நான் உள்ள போய் ப்ரொடக்ஷன் ஆளக் கூட்டி வரேன். அப்றமாவது அனுப்புங்க சார் என்று கெஞ்சும் முரளி, பலத்த யோசனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார். பின்னர் நிஜமான ப்ரொடக்ஷன் ஆள் வந்து சொன்ன பிறகு SPB உள்ளே கூட்டிச் செல்லப்படுகிறார்.

வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று கோபப்படுகிறார் கோதண்டபாணி. அதன்பின் தான் அனைவருக்கும் தெரிய வருகிறது. அவர்கள் அனுப்பி வைத்த கார் ஒரு விபத்தில் சிக்கி காவல் நிலையத்தில் இருப்பது.

ரெக்கார்டிங் போகும் முன், தயரிப்பாளர் பத்மனாபன் SPBயிடம் தம்பி நல்லாப் பாட்ற.. மைக்ல கேக்கும் போது ஒருவே…ள எங்களுக்குப் பிடிக்காமப் போனா கண்டசாலா மாஸ்டர வச்சு டப் பண்ணிக்கிறோம்.. என்கிறார். போகும்போதே இப்படி சொல்லிவிட்டாரே என்று அரை மனதோடேயே செல்கிறார் SPB.

Cubicle வசதிகளில்லாத நாட்களவை. குறைந்தது நாற்பது லைவ் ஆர்ட்டிஸ்ட்களிருக்கும் ஒரே ஹாலில் முதல் பிட் பாடவேண்டும். அது முடிந்த பின்னர் கட் செய்து, அடுத்த பிட் எடுக்க வேண்டும். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு முதல் பிட்டைப் பாடுகிறார் SPB.

அடுத்த பிட்டுக்கு போகும் முன் ரிசல்ட் வந்தாக வேண்டும். உள்ளேயிருந்து இப்போதுவரை எந்த செய்தியும் இல்லை. உடன் பாடிய சுசீலா அவர்கள் நல்லாப் பாட்ன தம்பி.. அநேகமா இன்னொரு டேக் எடுக்கறதுக்கு யோசிக்கறாங்க போலிருக்கு என்கிறார். நொடிக்கு நொடி டென்ஷன் எகிறுகிறது நம்மாளுக்கு.

திடீரென்று எல்லோரும் உள்ளே வந்து இந்த் டேக் ஓகே.. நல்லாப் பாட்னப்பா.. என்கிறார்கள். 150 ரூபாய் சம்பளப் பணம் தரப்படுகிறது SPBக்கு.

இதுதான் 3 மாநிலங்களில், 30 வருடங்களில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் பொருந்திய ஒரே ஒரு குரலின் அசாத்தியம் நிகழக் காரணமாக இருந்த கதை.

குரலைக் காப்பாற்றுவதற்காக நிகழும் மெனக்கெடல்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் எந்த விதமான முயற்சிகளுமில்லாமல், ஐஸ் வாட்டர், தயிர், கூல் ட்ரிங்க்ஸ்.. ஏன்.. முப்பது வருடமாக புகைப்பழக்கம் கூட இவர் குரலை ஒன்றும் செய்யவில்லை என்பது சாமி சத்தியமாக அதே சாமியின் அருளேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்கிறார் SPB. வேறென்னவாகவுமே இருக்க முடியாது என்று நானும் நம்புகிறேன். பொறாமையுடன்.

தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பிடித்த, மிகச்சில ஆளுமைகளுள் ஒருவர். இத்தனை திறமையிருந்தும், அத்தனை புகழிருந்தும், எத்தனையோ பணமிருந்தும், தலைக்கனமில்லாமல், எளிமையே உருவாய் இருப்பதற்கு நான் ஆதர்ஷமாகக் கருதும் இருவரில் ஒருவர்.

இன்னொருவர் AR Rahman!

Read more...

Monday, April 5, 2010

அங்காடித் தெரு - தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் கொஞ்சமாய் பதிவு செய்திருந்த ‘தரமான திரைப்படங்கள் நம் புறத்தே உருவாகாமலிருப்பதற்கான’ என் ஆதங்கத்திற்குக் கிடைத்த ஒரு பதிலாகவே நான் அங்காடித் தெரு-வைக் கண்ணுறுகிறேன்.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியோ, பின்னணி இசையின் தரம் பற்றியோ, கதையின் நேர்த்தி பற்றியோ, நேர் மற்றும் எதிர் மறையான இன்னபிற எந்தக் காரணிகளையுமோ அலசிக், கொடியில் தொங்கப் போடுவது என் நோக்கமல்ல.

அன்றி, வணிகக் கட்டுப்பாடுகளின் கொடுங்கரங்கள் இயக்குனரின் குரல்வளையை இறுகப் பற்றிக் கொண்டிருக்க, கத்தரியைக் கூர் தீட்டிக் கொண்டு சென்சாரார்கள் கண்ணில் விட விளக்கெண்ணெய் தேட, அரசியல்வாதிகளும், மதவாதிகளும் வக்கீல் நோட்டீஸ் அச்சடிக்க ஆளுக்கொரு பிரசுரம் வைத்திருக்க..

நீளும் இப்பட்டியலின் வேலிகளைத் தாண்டி தரமான, யதார்த்தமான, சமகால வாழ்வின் கரும் பக்கங்களைப் பதிவு செய்து வைக்கும் வகையில் படமெடுக்கும் திறனுள்ள, தைரியமுள்ள படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும் என்றால், தமிழ் சினிமாவின் ரசிகப் பெருமக்களான நாமனைவரும் தயவுசெய்து திரையரங்குக்குச் சென்று அங்காடித் தெரு-வைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துதான் இந்தப் பதிவு.

பனி பொழியும் பின்னிரவுகளில் ஏதேனுமொரு மேலை நாட்டுத் திரைப்படம் முடிந்து மனம் அழுந்தி, கனக்கும் சமயத்தில், ஏன் நம் பிரதேசத்தில் இவை போன்ற படங்கள் உருவாவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதை எத்தனையோ முறை உணர்ந்துள்ளேன். ஒருவாறு ஆற்றிக் கொண்டு சென்னையின் மேன்ஷன்களில் தூங்காமல் ஓரிரு அசிஸ்டண்ட் டைரக்டர்களேனும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தூங்கப் போய் விடுவேன்.

வணிகப் படங்கள் கெட்ட படங்கள்.. புதுமையான படங்கள்தான் நல்ல படங்கள்.. என்ற கருத்தை நோக்கி உங்களைத் தள்ளுவது என் பணியல்ல. உங்களுடைய சுயவிருப்பில் என் மூக்கு நுழைவது எனக்கு உவப்பானதுமல்ல. அவரவர்களுக்கு எதெது வேண்டுமென்பதைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பமேயொழிய எவரும், யாரையும் கட்டுப்படுத்தத் தேவையில்லை.

ஆனால் நான் கேட்பது இதுதான். இது மட்டுந்தான். வேட்டைக்காரனையும், ஆதவனையும், அவனையும், இவனையும் எப்படி உளம் நிறைந்த உவகையுடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கிறீர்களோ.. அதே போன்றதொரு அங்கீகாரத்தை அங்காடித் தெரு-வுக்கும் நீங்கள் வழங்க வேண்டும். இதைச் செய்யத் துவங்கினீர்களானால், வணிகப் படங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார ஆதரவுகள், மாற்று சினிமா உருவாக்கத்துக்கும் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாக ஏதுவாக இருக்கும்.

இங்கே நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான் சிலாகித்துக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு என்ற இத்திரைப்படம் உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். அதனால் என்ன.. போகட்டுமே. ஒரு பரிசோதனை முயற்சியின் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமல்லவா. அது தோல்வியாகவே இருப்பினும், அடுத்த எட்டிலாவது வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க குறிப்பிட்ட அந்தப் படைப்பாளிக்கு நீங்கள் செலவு செய்யும் பணம் சிறிதளவேனும் உதவி செய்யும்.

இந்தப் படத்தில் குறையே இல்லையென்றோ, 100 சதம் எனக்கிந்தப் படம் பிடித்தது என்றோ நான் கூறவில்லை. இவ்வகையான படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் நாம் அங்கீகரிக்கத் துவங்கும் புள்ளியில்தான், வித்தியாசமான முயற்சிகளுக்கு முதல் போட்டாலும், போட்ட காசு வரும் என்ற நம்பிகையை தயாரிப்பாளருக்குள் முளைவிடச் செய்யும் விதைப்புள்ளியாக இருக்கும்.

ஏதோ தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களிடம் காசே இல்லாதது போல், இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்ததும், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி, கோடிகளைக் குவித்த so called மசாலாப் படங்களும் நம் சினிமா ரசனைக்கு சான்றுகள்! உங்களுக்கெப்படியோ தெரியவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இதை உலக சினிமா ரசிகனாக சொல்லவில்லை. வசந்தபாலனின் அடுத்த திரைப்படத்தை, இன்னும் ஆவலுடன் (அவரது இயக்கத்துக்காகவா, இல்லை அடுத்த படத்தையாவது பெட்டிக்குள் முடக்காமல் வெளியிட மாட்டார்களாவென்ற ஏக்கத்துக்காகவா என்று தெரியாமலே) எதிர்பார்க்கத் துவங்கியிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனாக சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பு: தமிழ் சினிமாவின் தரம், கலைப்படம், வணிகப்படம் போன்றவை குறித்தான சில வீடியோக்கள் பகிர்தலுக்காக:

http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g
http://www.youtube.com/watch?v=WswDvFJqjvA
http://www.youtube.com/watch?v=VyYYAyzbhKs

Read more...

Tuesday, March 23, 2010

நஞ்சில் நனைந்த வரலாற்றுத் தடங்கள்


'பிரபலமாவது எப்படி?' என்ற கேள்விக்கான பதிலை நாம் அனைவரும், அவரவருக்கு இயன்ற அளவில், தத்தமது பிரக்ஞைக்கு உட்பட்டோ, படாமலோ தேடியலைந்து கொண்டேதானிருக்கிறோம். அலுவலகத்தில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்து ஆர்க்குட்டில் புகைப்படங்களை ஏற்றுவது, GTalkன் ஸ்டேடஸ் மெஸேஜில் ரெண்டு வரி கவிதையில் மேதாவித்தனத்தைக் காட்டுவது என்பவை நானறிந்த வரையில் யோசிக்க சிரமமில்லாமல் சிக்கிய உதாரணங்கள்.

ஓரளவுக்கு சீன் போடவே இத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்க, ஒரு பிராந்தியத்தையே, ஏன் நாட்டையே தன் சொல்பேச்சுக்கு ஆட்டுவிக்கும் அளவுக்கு ஒரு குறியீடாக உருப்பெற எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கும். எம்ஜியார், ரஜினி, கமல், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கண்கூடாக நம் சமூகம் பார்த்திருக்க, தங்களுக்கானதொரு கூட்டத்தை உருவாக்கியதோடு அல்லாமல் நம் காலத்தின் தவிர்க்க முடியாத பிம்பங்களாக இருப்பவர்களில் சில உதாரணங்கள்.

இப்படி தங்கள் திறமையினாலும் (?), இருக்க வேண்டிய இடத்தில், இருக்க வேண்டிய நேரத்தில் தங்கள் இருப்பமைந்த அதிர்ஷ்டத்தாலும் எத்தனையோ பேர் மக்கள் தலைவர்களாக வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களில் அடால்ஃப் ஹிட்லர் எனும் தனிமனிதர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் இங்கே பதிப்பித்து வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் சகோதரி தமிழ்நதி ஈழத்து நிகழ்வுகளை, The Pianist என்ற திரைப்படம் பார்த்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி உயிரோசையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையைப் படித்தபின் படம் பார்த்தேன்.

எதையாவது எழுத வேண்டும் என்று கை பரபரத்தது. படம் ஏகத்துக்கும் தமிழ்நதியின் கட்டுரை நினைவுக்கு வந்து வருத்தியதையா, ஹிட்லர் என்ற திருநாமங் கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதரொருவர் வரலாற்றின் பக்கங்களில் தாயை வன்புணர்வதினும் கொடிய காட்சிகளை விட்டுச் சென்றதையா, மீட்க முடியாத கடந்த காலம் விட்டுச் சென்றிருக்கும் உணர்வுகளை, வன்முறை வெறியாட்டத்தின் கொடும் புழுதியைப் பதித்து வைக்க சினிமா என்ற ஊடகத்தின் சக்தியை மேலைநாட்டான் இத்தனை வீரியத்துடன் பயன்படுத்துவதையா, இதில் எதையெழுதுவது என்று ஏகப்பட்ட குழப்பம். வழக்கம் போல் ஒன்றையும் எழுதாமல் விட்டுவிட்டேன்.

ஒருவன் தலைவனாகவே இருக்கட்டும். அவன் கையில் அதிகாரம் அளவின்றி ஆர்ப்பரிக்கட்டும். அவன் சொடுக்குப் போட்டால் சொம்பைத் தூக்கிக் கொண்டு கழிவறையின் முன் தேசமே காவலிருக்கட்டும். ஆனால் அவன் சொல்கிறானென்பதற்காக எப்படி ஒரு இனத்தையே அழித்தொழிக்க மனம் வருகிறது இந்த அரசு / இராணுவ அதிகாரிகளுக்கு? ஜெர்மனியாயினும் சரி. இலங்கையாயினும் சரி.

கடமையைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யுமுன் பல்லாயிரம்பேரை வேரறுக்கும் பாதகத்துக்கு ஒத்தூதியும், அதிகப் பணமும் நேரமும் செலவில்லாமல் மக்களை மாய்த்தொழிப்பதெப்படி என்பதை ரூம் போட்டு ஆராய்ந்தும்தான் ஜீவனத்தை நடத்த வேண்டுமென்ற தேவையின் திண்மை என்னவென்று யோசிக்கத் தோன்றாதா?

எதிரியென்றாலும் பரவாயில்லை. உன் நாட்டு மக்களைக் காக்க அவர்களைக் கொல்கிறாய் எனலாம். அப்பாவிப் பொதுமக்களைப் போய் கொல்வானேன்?

The Pianist படத்தின் நாயகனான யூதனொருவன், நாஜிக்களுக்கு பயந்து ஓடுவான். ஓடுவானென்றால் ’ஓடுவான்’. அப்படி ஒரு ’ஓடுவான்’! உயிருடனிருக்க வேண்டும் என்பதைத் தவிர உயிருடனிருப்பதின் நோக்கம் வேறேதுமில்லை என்ற அவனது ஓட்டத்தின் முரண்நகையை அத்தனை அழகாகக் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குனர் Roman Polanski.

2002ல் வந்த திரைப்படம். 1945ஐ அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பார்கள் ஒவ்வொரு அங்குலத்திலும். அந்தக் காலத்து ரயில் என்ஜினையெல்லாம் எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை.

பார்ப்போம். 'அவனிடம் காசிருக்கிறது.. செய்கிறான்..' என்ற சப்பைக் கட்டையே இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என்று. இப்பேர்ப்பட்ட படங்களை எடுக்கக் காசைத் தாண்டிய பேருழைப்பும், சிரத்தையோடு ஒரு நாவலெழுதும் எழுத்தாளனுக்கிருக்கும் அர்ப்பணிப்புணர்வும் தேவை என்பது நிதர்சனம்.

ஒரு காட்சியில் அவனை சந்தேகத்திற்குரியவன் என்று அடையாளங்கண்டு கொள்ளும் நடுத்தர வயது ஜெர்மானியப் பெண்மணி அவளின் கண்களில் காட்டிய குரூரம், ஹிட்லருக்கு மட்டும்தான் பித்தேறியிருந்ததா இல்லை ஒரு தேசத்தையே இனப்பித்து ஆட்டிவைத்திருந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது எனக்குள்.

அதோடு விட்டேனா? நானும் சும்மாயில்லாமல் Life is Beautiful, Defiance மற்றும் சமீபத்தைய Inglorious Basterds எல்லாம் பார்த்தேன். பார்க்க வேண்டிய பட்டியலோ Black Book, Europa Europa, The Longest Day, இன்னும் பலவென்று நீள்கிறது.

ரத்தத்தை நக்கிய பூனை மனதானது எனது. நாராய்க் கிழியும் நரம்புச் சரடுகளை சதைக் கூழில் குழப்பி விளையாடுவதைக் காண்பதில் ஒருவித ருசி. சிந்தித்துப் பார்க்கையில் வன்முறையைக் கையெடுப்பதன் விளைவுகளையும், குருதிச் சூடு குறையாமல் இருக்கும் பூமியின் கண்ணீரையும் குறைந்தபட்சம் நான் மறவாதிருக்கவேனும் இந்த வகைப் படங்கள் உதவுகின்றன என்று ஆற்றிக் கொள்கிறேன்.

The Pianistஐப் போலவே உண்மைச் சம்பவத்தைத் தழுவியெடுக்கப்பட்ட Defiance படத்தில் காட்டுக்குள் ஓடியொளிந்து வாழும் இரு சகோதரர்களை நம்பி அவர்களுடன் சிறிது சிறிதாக இணையத் துவங்கி, 1500 பேராகப் பெருகிவிடும் யூதப் பொதுமக்களின் கதை. ஆயுதங்களைத் திருடி முடிந்தளவுக்குப் போராடுவார்கள். அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு அடர் வனத்தினுள் 'வாழ்ந்து' வருவார்கள். அவ்விதிகளுள் ஒன்றின்படி பெண்களெவரும் கருத்தரிக்கக் கூடாது. சோறில்லாத பிரச்சினை மற்றும் கர்ப்பிணிகளை வைத்துக் கொண்டு போரிடவும், ஆபத்து வருகையில் ஓடித்தப்பவும் முடியாது என்பதால்.

இப்படியொரு நிலையில் தான் கருத்தரித்திருப்பதாக சக சகியிடம் சொல்லியழுவாள் ஒருத்தி. இது தப்பில்லையா என்று கேட்பவளிடம் சொல்வாள் கர்ப்பிணி, ’உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை’யென்று. நினைவிலிருந்த காட்சிக்கு நானே என் வார்த்தைகளைப் போட்டிருப்பதால் காட்சியின் இறுக்கத்தை எழுத்துகளுக்கு இடையிலிருக்கும் இடைவெளி கொண்டு விளக்க முடியவில்லை. திரையில் நெருடிக் கிழிக்கிறது வலி.  

என் சகோதரி காயத்ரி சொன்னாள். 'ஜெர்மனி மேட்டர் கொஞ்சம் ஓவர் டோஸாயிடுச்சுடா..' என்று. ஹாலிவுட்டில் யூதப்படுகொலையை மையமாகக் கொண்டே அதிகப் படங்கள் எடுத்து விட்டார்கள் என்ற அர்த்தத்தில். என்னைக் கேட்டால் இந்த ஓவர் டோஸ் நமக்குள்ளும், நம் சமூகத்தினுள்ளும் புரையோடியிருக்கும் நேயமின்மையையும், வன்முறையையும் கணக்கிடும்போது மிக மிகக் குறைவேயென்று சொல்வேன்.

இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், இன்னும் எத்தனையாயிரம் பக்கங்கள் இந்தக் கொடுமைகளைப் பேசினாலும் லட்சம் பேரைக் கொன்ற வன்மமும், ஒரு இனம் 5 ஆண்டு காலம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டோடிய கொடூரமும் நாம் மறக்கக் கூடியவையில்லை என்பதற்காக.

செய்ய வேண்டியவைகளைக் காட்டிலும், செய்யக் கூடாதவைகளை நினைவுறுத்துவதுதான் இன்றைய தேவையாயிருக்கிறது.

Read more...

Monday, August 17, 2009

ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி!


ஒரு ஆதிக்க சக்தியாகவே அங்கீகரிக்கப் பெற்றுவிட்ட சக போட்டியாளனின் புகழுக்கு முன்பு, ஏனையோரின் திறமைகள் போதுமான கவனத்திற்குட்படாமல் போவது இயல்பாக நிகழும் துரதிர்ஷ்டம். சச்சின் - சவுரவ். SPB - மனோ. ஏன்.. என்னைப் பொறுத்தவரை ரஜினி - கமல் கூட. இந்தப் பட்டியலில், பாடகி ஸ்வர்ணலதாவை எவரோடு சேர்ப்பதென்று தெரியவில்லை. குறிப்பிடும்படியான எந்தவொரு காரணமும் பிடிபடவில்லை இவருக்கு போதுமான அளவு அடையாளம் கிடைக்காமற் போனதற்கு.(ஒரு நல்ல புகைப்படம் கூட இணையத்தில் இல்லை)

எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற எல்லாரையும் விட எனக்கேனோ ஸ்வர்ணலதாவை அதிகமாய் பிடிக்கிறது. உயிர்ப்புடன் உணர்வுகளை இழையோட்டும் சாரீரம் தரக்கூடிய அனுபவங்களை அநாயாசமாக சாத்தியப்படுத்துகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். ஸ்ருதியைப் போலவே அக்ஷரமும் சுத்தம்!

காதல் பாடல்களில் இவர் குரலோடு சில்லிடும் ஒரு மென்புன்னகை என் காதுகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது.(பார்வை ஒன்றே போதுமே படத்தின் துளித் துளியாய், காதலர் தினத்தின் காதலெனும் தேர்வெழுதி, ஜென்டில் மேனின் உசிலம்பட்டி பெண்குட்டி)

ரொமாண்ட்டிக் பாடல்களில் துளிரும் காமமும், உடன் ஒழுகும் தாபமும் பெண்ணுணர்வை இயல்பாகப் புலப்படுத்துகின்றன.(உழவன் படத்தின் ராக்கோழி ரெண்டு, தர்மதுரை படத்தின் மாசி மாசம் ஆளான பொண்ணு)

பிரிவை முன்னிறுத்தும் பாடல்களானால், செவிப்படலத்தில் குறுகுறுக்கும் ஏக்கம் பின்னோடுகிறது. (அலை பாயுதேவின் எவனோ ஒருவன் வாசிக்கிறான், என் ராசாவின் மனசிலே குயில் பாட்டு ஓ வந்ததென்ன)

போலவே துள்ளலான பாடல்களின் போது பொங்கும் ஆரவாரத்தை அப்படியே குரல் வழி கடத்தி நம்முள்ளும் பாய்ச்சுகிறார். (கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆட்டமா தேரோட்டமா, இந்தியன் படத்தின் அக்கடானு நாங்க உட போட்டா, சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி)

இப்படி எவ்விதப் பாடலானாலும் அழுந்தப் பதியும் இவர் முத்திரை அளவுக்கு வேறெவரிடமும் எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை.

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா, ஸ்வர்ணலதாவுக்குப் போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்பது என் கருத்து. சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பேச-வும், அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே-வும் தவிர்க்க முடியாத பாடல்கள்.

ராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடி அதிகம் பிரபலமாகாத சில நல்ல பாடல்கள் - பெரிய மருது படத்தின் விடல புள்ள நேசத்துக்கு, சக்திவேல் படத்தின் மல்லிக மொட்டு மனசத் தொட்டு, பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே மற்றும் கானகருங்குயிலே.

ரஹ்மானிடம் கேட்டீர்களானாலும் என்னைப் போலவே அவரும் ஸ்வர்ணலதாவை அதிகம் பாராட்டுவார் என்பது அவர் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்த அதிக எண்ணிக்கையிலான மற்றும் தரமான வாய்ப்புகளிலிருந்து தெரிய வருகிறது. தனிப்பாடல்கள் தவிர்த்து ரஹ்மானின் நிறையப் பாடல்களில் அங்கங்கே ஸ்வர்ணலதாவின் குரல் ராகமிழுத்துப் போகும். உதாரணத்துக்கு அந்த அரபிக் கடலோர-த்தின் ஆரம்பத்திலும், இடையிலும், பாடியது யாரென்று பலருக்கும் தெரியாத ஹம்மிங்கும், பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலுக்கு முன்னும், பின்னும் ஒலிக்கும் கண்ணில் ஒரு வலியிருந்தாலு-ம்.

சற்றேறத்தாழ ரஹ்மானின் எல்லாப் படங்களிலுமே ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

இந்தியனின் மாயா மச்சிந்திரா பாடலின் இரண்டாவது சரணத்தில் "அஜ்ஜிமா.. ச்செல்ல புஜ்ஜிமா" என்ற வரியை இவர் பாடிக் கேட்கையில், இதை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே காதலனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளும் காதலியின் தோற்றம் நினைவுக்கு வருகிறது. புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.

சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கில் பாடியிருப்பது அழகு. முத்தாய்ப்பாக சரணங்களுக்கு இடையில் அவர் சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பு, அது சொல்லும் வெட்கம், அதிலிருக்கும் எள்ளல் போன்ற எதைப்பற்றியும் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடலுக்கிடையே அளவான, அழகானதொரு சிரிப்பை உதிர்ப்பதில் SPBயும், ஜானகியும் பேசப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாத சிரிப்பு ஸ்வர்ணலதாவினுடையது.

இத்தனை சிறப்புகள் இருந்தும், ஆறு மொழிகளில் தடம் பதித்திருந்தும் கூட சமீப காலங்களில் இவர் வாய்ப்பில்லாது இருப்பது, அவருக்கல்ல.. நமக்குத்தான் குறை. செய்யும் வேலையை முழு விருப்புடன், ஈடுபாட்டுடன் தருவதுடன், படைப்பின் தரத்துக்கான உறுதியைப் பலமுறை நிரூபித்திருக்கும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு இனியேனும் முன்போல் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

மேற்குறிப்பிட்டவை அல்லாத, எனக்குத் தெரிந்த மற்ற சில இனிய பாடல்கள்:

பாடல் - படத்தின் பெயர்

போவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே - சின்னதம்பி
மலைக்கோயில் வாசலில் - வீரா
என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
என்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
காலையில் கேட்டது - செந்தமிழ் பாட்டு
ராக்கம்மா கையத்தட்டு - தளபதி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி
ராஜாதி ராஜா உன்- மன்னன்
ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
உளுந்து வெதக்கையிலே - முதல்வன்
ஹாய் ராமா - ரங்கீலா
சொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா
மெர்க்யூரிப் பூக்கள் - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மெல்லிசையே - லவ்பேர்ட்ஸ்
முக்காலா முக்காபுலா - காதலன்
குளிருது குளிருது - தாஜ்மஹால்
அஞ்சாதே ஜீவா - ஜோடி
முத்தே முத்தம்மா - உல்லாசம்
ஒரு நா ஒரு பொழுது - அந்திமந்தாரை
திருமண மலர்கள் - பூவெல்லாம் உன் வாசம்
திலோத்தமா - ஆசை
அந்தியில வானம் - சின்னவர்
விடை கொடு விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்

க்ளிக்கினால் பாடலைக் கேட்கலாம்.

Read more...

Tuesday, August 11, 2009

கமல்ஹாசன்! - வேறென்ன சொல்ல?

கமல்ஹாசன் என்ற ஆளுமையைப் பற்றிய பிம்பம் நினைவுக்கு வந்தவுடனேயே, கட்டறுப்புகள் எவற்றுக்கும் அஞ்சாத ஒரு பாசாங்கின்மையும், உள்ளேயிருப்பதன் சாரத்தை முகமூடிகளுக்குள் பதுக்கி வைத்து கள்ளம் ஒழுக கொஞ்சம், கொஞ்சமாய் துப்பாத தன்மையும், சுய சார்புகள் யாவற்றுக்கும் பிடி கொடுக்காமல் நிஜத்தை, எதார்த்தத்தை விசிறியடிக்கும் வார்த்தைகளில் 'இதுதான் நான். என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ள யோசிக்கும் சுதந்திரம் உங்களுக்கேயானது' என்று நான் கடைப் பிடிக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்த முதிர்வும், இப்படி நீளும் சில காற்புள்ளிகளும் வந்து மறைகின்றன.

சினிமா என்ற வணிக வட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், "கமல்றா.." என்று அருகிலமர்ந்திருக்கும் குணச்சித்திர மாமாவின் வயதையும் பொருட்படுத்தாது, திரையரங்கில் நான் அடிக்கும் விசில்கள், நம்மனைவருக்குமே இதுபோன்ற ஒருசார்புடைமைகள், காரணங்களுக்கு அப்பாற்பட்ட விருப்பக் கூறுகள் இருத்தல், அன்றாட கழிசடைகளினின்று சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும் உதவும் என்ற காரணத்துக்காக ஒப்புக் கொள்ளலாம்.

கீழ்க்கண்ட நகரொளிப் படத்தைப் (வீடியோ!) பாருங்களேன். மிடுக்கும், கம்பீரமும், தேஜஸும் வேண்டாம், வேண்டாமென்று விரட்ட, விரட்ட வந்தமர்கின்றன விரலசைவில்.




ஆரம்பமே அசரடிக்கிறது. வந்து நின்றவுடன் "ஆழ்வார்பேட்ட தெய்வமே.." என்றொருவன் கத்துகிறான். "எனக்கதுல நம்பிக்க கெடையாது" என்ற வாசகத்தை எதிர்பாராதவொரு நிகழ்வின் எதிர்வினை என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் கொணராது கூறி, அதே அசந்தர்ப்பத்தை, "நம்பிக்கையென்பது இந்த மேடையைப் பார்க்கும்போது வருகிறது" என்று தன் பேச்சுக்கான முதலடியாக்கித் தடாலடியாகத் தொடங்கும் அச்சுப் பிசகாத்தனத்தை ரசிக்காமல் இருக்க முயன்று தோற்பதில், என் ரசனை மெருகேறுகிறது.

"என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே" என்ற வாசகத்தை அவை வணக்கக் குறிப்பின் இறுதி வரியாகச் சேர்த்து ஒவ்வொரு மேடையிலும், கைதட்டல் வாங்கத் தெரியாத கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பேசிய பின் கடைசியாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதால் தமிழ் சினிமாவுலகின் மனுநீதிக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை தமிழினம் ஏற்கலாமா? கூடாது! வலிந்து திணிவுறப் பெற்ற இந்நாகரீகங்களுக்கான கமலின் புன்னகை, பக்குவத்தின் உதட்டில் வீற்றிருக்கும்.

'காற்றோடு புணரும் அசைவுகளை'க் கண்டு, உளம் மிகுந்த உவகையுடன் "வசந்த்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா"வினைக் குப்புறப் போட்டுப் புணருபவர்கள், கவிதைக்கு மிக அருகிலான அவ்வாசகத்தின் ஆழ்அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயன்றிருந்தால் குணாவும், மகாநதியும் குப்புறப் படுத்திருக்கத் தேவையிருந்திருக்காதே.

போதைப் பொருள் விற்கும் கும்பலில் தன்னையும் சேர்த்துக் கொண்டு, அவதூறை அள்ளிப் பூசிக் கொண்டு அவர் பங்கு போட்டுக் கொள்ள முன்வரும் சகோதரத்துவம், கமர்ஷியல் சினிமாக்காரர்களுக்கான கமலின் கொடை. அப்படி சம்பாதித்ததை காதலோடு ஒரு பிரதேசத்தின் சினிமாவை, அதன் தரத்தை மேடுறுத்தப் பாடுபடும் கமலுக்கும் கொஞ்சம் செலவழித்து, நன்றி செலுத்தலாம் இவர்கள்.

அமீரின் அளவு மறந்த பாராட்டுக்கொரு பதிலாக, "இது பணிவு அல்ல!"
அடக்கத்துடன் "மொழி யார்ட்டேர்ந்து எடுத்தா என்ன?"
உச்சமாய் எனைக் கவர்ந்த "கொக்கு கொண்டோந்து போட்டதில்லையே!"
என்று நயம் மிளிரும் மற்றும் கருத்தாழ்ந்தவைகளை வரிக்கு வரி எழுதச் சொன்னாலும், நான் தின்னும் கரும்பு, படிப்பவர்களுக்கு அலுப்பைக் கூலியாக்கி விடுதல் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு சொல்தேர்ந்த பேச்சுக்குரிய எல்லா அலகுகளும் அளவு குறையாது இணைந்திருக்கும் கமல்ஹாசனின் எல்லாப் பேச்சுகளிலும் ஆங்காங்கு ஏற்படும் தடுமாற்றங்கள், முன் தயாரிப்பில்லாத பேச்சின் விளைவே ஒழிய, அத்தடுமாற்றங்களின் பொருட்டு உரையின் சுவாரசியம் குறைவதாக எண்ணி விடுதல் சரியாகாது.

குறிப்பு: http://www.youtube.com/watch?v=vuL9PBPxepc - யில் மேற்கண்ட வீடியோவில் இல்லாத சில பகுதிகளைக் காணலாம்.

Read more...

Sunday, January 11, 2009

ஹேராமும், நானும், நீங்களும்..!

ஹேராம், ’இயக்கம் - கமல்ஹாசன்’ என்று "பெயர் போட்டு" வெளிவந்த முதல் திரைப்படம். ஏன் இப்படி எடுத்த எடுப்பிலேயே கமல்ஹாசனின் பொய்மையைச் சுட்டுகிறேன் என்றால், அவர் படங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த இன்னொரு படமான குணா ’இயக்கம் - சந்தான பாரதி’ என்ற அடையாளத்துடன் களமிறங்கியது.

ஒரு கலைஞன் அவன் படைப்பொன்றைப் பொதுவில் வைக்கிறான் என்றால், அப்படைப்பு விளைவிக்கும் பொருளாதார மற்றும் கலையாதார சாதக, பாதகங்களை நேர்கொண்டு எதிர்கொள்பவனாக இருத்தல் வேண்டும். கமலுக்கு இந்த தைரியம் இல்லையென்று கூறவில்லை. ஆனாலும் குணா போன்ற ஒரு தரமான படத்துக்குத் தன்பெயரைப் போடுவதில் அவருக்கு அப்படி என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.

ஒருவேளை மணிரத்னத்தின் தளபதி வெளியான நாளில் திரைக்கு வந்து, கடுமையானதொரு போட்டிச் சூழலை சந்திக்க வேண்டியிருந்ததால், எதற்கும் சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம் என்று பினாமி பெயரைப் போட்டாரா அதுவும் விளங்கவில்லை. இவரளவுக்குத் திறமை இருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்லை என்பது என் போன்றோரின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை எனக்கிருப்பதை விட கமலுக்கு இருத்தலே தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.

எனதிந்த நம்பிக்கைக்கு உரந்தூவி வளர்த்தெடுத்த திரைப்படம் ஹேராம். இப்படி ஒரு படைப்புதான், தான் நேசிக்கும் சினிமாவுக்கு தான் இயக்கிய முதல் படமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு ஆசையில்தான் குணாவை பினாமிக்கு விட்டுக்கொடுத்தாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என்னைக் கவர்ந்தது ஹேராம்.

ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.

1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.

ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.

என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்.

கலவரம் முடிந்த காலை. ஊரே பிணக்காடாகக் காட்சியளிக்கையில், அதைக் தாளாத சாகேத்ராமன் (கமல்ஹாசனின் பாத்திரப்பெயர்) ”அம்ம்மா.. அம்ம்மா..” என்று வாய் திறக்காமல் சொல்லிக்கொண்டே அழும் காட்சி, கவிதை. Saving Private Ryan (1998) என்று ஒரு ஹாலிவுட் திரைப்படம். Steven Spielberg இயக்கியது. போரின் கொடுமைகளைப் பற்றியெடுக்கப்பட்ட படங்களில் உலகின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அதில் ஒரு காட்சி வரும். அடிபட்டு, உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரன், ”Mammma.. Mammma..” என்று நடுங்கியபடியே உயிர்விடுவான். Saving Private Ryan பார்க்கையில் எனக்கு ஹேராம் தான் நினைவுக்கு வந்தது. Wise Men Think Alike என்பது இதுதானோ.

கலவரம் முடிந்த சமயத்தில் ஒரு காட்சி. அங்கே கட்டப்பட்டிருக்கும் யானை, அதன் பாகனையே கொன்றுவிட்டு, அவன் பிணத்தின் அருகிலேயே அமைதியாக நின்றிருக்கும். ’சாதியென்ற யானையை வளர்த்தெடுத்த மனிதர்களின் பிணங்கள் ஊரெங்கும் கிடக்கையில் இன்னும் இங்கு அமைதியாக, ஒன்றும் தெரியாத யானையைப் போல, சாதியும் நம்மிடையே நின்று கொண்டுதானிருக்கிறது. மதம் யானைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை மனிதனுக்குப் பிடித்திருக்கிறதா?’ போன்ற அக்கறைகளை அந்த அரைநொடிக் காட்சியில் சூசகமாகச் சொல்லியிருப்பார் கமல்.

கொல்கத்தாவுக்கு அடுத்து கதை பயணிப்பது ஸ்ரீரங்கம். சாகேத்ராமன் காரில் பயணிக்கும் போது, கூட வரும் பாஷ்யம் மாமாவுடன் பேசிக்கொண்டு வருவார். அப்போது காரணமே இல்லாமல் சாகேத்ராமன் காருக்கு வெளியே எட்டிப் பார்ப்பார். அங்கே அவர் பார்ப்பது ஸ்ரீரங்கம் கோயில் யானை. மண்டபத்துத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டு சாந்தமே வடிவாய் நின்றிருக்கும். அங்கே இந்து, முஸ்லிம் பிரச்சினைகளில் வட இந்தியா எரிந்து கொண்டிருக்கும் காலத்திலும், தென்னிந்தியா எவ்வளவு அமைதியாக இருந்தது என்பது புலனாகும் இந்தக் காட்சியில். அங்கே பாகனைக் கொன்ற யானையை நினைவுபடுத்திக் கொள்க.

மைதிலியைப் பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் அவள் தம்பிக்கு 5 வயதாகக் காட்டி, அந்தக் காலத்துத் தமிழகத்தின் குடும்ப அமைப்பில் இருந்த ஒழுங்கின்மையைச் சொல்லியிருப்பார். இந்தத் தம்பிக்கும், படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும், சின்ன விஷயத்தையும் சொல்ல விழைந்த முனைப்பு, அழகு.

முதலிரவில் பால் வேண்டாம் என்று கூறும் சாகேத்ராமனிடம் மைதிலி, ”ஏன்.. டாக்டர் ப்ப்டாதுன்னூட்டாரா..?” என்று கேட்கும் கேள்வியின் அழகை ரசிக்கும் ரசனை, சராசரி தமிழ் ரசிகனுக்கு வரும் காலம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.

நீ பார்த்த பார்வை பாடலில், ஆரம்பத்தில் வரும் String-ஐ பியானோவில், சாகேத்ராமன் ஒரு கையால் வாசிக்க, அபர்ணா ஒரு கையால் வாசிப்பாள். அபர்ணா இறந்த பின்பு, சாகேத்ராமன் அவன் பங்கை மட்டும் வாசிப்பது, துக்கத்தையும் அழகாகக் காட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

படத்தில் சாகேத்ராமன் இரண்டு முறை உறவு கொள்வது காட்டப்படும். ஒன்று அபர்ணாவுடன். இன்னொன்று மைதிலியுடன். அபர்ணாவுடன் அழகாக, ரசனையாக, அனுபவிப்பதைப் போலவும், ஆனால் மைதிலியுடன் மூர்க்கத்தனமாகக் கொள்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். இந்த இரு கலவிகளுக்கும் இடையேதான் சாகேத்ராமன் சாதிக்கலவரத்தின் கொடூரத்தை சந்தித்திருப்பான். வன்முறையும், தீவிரவாதமும் சராசரி மனிதனின் ஆழ்மனதிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொன்னவிதம் புதுமையிலும், புதுமை.

அத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று சாகேத்ராமனுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மகாத்மாவைக் கொல்லத் துடிக்கும் அவன் மனதின் குரூரம், உறவு கொண்டிருக்கையில், அவன் மனைவி மைதிலியே அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் போலத் தெரிவதில் சொல்லப்பட்டிருக்கும்.

வயதான சாகேத்ராமனின் நினைவில் ஓடும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருப்பவையே, நாற்பதுகளின் காட்சிகள் என்பது நாமறிந்த ஒன்று. தற்காலக் காட்சிகள் கருப்பு, வெள்ளையிலும், Flash Back காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாத்தா சாகேத்ராமனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், டிசம்பர் 6-ன் பொருட்டு நிகழும் சாதிச் சண்டைகளின்போது வெடிக்கும் குண்டுகளும், எரியும் தீயும் மட்டும் வண்ணத்தில் இருக்கும். இது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்ன பதில்:

”தற்காலத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளை என்று பிரிக்கிறோம். Grey Areas-ஐ மறந்திருக்கிறோம். அதனால் நேர்மையென்ற வண்ணமிழந்திருக்கிறோம். ஆனால், சாதியென்ற தீ மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது” என்று காட்டவே அவ்வாறு படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இப்படி படம் நெடுகக் குறிப்பாலுணர்த்தப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

உயிர் பிரியும் வேளையிலும் சாகேத்ராமன் அவரைக் கொண்டுசெல்லும் வண்டிக்கு வெளியே நடக்கும் சாதிச்சண்டைகளைக் குறித்து “இன்னுமாடா..” என்று கேட்பது, நாம் ஒவ்வொருவரும், நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வியின் எதிரொலிப்பு. இறுதியில், சாகேத்ராமனைக் காப்பாற்ற வரும் காவல்துறை அதிகாரியையும் (நாசர்) ஒரு இஸ்லாமியராகக் காட்டி, ஒன்றுபட்டு வாழ்வதன் அவசியத்தை, நமக்கெல்லாம் உணர்த்தப் போராடியிருப்பார் கமல்.

சொல்லவந்த நல்லபல கருத்துகளைக் காற்றில் விட்டு விட்டு, பல மொழிக் கலப்பு, மெதுவான திரைக்கதை, ரொம்ப நீளம், புரியவில்லை என்று அடுக்கும் நக்கீரர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.

தேசப்பிதாவின் மேல் இன்னமும் கூட சாட்டப்பட்டு வரும் குற்றத்திற்கு பதிலளிக்கும் ஒரு முயற்சியாக, தன் கதையின் நாயகன் மீதே பழியைப் போட்டு, அவனையே காந்தியடிகள் மேல் அவதூறு கொள்ளச் செய்து, ’இறுதியில் சாகேத்ராமன் உண்மையைப் புரிந்து கொண்டான். நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்வியை கமல் முன்வைத்திருப்பார்.

இந்தக் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும்...
இல்லை.. அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஹேராம் போன்ற புதுமையான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். ஆனால், நம் ரசனையோ இப்படித் தான் இருக்கிறது.

”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”

”ஏண்டா அப்டி சொல்ற..?”

”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்..”

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO