Wednesday, January 28, 2009

முகம் மாற்றல்கள்

அர்த்தங்களின் அணிவித்தல்களில்,
சத்தங்கள் வார்த்தைகளாகின்றன.

மொழிகொண்ட சாத்தியக்கூறுகளில்
உணர்த்துபொருள்கள் கீழானவையாயினும்
ஒப்பந்தித்த முகங்கள்
மாற்றாது
அவைகள் அவைகளாகவே.

மொழி வாழ்வின் நடைமுறையில்
சொல்லுக்கு கைகூடியது
நடைமுறை வாழ்வின் மொழியில்
மனிதனுக்கு வாய்க்கப்பெறாததாய்.

உயிரோசை 27/01/2009 இணைய இதழில் பிரசுரமானது.

Read more...

Thursday, January 22, 2009

கிள்ளிக் கிழிந்த திரை



வழக்கம்போலன்றி
சிடு சிடுப்புகளில்லை
எவரெனத் தெரியாத அந்த
அண்ணன் தங்கையின்
கிள்ளல் விளையாட்டால்
ஆஸ்பத்திரியின்
அமைதித் திரையில்
விழுந்த ஓட்டைகளில்.
மாறாய்
ஆங்காங்கே குறுநகைகள்.
எனக்கு
என் தங்கை தெரிந்தாள்
ஒரு கிழிசலில்.

Read more...

Tuesday, January 20, 2009

செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.



நகங்களின்
முத்தத்தில்
ஈரம்
ரத்தத்தில்.

புணர்ந்த நகங்களின்
ஸ்கலிதச் சிகப்பு
காய்ந்தும்,
காயாமலும்.

சதையிடுக்கில்
சிக்கி,
பல்வெறுக வெடித்தது
குரூரத் துணுக்கொன்று.

நகக்கண் பாவைதொட்டு
தோல்த்தள விளிம்புவரை
தத்தளிக்கிறது.
இல்லாத உரோமக்காடு தேடி
உயிர் சேமிக்க அவாவுறுகிறது.

ஒரு க்ஷணமேனும் எஞ்சுகிறது
சாதலுக்கும், சாதித்தலுக்குமான
இடைவெளித் தீர்மானிப்புக்கு.

உயிரோசை 10/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

Tuesday, January 13, 2009

புதுப்பொங்கலும், பொன்னுச்சாமிகளும்.

வாரியடித்துக் கொண்டிருந்தது
புழுதிக் காற்று.
வரப்பு மேட்டில் நின்று,
அறுவடைக்குக் காத்திருக்கும்
ஆளுயரக் கதிர்களைப்
பார்த்துக் கொண்டிருக்கையில்,
சொந்தமென இருந்த நிலம்
பெற்றேடுத்தவனின் பட்டறிவின் பொருட்டு
அயலானிடம் அடகாகி விட்டிருந்தது
நினைவிலுறுத்தியது.

அந்தி சாயும் வேளையில்,
"பொன்னுச்சாமி.. உன்ற வையங்கிட்டிருந்து போனு.."
ஊரதிரக் கூப்பிட்டாள்
மணியகாரர் மனைவி.

"இந்த வருஷம் அறுவடைக்கு எப்படியும்
நெலத்த மீட்ரலாம்ப்பா.."
வெம்மையில் தகித்த
நிலம் கண்ட கார்மேகமாய்
மகனின் வார்த்தைகள்.

"பி.எம்-கிட்ட பேசிருக்கேம்ப்பா..
இந்த வருஷமும் லீவு கெடைக்கும்னு தோணல..
பணத்த அனுப்பி வெச்சிடரம்ப்பா.."
சுழன்றடித்த சூறைக்காற்றில்
கலைந்து விட்டிருந்தன கார்மேகங்கள்.

வானை அடகு வைத்து,
சிறகை மீட்கிறேனோ..?

அடகில் வைத்தது மீண்டு விடும்.
உறவில் வைத்தது..?

12-01-2007 அன்று எழுதியது.

Read more...

Sunday, January 11, 2009

ஹேராமும், நானும், நீங்களும்..!

ஹேராம், ’இயக்கம் - கமல்ஹாசன்’ என்று "பெயர் போட்டு" வெளிவந்த முதல் திரைப்படம். ஏன் இப்படி எடுத்த எடுப்பிலேயே கமல்ஹாசனின் பொய்மையைச் சுட்டுகிறேன் என்றால், அவர் படங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த இன்னொரு படமான குணா ’இயக்கம் - சந்தான பாரதி’ என்ற அடையாளத்துடன் களமிறங்கியது.

ஒரு கலைஞன் அவன் படைப்பொன்றைப் பொதுவில் வைக்கிறான் என்றால், அப்படைப்பு விளைவிக்கும் பொருளாதார மற்றும் கலையாதார சாதக, பாதகங்களை நேர்கொண்டு எதிர்கொள்பவனாக இருத்தல் வேண்டும். கமலுக்கு இந்த தைரியம் இல்லையென்று கூறவில்லை. ஆனாலும் குணா போன்ற ஒரு தரமான படத்துக்குத் தன்பெயரைப் போடுவதில் அவருக்கு அப்படி என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.

ஒருவேளை மணிரத்னத்தின் தளபதி வெளியான நாளில் திரைக்கு வந்து, கடுமையானதொரு போட்டிச் சூழலை சந்திக்க வேண்டியிருந்ததால், எதற்கும் சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம் என்று பினாமி பெயரைப் போட்டாரா அதுவும் விளங்கவில்லை. இவரளவுக்குத் திறமை இருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்லை என்பது என் போன்றோரின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை எனக்கிருப்பதை விட கமலுக்கு இருத்தலே தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.

எனதிந்த நம்பிக்கைக்கு உரந்தூவி வளர்த்தெடுத்த திரைப்படம் ஹேராம். இப்படி ஒரு படைப்புதான், தான் நேசிக்கும் சினிமாவுக்கு தான் இயக்கிய முதல் படமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு ஆசையில்தான் குணாவை பினாமிக்கு விட்டுக்கொடுத்தாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என்னைக் கவர்ந்தது ஹேராம்.

ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.

1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.

ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.

என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்.

கலவரம் முடிந்த காலை. ஊரே பிணக்காடாகக் காட்சியளிக்கையில், அதைக் தாளாத சாகேத்ராமன் (கமல்ஹாசனின் பாத்திரப்பெயர்) ”அம்ம்மா.. அம்ம்மா..” என்று வாய் திறக்காமல் சொல்லிக்கொண்டே அழும் காட்சி, கவிதை. Saving Private Ryan (1998) என்று ஒரு ஹாலிவுட் திரைப்படம். Steven Spielberg இயக்கியது. போரின் கொடுமைகளைப் பற்றியெடுக்கப்பட்ட படங்களில் உலகின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அதில் ஒரு காட்சி வரும். அடிபட்டு, உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரன், ”Mammma.. Mammma..” என்று நடுங்கியபடியே உயிர்விடுவான். Saving Private Ryan பார்க்கையில் எனக்கு ஹேராம் தான் நினைவுக்கு வந்தது. Wise Men Think Alike என்பது இதுதானோ.

கலவரம் முடிந்த சமயத்தில் ஒரு காட்சி. அங்கே கட்டப்பட்டிருக்கும் யானை, அதன் பாகனையே கொன்றுவிட்டு, அவன் பிணத்தின் அருகிலேயே அமைதியாக நின்றிருக்கும். ’சாதியென்ற யானையை வளர்த்தெடுத்த மனிதர்களின் பிணங்கள் ஊரெங்கும் கிடக்கையில் இன்னும் இங்கு அமைதியாக, ஒன்றும் தெரியாத யானையைப் போல, சாதியும் நம்மிடையே நின்று கொண்டுதானிருக்கிறது. மதம் யானைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை மனிதனுக்குப் பிடித்திருக்கிறதா?’ போன்ற அக்கறைகளை அந்த அரைநொடிக் காட்சியில் சூசகமாகச் சொல்லியிருப்பார் கமல்.

கொல்கத்தாவுக்கு அடுத்து கதை பயணிப்பது ஸ்ரீரங்கம். சாகேத்ராமன் காரில் பயணிக்கும் போது, கூட வரும் பாஷ்யம் மாமாவுடன் பேசிக்கொண்டு வருவார். அப்போது காரணமே இல்லாமல் சாகேத்ராமன் காருக்கு வெளியே எட்டிப் பார்ப்பார். அங்கே அவர் பார்ப்பது ஸ்ரீரங்கம் கோயில் யானை. மண்டபத்துத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டு சாந்தமே வடிவாய் நின்றிருக்கும். அங்கே இந்து, முஸ்லிம் பிரச்சினைகளில் வட இந்தியா எரிந்து கொண்டிருக்கும் காலத்திலும், தென்னிந்தியா எவ்வளவு அமைதியாக இருந்தது என்பது புலனாகும் இந்தக் காட்சியில். அங்கே பாகனைக் கொன்ற யானையை நினைவுபடுத்திக் கொள்க.

மைதிலியைப் பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் அவள் தம்பிக்கு 5 வயதாகக் காட்டி, அந்தக் காலத்துத் தமிழகத்தின் குடும்ப அமைப்பில் இருந்த ஒழுங்கின்மையைச் சொல்லியிருப்பார். இந்தத் தம்பிக்கும், படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும், சின்ன விஷயத்தையும் சொல்ல விழைந்த முனைப்பு, அழகு.

முதலிரவில் பால் வேண்டாம் என்று கூறும் சாகேத்ராமனிடம் மைதிலி, ”ஏன்.. டாக்டர் ப்ப்டாதுன்னூட்டாரா..?” என்று கேட்கும் கேள்வியின் அழகை ரசிக்கும் ரசனை, சராசரி தமிழ் ரசிகனுக்கு வரும் காலம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.

நீ பார்த்த பார்வை பாடலில், ஆரம்பத்தில் வரும் String-ஐ பியானோவில், சாகேத்ராமன் ஒரு கையால் வாசிக்க, அபர்ணா ஒரு கையால் வாசிப்பாள். அபர்ணா இறந்த பின்பு, சாகேத்ராமன் அவன் பங்கை மட்டும் வாசிப்பது, துக்கத்தையும் அழகாகக் காட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

படத்தில் சாகேத்ராமன் இரண்டு முறை உறவு கொள்வது காட்டப்படும். ஒன்று அபர்ணாவுடன். இன்னொன்று மைதிலியுடன். அபர்ணாவுடன் அழகாக, ரசனையாக, அனுபவிப்பதைப் போலவும், ஆனால் மைதிலியுடன் மூர்க்கத்தனமாகக் கொள்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். இந்த இரு கலவிகளுக்கும் இடையேதான் சாகேத்ராமன் சாதிக்கலவரத்தின் கொடூரத்தை சந்தித்திருப்பான். வன்முறையும், தீவிரவாதமும் சராசரி மனிதனின் ஆழ்மனதிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொன்னவிதம் புதுமையிலும், புதுமை.

அத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று சாகேத்ராமனுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மகாத்மாவைக் கொல்லத் துடிக்கும் அவன் மனதின் குரூரம், உறவு கொண்டிருக்கையில், அவன் மனைவி மைதிலியே அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் போலத் தெரிவதில் சொல்லப்பட்டிருக்கும்.

வயதான சாகேத்ராமனின் நினைவில் ஓடும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருப்பவையே, நாற்பதுகளின் காட்சிகள் என்பது நாமறிந்த ஒன்று. தற்காலக் காட்சிகள் கருப்பு, வெள்ளையிலும், Flash Back காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாத்தா சாகேத்ராமனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், டிசம்பர் 6-ன் பொருட்டு நிகழும் சாதிச் சண்டைகளின்போது வெடிக்கும் குண்டுகளும், எரியும் தீயும் மட்டும் வண்ணத்தில் இருக்கும். இது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்ன பதில்:

”தற்காலத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளை என்று பிரிக்கிறோம். Grey Areas-ஐ மறந்திருக்கிறோம். அதனால் நேர்மையென்ற வண்ணமிழந்திருக்கிறோம். ஆனால், சாதியென்ற தீ மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது” என்று காட்டவே அவ்வாறு படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இப்படி படம் நெடுகக் குறிப்பாலுணர்த்தப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

உயிர் பிரியும் வேளையிலும் சாகேத்ராமன் அவரைக் கொண்டுசெல்லும் வண்டிக்கு வெளியே நடக்கும் சாதிச்சண்டைகளைக் குறித்து “இன்னுமாடா..” என்று கேட்பது, நாம் ஒவ்வொருவரும், நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வியின் எதிரொலிப்பு. இறுதியில், சாகேத்ராமனைக் காப்பாற்ற வரும் காவல்துறை அதிகாரியையும் (நாசர்) ஒரு இஸ்லாமியராகக் காட்டி, ஒன்றுபட்டு வாழ்வதன் அவசியத்தை, நமக்கெல்லாம் உணர்த்தப் போராடியிருப்பார் கமல்.

சொல்லவந்த நல்லபல கருத்துகளைக் காற்றில் விட்டு விட்டு, பல மொழிக் கலப்பு, மெதுவான திரைக்கதை, ரொம்ப நீளம், புரியவில்லை என்று அடுக்கும் நக்கீரர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.

தேசப்பிதாவின் மேல் இன்னமும் கூட சாட்டப்பட்டு வரும் குற்றத்திற்கு பதிலளிக்கும் ஒரு முயற்சியாக, தன் கதையின் நாயகன் மீதே பழியைப் போட்டு, அவனையே காந்தியடிகள் மேல் அவதூறு கொள்ளச் செய்து, ’இறுதியில் சாகேத்ராமன் உண்மையைப் புரிந்து கொண்டான். நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்வியை கமல் முன்வைத்திருப்பார்.

இந்தக் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும்...
இல்லை.. அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஹேராம் போன்ற புதுமையான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். ஆனால், நம் ரசனையோ இப்படித் தான் இருக்கிறது.

”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”

”ஏண்டா அப்டி சொல்ற..?”

”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்..”

Read more...

Friday, January 9, 2009

ராமலிங்க ராஜுவில் கொஞ்சம்

86 ரூபாய்க்கு சாமான்.
இருந்த 1 ரூபாயை
இல்லை என்றுவிட்டேன்.
மீதியாய் 15 ரூபாய்.

Read more...

Wednesday, January 7, 2009

பயணச் சிதைப்பு



வரிசைக்கிரமத்தினிடையே
கோடு கிழித்து விட்டேன்.
பின் வந்த முதல் எறும்பு
திடுமென நின்று விழித்தது.
தொடர்ந்தவையும் தேடத்
தொடங்கின வெண்சுவரின்
எண்புறமும் எதையோ.
கோட்டு வடிவின் பயணம்
குழம்பிச் சிதறுற்றிருந்தது
இந்நேரத்திற்கு.
முன்சென்ற
முதல் எறும்பு தூவிச்
சென்றிருந்தது போல
வழியெங்கும்
விலாசத் துகள்களை.
என் கோட்டை சற்றே தாண்டியிருந்த
கடைசி எறும்பு
திரும்பிப் பார்த்துவிட்டுப்
பயணிக்கத் தொடங்கியது
முகவரியை முகர்ந்தபடி.
அதன் பெருமூச்சு
எனக்குக் கேட்கவில்லை.

உயிரோசை 12/01/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

மன்னிப்புத் தேடல்

அப்பா ஊர்லயா என்ற கேள்வி
நண்பனுக்கு.
எங்கள் இருவருக்கும்
புதிதாய்த் தெரிய வந்திருந்த ஒருவனால்.
நண்பனை முந்திக் கொண்ட நான்
ஆமாம் என்று ஆட்டி வைத்தேன் தலையை.
அப்பா இருப்பது
மதுப் பழக்க மறுவாழ்வு மையத்தில்
என்ற உண்மையை மறைத்த
என் சமயோஜிதத்தின் பெருமை
வெட்கித்தது
அதைக் கவிதையாய் எழுதி
ஆறுதல் பரிசு வாங்குகையில்
மேடை முன்னிருந்த
இருவரையும் கண்டபோது.
எதற்கும் இருக்கட்டுமென்று
இதையும் எழுதி வைக்கிறேன்.
இன்னொரு பரிசு கிடைத்தால்
கூட ஆறுதலும் கிடைக்கும்.

Read more...

வயது

வேகமாய் வந்தவன்
பூட்டியிருந்த வீடு கண்டு
நண்பனை
சீக்கிரம் வர தொலைபேசிவிட்டு
ஜன்னல் திண்டில் சாய்ந்து
கண்மூடிக் கொண்டேன்.
ஏதேதோ உள்ளோடிற்று
இருட்டிமைத் திரையில்.
எதேச்சையாய்க்
கண்திறக்கக் கண்டேன்
முட்டிங்கால் வரை ஸ்கர்ட் போட்டிருந்த
எதுத்த வீட்டுப் பள்ளிப் பெண்
என்னையே வெறித்துக் கொண்டிருந்ததை.
செய்யாத குற்றம் மிதமாய் உறுத்த
காத்திருக்கத் தொடங்கினேன்
கண் மூடித் திரும்பவும்.
அவள் முட்டிங்கால் கீழ்வழமையில்
கன்னம் சறுக்கிச்
செல்தல் தவிர வேறேதும்
ஓடவில்லை இப்போது.
செய்த குற்றம்
உறுத்தவில்லை ஏனோ.

Read more...

ஐந்தாப்பு படிக்கையில்
கேபிள் டிவி ஜென்டில்மேன் பார்க்கச் சென்றவனுக்கு
இதான் குதரைக் கொம்பு என்று
கர்ச்சீப்பில் மார்பகம் செய்து காண்பித்து,
ஞாபகத்திலில்லாத வேறு சிலவற்றைச் செய்த
சுப்புலட்சுமி அக்காளின்
தோளுக்கு வளர்ந்திருந்த பெண்
அழகாய்ச் சிரித்தாள்.
சுப்பக்காதான் பார்க்காமலே
போய்விட்டது.
போன வாரம்
ஊருக்குச் சென்றிருக்கையில்.

Read more...

கவிதையென்று
எழுதிய அனைத்தும்
கவிதையா தெரியவில்லை.
இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தாலும்,
இல்லாமல் இருந்தாலும்
நானும், நீங்களும்
நாமாயே.

Read more...

வீடு
சற்று வித்தியாசமாய்
ரீங்காரித்துக் கொண்டிருந்தது.
புதுக் கொலுசு
போட்டிருந்தாள் அம்மா.

Read more...

ழகரம் அழகு தான்.
அவள் நா மடங்கலில்
இன்னும் அழகாகிறது.

Read more...

இங்லிஷ் வோர்ட்

கைப் பிடித்து நடந்து
வந்து கொண்டிருந்தவள்
கேட்டாள்.
பாட்டி-னு கூப்ட இங்லிஷ்-ல
வோர்ட் இருக்காப்பா என்று.
சிரித்தபடியே குறித்து வைத்துக்
கொண்டேன்.
வளர்ந்தவுடன் சொல்வதற்கு.

Read more...

புன்னகையும், நீங்களும்

நீங்கள் புன்னகைக்கும்
நிகழ்வுகள்
கவிதைக்குள் எட்டிப் பார்க்கையில்
கட்டாயம் புன்னகைக்கிறீர்கள்.
போலவே இப்போதும்.

Read more...

கசந்த முத்தம்

ஊருக்குச் சென்று விட்டுக்
கிளம்புகையில்
வழக்கம் போல்
அம்மாவைக் கட்டிக் கொடுத்த
முத்தம் கசந்தது
முதன்முறையாக.
பின்னால் நின்றிருந்த
பக்கத்து வீட்டு அக்காள்
பிள்ளையில்லாதவள்.

Read more...

அமாவாசை

கூரையின் ஓட்டையில்
நிலவு.
இரவுப் பசிக்கு மருந்து.
மாதத்தில்
ஒருநாள் பட்டினி.

Read more...

சர்வ மதப் பிரார்த்தனை

முட்டுச் சுவர்த்
தெய்வங்கள்
புன்னகையுடன்
புரிகின்றன
மூத்திரக் காவலை.

Read more...

எல்லோரும் மறந்துவிட்டிருப்பது

பார்லரில் இருந்தேன்
புருவம் சிரைக்க.
வந்த வேலை முடிந்ததால்
காசு கொடுத்துக்
கொண்டிருந்தவள் ஒருவள்
சற்றே இடுப்பு சாய்த்து நின்றவாறு
பேச்சினூடே ’அழகு’க் கலைஞி
ப்ரீத்தியின் கன்னத்தில்
தடவல் வாஞ்சையிட்டுக் கொண்டு
இருந்தது பட்டது கண்ணில்.
சட்டென, ஆண்டுகளுக்கு முன்
அரையாண்டு விடுமுறையில்
எல்லோரும் தூங்கிய பின்
காவ்யா அக்கா
என் முலை கிள்ளிய
ஞாபகம் துளிர்த்தடங்கியது
நினைவுக் குதிருக்குள்
ஏனோ.

Read more...

அப்பாக்களுக்கும் பாசமிருக்கிறது

கிளம்புதலுக்கான ஆயத்தம்
சீரியதாயிருந்தது.

புதுத் துணி போட்டு மூடி
பெட்டியெல்லாம் கட்டியாயிற்று.

அம்மா சப்பாத்தி செய்து விட்டாள்.

பக்கத்து வீட்டு
அங்கணத் தாத்தா,
தங்கம்மா பாட்டியிடம் ஆசீர்வாதமும்
சாஷ்டாங்கமாய்ப் பெற்றாகி விட்டது.

கூடத் தங்கப் போகும்
உற்ற தோழன்
பிரபாகரனும் வந்து விட்டான்.

காலையில் தங்கை மட்டும்
கண்ணைத் தேய்த்து,
ஈரம் துடைத்தாள்.

என்னடா ஆச்சு என்றவரிடம்
பாப்பா அளுகறாங் டாடி
என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

ரயில் நிலைய நேரங்களும்
சகஜத்திற்குக் குறைவில்லாமலே
சென்றன.

மெலிதான நகர்தலின் போது,
படியில் நின்று
கையசைக்கையில் தான் கண்டேன்.

தொண்டையைக் குத்தும்
துக்கம் மறைக்க
சற்று குனிந்து நிமிரலின்
எத்தனிப்பும்,
ஆத்தா இறப்புக்கும்
நான் கண்டிராத
அப்பாவின் கண்ணீரும்.

விடு விடுவெனத்
திரும்பி நடக்க ஆரம்பித்து
விட்டிருந்தார்.
நான் கண் மறையும் முன்பே.

அச்சில துளிகளின் வீச்சில்
அவருக்கான என் அத்துணை
துவேஷங்களும் கரைந்திருந்தன.

கட்டிக் கொண்டழ
வேண்டும் போலிருந்தது.
உள்ளே வந்தமர்ந்து
கண் மூடிக் கொண்டேன்.

பார்த்துக் கொண்டேயிருந்தான்
பிரபாகரன்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO