Tuesday, January 26, 2010

போர்களுக்கு முந்தைய விருந்துகள்



போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை

கைசேரும்
குவளைகள் நிரப்பும் துளிகள்
உவர்த்த உதடுகளில்
வெண்மைப் படிகமாகி
உலர்வதும்

பின்சேரும்
கரங்கள் அழுந்த
உடையத் தயாராய் இருக்கும்
நினைவின் குமிழிகள்
மௌனம் சுரந்து
முட்டிக் கொள்வதும்

அடரும் இறுக்கம்
விரிய வழியின்றி
இணை சேர்ந்து கிடந்த
கண்ணலைவரிசைகள்
எதிர்கோட்டில்
வலுந்தூர்தலும்

இன்னபிற
இன்னபிற
உம்களும்
உம்களும்..

விருந்துகளின் முடி தருணங்களில்
போதையுற வீழ்ந்து விடல்
உத்தமமான
போதனையாகப் படுகிறது

பொழுதோடு வியர்த்த
பிரியுயிரை எதிர்நோக்க உதவும்
சூனிய சலனங்கள்

எதிராளியும் அயர்ந்திருக்கும்
அவன் விருந்தின்
நிச்சலனம் செவிசேர

விரல்கள் மட்டும்
பின்னியிருக்கும்

போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை



25/01/2010 உயிரோசை மின்னிதழில் பிரசுரமானது

Read more...

Monday, January 25, 2010

மிஸ்டுகால் ரிங்டோன்

மிஸ்டுகாலுக்கு என்று
தனியான ரிங்டோன்
வைக்கச் சொன்னாள்
குழந்தை.

இழக்கும் முன்பே
இழப்புகளை
அறிந்து கொள்ள முடிந்தால்
நன்றாகத்தான் இருக்கும்
என்று நினைத்துக் கொண்டேன்.

Read more...

Tuesday, January 12, 2010

இந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா?

’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ - இந்த வாசகம் குறித்து நான் புரிந்து கொண்டது இதுதான். 1960களில் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப் பாடமாக்க அப்போதிருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கொதித்தெழுந்த மொழிப்பற்று காரணமாக, அரசின் உத்தரவை எதிர்த்துக் களமிறங்கிய இளைஞர் பட்டாளம், தங்கள் நோக்கத்தில் செவ்வனே வெற்றி பெற்று, இந்தியை நீக்கியது மட்டுமல்லாது, அதன் மூலம் பெற்றுவிட்ட 'தமிழ் காவலர்கள்' அடையாளத்தினை முதலாகக் கொண்டு, தமிழகத்தை ஆளும் வாய்ப்பையும் பெற்று, தங்கள் வாரிசுகளுக்கு மாத்திரம் இந்தியுடன், ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் பயிற்றுவித்து, தத்தம் துறைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்து விட்டார்கள் என்பதுதான்.

2005-ஆம் ஆண்டு நான் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியிலமர்ந்தேன். என்னோடு, இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒரே சமயத்தில் பணியிலமர்ந்தோம். அப்போதே, 'தேசிய மொழியைக் கூடத் தெரியாதென்று சொல்கிறாயே..'என்று அம்ரித் ராஜ் என்னை அசிங்கப்படுத்தினான். 'சொல்கிறாயே..' என்ற வார்த்தையின் தொடர்ச்சியாக, ’உனக்கு வெட்கமாக இல்லையா..’ என்ற தொடரை அவன் கேட்கவில்லை. ஆனால் எனக்குக் கேட்டது.

அன்றிலிருந்து இன்று வரை, இதுபோன்ற எண்ணற்ற அவமானங்களை சந்தித்து விட்டேன். மென்பொருள் துறையில் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகளாகப் பணிபுரியும் வட இந்தியர்களிடம் நான் அறிமுகமாகுகையில், நான் தமிழன் என்று தெரிந்ததுமே, அவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம், எனக்கு இந்தி தெரியாது என்று கூறிய உடனேயே, நிறையத் தாடி வைத்திருந்த சிங் ஒருவர், ”தூ.. மதராசி?” என்று கேட்டார். நான் பயந்து விட்டேன். என்னடா.. துப்புகிறாரே என்று. ஆனால் அவர் துப்பவில்லை. 'தூ' என்றால் இந்தியில் 'நீ' என்று அர்த்தமாம்!

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். இன்னொரு மொழி நம் மாநிலத்தினுள் வந்தால், அது நம் மொழிக்கு நாம் செய்யும் துரோகமா? இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா? முதலில் நாடு, நதி, மொழி என்று எல்லாக் கருமங்களையும், அம்மா, தங்கை என்று பெண்ணுறவு கொண்டு விளிக்கும் கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும்.

பள்ளி நாட்களில், ’தமிழன்னை’ என்று கூறும் போது, ஏதோ ஒன்று உள்ளே பொங்குவதை உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு உணர்வு வருவதில் தவறில்லை. ஆனால், அது நம் மொழியின் மீதான வெறியாகவும், இன்னபிற மொழிகளின் மீதான துவேஷமாகவும், உருமாறுவது இயல்பாக நடந்தேறி விடுகிறது. அதனால் தான் இந்த அம்மா, தங்கை செண்டிமெண்ட்டெல்லாம் வேண்டாமென்கிறேன்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட சில தமிழ் பெற்றோர், தத்தம் குழந்தைகளுக்கு இந்தி டியூஷன் வைத்தாவது, கற்பித்து விடுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முற்போக்கு எண்ணமில்லாத, போதுமான படிப்பறிவில்லாத, அறிவிருந்தாலும் டியூஷனுக்குக் காசில்லாத நிலையில்தானே பெரும்பான்மையான நம் பெற்றோர் சமூகம் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்கையில், நம் நாட்டின் தேசிய மொழியை, அரசே, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் என்ன பாதகம் வந்து விடப் போகிறது?

இந்தி தெரியாமல் வட மாநிலம் ஒன்றுக்கு நம்மால் போக முடிகிறதா? எல்லா சூழ்நிலைகளிலும் ஆங்கிலம் உதவாதே அய்யா!

தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலையைப் பார்க்க முடியாது. கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று எல்லாருக்கும் இந்தி தெரியும்போது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அது பெருமையா? பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை! செய்து வைத்திருக்கும் அறிவீனத்துக்கு பெருமை ஒரு கேடு.

இந்தி நமக்குத் தெரிந்திருந்தால், மென்பொருள் துறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் இன்னும் பரிமளித்திருப்பார்கள். நான் உட்பட! 3 அல்லது 4 பேர், ஒரு issue-வை investigate செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்மந்தமான நம் உரையாடல் அல்லது விவாதம், நம்மை அந்த issue-வைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும். இங்கே நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியில் உரையாடத் துவங்கி விடுகிறார்கள். நமக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் வருவதில்லை. இதனாலேயே appraisal வரும்போது நம்மவர்கள் பின்தங்குகிறார்கள். இந்தி தெரிந்தவர்கள் முந்துகிறார்கள்.

இங்கே இந்தியில் பேசுபவர்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. 4 தமிழர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில், தமிழில்தானே பேசுவீர்கள். 5ஆவதாக அங்கிருக்கும் மாற்று மொழியானை நினைவிலா வைத்திருப்பீர்கள்?

வட இந்தியர்கள் பணிக்கு வர சென்னையை விட, பெங்களூரை ஏன் பெரிதும் விரும்புகிறார்கள்? மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான்? ஆக, நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கூட இந்நிலை இடையூறாகத்தான் இருக்கிறது.

சற்றே நிதானத்துடன் யோசித்தால் 'மொழியைக் காப்பாற்ற எந்தக் கொம்பனும் தேவையில்லை' என்பதும் 'மொழியைக் காப்பாற்றிக் கொள்ள, மொழிக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியாலும் முடியாது' என்பதும் விளங்கும்.

எங்கே நானும் மொழியைக் காக்கப் பிறந்த ஆபத்பாந்தவனாகவும், அநாதரக்ஷகனாகவும், இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தில், தமிழின் மீதிருக்கும் இயல்பான அன்பு குறித்து கூட சற்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

எங்களூர்ப்பக்கம் ஒரு பழமொழியுண்டு. 'கொளத்து மேல கோவப்பட்டு, கால் களுவாம வர்றது..' என்று. குளத்தின் மேல் கோபப்பட்டு, 'கழுவாமல்' வந்தால், யாருக்கு நஷ்டம். குளத்துக்கா? அப்படித்தான். இந்திக்கும் சரி. எல்லாவற்றுக்கும் காரணமான அசிங்கவாதிகளுக்கும் சரி. ஒரு நஷ்டமும் இல்லை.

எல்லா எளவும் மிடில்கிளாஸ் வெங்காயங்களான நமக்குதான்!


-சென்ற வார உயிரோசைக்கு அனுப்பினேன். ஏனோ பிரசுரமாகவில்லை.

Read more...

Friday, January 8, 2010

கண்ணாடியாலான கல்

என் திரைக்குள்
ஊடுபாயும் சன்னலின் வெளிச்சத்தினின்று
விடுபட முயற்சிக்கிறேன்.
நீளும்
திரைக்கும், சன்னலுக்குமான
மாறாட்டத்திற்கிடையே
நான் கூட தெரிந்தேன்
எனக்கே.

Read more...

Thursday, December 31, 2009

என் முதல் கவிதைத் தொகுதி!

ஆண்டின் இறுதி நாளென்பதாலோ என்னவோ வானம் துளிர்த்து விட்டிருக்கிறது இந்த மாலையில். மென் சில்லிடலுடன் வெளியே இறைந்து கிடக்கும் மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பெங்களூர் வானில் சற்று மிதந்து கிடந்தால் தேவலாம் போல!

வழக்கம் போல 'எனக்கு எழுத நேரமே இருப்பதில்லை' மற்றும் இன்ன பிற புலம்பல்களை விடுத்து, மிகுந்த மகிழ்வுடனும், நிறைந்த மனதுடனும் எழுதத் துவங்குகிறேன். நாட்களின் இறுதி மற்றும் துவக்கம் என்பன போன்ற செயற்கை செய்கைகளினின்று சற்று பக்குவப்பட்டு, ஒவ்வொரு நாளும் இதே மனோநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.

என் மகிழ்வுக்கும், நிறைவுக்குமான காரணிகளைப் போட்டுடைப்பதை விட்டு, விட்டு, கண்ட வர்ணனைகளில் கவனம் செலுத்தும் விரல்களின் மேல் மெலிதாய் கோபம் வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் பிறக்கப் போகும் புத்தாண்டை வரவேற்க இன்முகம் காட்டுவதற்காகவும், என் முதல் கவிதைத் தொகுதியான 'உறங்கி விழித்த வார்த்தைகள்' தயாராகி வருகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்தான் எனக்கிந்த மகிழ்ச்சி! ஆனாலும் உள்ளுக்குள் சற்று பயமாகவுள்ளது.

ஆம். ஏதோ விளையாட்டாய் வலையில் எழுதத் துவங்கினேன். என் அன்றாட அவதானிப்புகள், சமூகக் காழ்ப்புகள், கவிதைக்கே உரித்தான சுய புலம்பல்கள் என்று நீளும் எல்லாவற்றையும் கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். கட்டற்ற இணையம் தரும் சுதந்திரத்தில் எனக்கு வாய்க்கப் பெற்ற இந்த மனோநிலையை சற்று தாமதமாகவே புரிந்து கொண்டேன்.

மிக விரைவாக முடிவு செய்யப்பெற்று, உருக்கொண்டு, புத்தகமும் வெளிவரும் சமயத்தில், என் பதற்றம் ஏனோ சற்று கூடியது. நான் எழுதியிருப்பதெல்லாம் கவிதை என்ற பரிமாணத்தில் அடங்குமா என்ற சந்தேகம் கூடத் தோன்றியது.

கூர் மிகுந்த இலக்கிய வெளியின் விமர்சனக் கத்திகளை சமாளிக்கும் அளவுக்கு, தயார் செய்து கொண்டு களமிறங்கியிருக்கவில்லையோ என்ற ஐயப்பாடுதான் இந்தக் குழப்பத்தின் துவக்கப் புள்ளி.

இந்த இருதலைக் கொள்ளி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், இத்தொகுப்புக்கு
அணிந்துரை எழுதியிருக்கும் வா.மணிகண்டன் அவர்கள். ‘விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே; கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை’ என்று ஆரம்பத்திலேயே அட்டகாசமாகப் போட்டுடைத்திருக்கும் அவரின் பார்வை, மிக நேர்த்தியான, சார்புகளில்லாத சமநிலை பொருந்திய ஒன்றாகக் கருதுகிறேன்.

என் கவிதைகள் என் குழந்தைகள். அவற்றில் பிழை இருந்தாலும் அது என்னுடையதாக இருக்கட்டும். பக்கத்து வீட்டுக்காரனுடையதாக இல்லாத வரை மகிழ்வே. நிறையென்று ஏதேனும் இருந்தால் அது பாரதி முதல் பிரமிள் வரையான மூதாதையர்களின் சாயல் என்று நினைத்துக் கொள்ளலாம்!

’இந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன’ என்ற நேர்மையின் உச்சத்தில் வெளிப்பட்ட வா.மணிகண்டனின் கருத்துடன் என் முதல் தொகுப்பு வெளிவருவது, என் நேர்மைக்கும் ’கொஞ்சூண்டு’ கம்பீரமூட்டுகிறது.

என் குழப்பம் தீர்த்து வைத்த வா.மணிகண்டன் மற்றும் புத்தகம் வெளிவர உதவிகரமாயிருந்த சகோதரி
உயிரோடை லாவண்யா மற்றும் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும், வலை வழி வாசித்து, பின்னூட்டமிட்டு, ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! சென்னையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தகம் கிடைக்கும்.

சமீபத்தில் நான் நிறுவனம் மாறவிருப்பதாக
எழுதியிருந்தேன். இப்பொழுது மாறியும் விட்டேன். விஷயம் என்னவென்றால், நிறுவன மாற்றத்தால் டிசம்பர் மாதம் சம்பளம் வராததால், கையில் காலணா இல்லை. காசில்லாத காரணத்துக்கே புத்தகப் பதிப்பை நிறுத்தி விட உத்தேசித்தேன். அதைத் தடுத்து, நல்ல புத்தி சொல்லி, புத்தக வெளியீட்டை ஊக்கப்படுத்திய தாக்ஷாயணிக்கும், சமயத்தில் கடன் தந்து உதவிய என் சகோதரி என்பதற்கும் மேலான காயத்ரி மற்றும் நண்பன் என்பதற்கும் மேலான பரத், ஆகிய அனைவருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் நன்றியெல்லாம் சொல்லப் போவதில்லை. வெறும் நன்றி சொல்லித் தீர்க்க முடியாதென்பதால், வாழ்ந்து நிறைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

அனைவருக்கும் இந்தச் சிறியேனின், மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Read more...

Thursday, December 3, 2009

வார்த்தை விளையாடாமை - II

மருதாணி போட்டுக் கொண்டால்
ஊட்டி விடுவாயா என்றாள்.
மருதாணி போட்டுக் கொண்டு
ஊட்டி விடு என்றேன்.
அழகாய் சிவந்தது
காதல்.

வார்த்தை விளையாடாமை - I

Read more...

Monday, November 30, 2009

கோவையிலிருந்து சூலூர் வரை!




கடந்த வாரக்கடைசியில் கோவை சென்றிருந்தேன். தோழியின் திருமண விழாவுக்கு அம்மாவுடன் சென்றுவிட்டு, காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தில், எங்களூரான சூலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது வந்தவொரு தனியார் திருப்பூர் பேருந்தில் ஏற முற்படுகையில், "திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.. திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.." என்ற கூவல் கேட்டது.

"ணா.. சூலூர் போறவெங்கெல்லாம் ஏறக்கூடாதாண்ணா.." என்றதற்கு,

"முன்னாடி நிக்கற வண்டீல போயேறிக்கப்பா.. நீயேறி உக்காந்துக்குவ.. அப்பறம் திருப்பூர் டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா" என்று அன்புமிழும் பதிலை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

"யேண்ணா.. நாங்கெல்லாம் காசு குடுக்கறதில்ல..?" நமக்கும் இருக்குமல்லவா ரோஷம்.

"யேறாதனா.. யேறாதப்பா.. போ..!"

இதற்கு மேலும் பேசாதிருந்தால், வாய்கலப்பானது, கை மற்றும் கால் கலப்புகளாகி நான் அடிபடும் (?!) வாய்ப்பு பிரகாசமானது என்று தெரியுமாதலால், என்னை அமைதிப்படுத்தி, அடுத்த பேருந்தைக் கண்டறியும் சீரிய முயற்சியில் அம்மா ஈடுபட வேண்டியதாயிற்று.

சூலூர் டவுன் பஞ்சாயத்து கோவை நகரிலிருந்து, திருப்பூர் செல்லும் வழியில் முதல் 18 கி.மீ தொலைவிலுள்ளது. இரண்டாம் 18 கி.மீ தொலைவில், பல்லடம் நகரும், மூன்றாம் 18 கி.மீ தொலைவில் திருப்பூர் நகரும் உள்ளன. மேலும் உடுமலை, தாராபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் சூலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.

சூலூரிலிருந்து, திருப்பூர் செல்லும் பயணிகளை ஏற்ற எப்படியும் சூலூரில் பேருந்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். சூலூரில் ஏறும் பயணிகள் நின்று கொண்டுதான் திருப்பூர் வரை பயணமும் செய்கிறார்கள். இது இப்படியிருக்கையில், ஒரு 18 கி.மீ மட்டும் நாங்கள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இடமில்லாவிட்டால் சரி. நின்று கொள்கிறோம். இருக்கும் போது ஏன் நிற்க வேண்டும்?

கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம், இறுதி வரை செல்லும் பயணிகள் எந்த ஆட்சேபணையும் காட்டாமல், அடுத்த பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். அதுதான் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறதே. பிரச்சினை துவங்கும் புள்ளி, பண முதலைகளின், காசாசை கொளுந்து விட்டெறிகையில்தான்.

'தனியார் பேருந்துகள்தான் இப்படியா' என்று கேட்டால், 'அரசுப் பேருந்துகளில் இன்னும் மோசமாகத் திட்டுகின்றனர்' என்று சொல்கிறார்கள். என் கல்லூரிக் காலத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியபோது, அமைதியாகத்தான் மறியல் செய்ய அமர்ந்தோம். ஆனால் பேச்சு, வீச்சாக மாறி, சில பல பேருந்துகள், தங்களின் சில பல கண்ணாடிகளை இழக்கும் நிலை வந்த பின், சூலூர் மக்கள் மதிக்கப்பட்டோம். இருக்கும் குரூரத்துக்கு மீண்டும் அவையெல்லாம் விரைவில் நடக்கும் (அ) நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முடிந்த அளவுக்கு காந்தியனாக இருக்கத்தான் நான் முயற்சிக்கிறேன். ஆனால் முகத்திலறைந்தாற் போல் வந்து விழும் வார்த்தைகள், கொள்கைகளைத் தூக்கிக் குப்பைக் கூடையில் குமுறிவிட்டு, "ஒரு கண்டக்டருக்கே இத்தன திமிருன்னா.." என்று கிளப்பிவிடும் எண்ணக் கசடுகளில், காந்தியன் ஹிட்லரியனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எய்தவனைப் பற்றி யோசிக்காமல் அம்பின் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

நான் பரவாயில்லை. நின்று கொண்டு வருகிறேன். முதியவர்கள் என்ன செய்வர்? நகரப் பேருந்தில் செல்லலாம் என்றால், முதலாவதாக எண்ணிக்கையில் அவை குறைவு. இரண்டாவதாக மஃப்சல் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்து நிலையம் ஏறக்குறைய முக்கால் கி.மீ. எல்லோருக்கும் நடக்கக் காலாலாகுமா?

இங்கே கர்நாடகத்தில் பரவாயில்லை. மக்களைக் கொஞ்சமேனும் மனிதர்களாக மதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை தமிழ்நாடு செல்லும் போதும், 'கூடிய வரை இங்கே வரக்கூடாது' என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில்தான் ஒவ்வொன்றும் நடக்கின்றன.

இதையெல்லாம் எண்ணி, எனக்கு வந்த கோபத்துக்கு, மனதுக்குள் எல்லாருக்கும் மரண தண்டனை விதித்து விட்டு, வலையிலும் பதிவித்து விட்டேன். எதற்கும் கையாலாகாத பொதுஜனங்களான நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? சொல்லுங்கள்!

Read more...

Thursday, November 26, 2009

பொய்க்கால் கவிதை

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO