Thursday, March 3, 2011

127 Hours - இயற்கைப் பெருந்தாயின் முன் மண்டியிடும் மானுடம்..



யாருமிலா வனத்தினுள் வெறி கொண்டு தனித்தலையும் மிருகம் போல, ஏனென்றே அறியாமல் திரைப்படங்களாகப் பார்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. The Shutter Island, Memories of Murder, Primal Fear, Good Fellas, Taxi Driver, The American Gangster போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

இப்பட்டியலில், இவ்வாண்டு அகாதமி விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டவைகளுள் ஒன்றான 127 Hours ஏனோ உள்ளே பதுங்கிக் கிடந்த எழுத்துப் பூனையின் வாலை இழுத்துப் பார்த்து விட்டதில், மனவெளியெங்கும் இறைந்து கிடந்த வார்த்தைக் குப்பைகளைத் துழாவித் துழாவி, சிலதை அனுப்பிக் கொண்டிருக்கிறேன் விரல் முனைகளுக்கு.

என்ன சொல்ல? ஒரே வரியில் சொல்வதென்றால், இயற்கை என்னும் சொல்லிலடங்காப் பெருந்தேவிக்கு முன்பாக மானுடம் எனும் அற்பத்தின் ஆழத்தைக் கூறு போட்டிருக்கிறார் Danny Boyle. படம் முழுக்க எனக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது இதுதான். இவ்வுலகையே நாம்தான் ஆள்கிறோம் என்பதை வெட்கமில்லாமல் முரசு கொட்டும் வண்ணமாக மரங்களைக் கொன்றழிக்கிறோம். நீர்நிலைகளை அபார்ட்மெண்டுகளாக்குகிறோம். ஐந்நூறடிக்கு போரைப் போட்டு அவள் குருதியை உறிஞ்சியெடுக்கிறோம். யார் கொடுத்த உரிமையிது நமக்கு?

படத்தின் துவக்கத்தில் James Francoவின் சைக்கிள் வேகத்தில், உடல் மொழியில் தென்படும் அசாத்தியம், அனாயாசம், வீறு கொண்டெழுந்திருக்கும் மலையைக் காண்கையில் துலங்கும் அலட்சியம், ஆகிய அனைத்தும் நாமாகவே கையிலெடுத்துக் கொண்ட இயற்கைக்கு எதிரான செயல்களின் குறியீடாகவே தோன்றுகிறது. Francoவைப் போலவே நாமும் மண் துகள்களாலான மகா பிண்டமான அத்தாயின் முன் மண்டியிட்டுக் கதறும் நிலை வரும் என்பதைக் கூறும் அபாய மணிதான் 127 Hours.

உலகமறிந்த நேரடிக் கதை. மலையேறுபவன், எதிர்பாராமல் பாறை தன் கையின் மீதேறி சிக்கிக் கொள்கிறான். கையை அறுத்துப் போட்டுவிட்டுத் தப்பிப்பதற்குள்ளான 127 மணி நேரங்களை ஒரு திரைப்படமாக எடுப்பது பெரிதல்ல. கதை தெரிந்த ரசிகர்களையும் கட்டிப் போடும் வித்தையை செயல்படுத்திக் காட்டும் சாமர்த்தியம் இருப்பவன்தான் அதில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

இயற்கையை ஏளனமாய் பார்த்துத் திரியும் ஒருவன், காலை 9.30க்குத் துவங்கி 15 நிமிடங்கள் மாத்திரமே தன்மேல் படும் சூரிய ஒளிக்காக ஏங்குவது, தினமும் காலை அவ்வழியே பறந்து செல்லும் கழுகைக் கண்டு ஆச்சரியப்படுவது, தொங்கிக் கொண்டே தூங்கும் அவன் மேல் எறும்புகள் ஊர்கையில், அவனுக்கும், எறும்புக்கும் என்ன பேதம் என்றென்னை யோசிக்க வைத்தது, என ஒவ்வொன்றுமே இயற்கையின் பேராண்மையை, பெரும் பெண்மையைப் பேசுவதாகவே எண்ணுகிறேன்.

இவற்றுள் மிக முக்கியமான குறியீடு நீர். இருக்கும் ஒரே ஒரு பாட்டில் நீரை வைத்துக் கொண்டு தீர்ந்து விடும் பதற்றத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அருந்துகிறான். தாகத்தின் வெக்கை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஊடுபாய்ந்து ஒவ்வொன்றையும் ஆயிரந் துணுக்குகளாக சிதறடிக்கிறது. திடீரெனப் பெய்யும் பெருமழை அவன் சிக்கிக் கொண்டிருக்கும் நீளமான பாதை முழுக்க நீரால் நிரப்பி, இந்தா.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.. குடி.. குடி.. என்று அவனை மூழ்கடிக்கும் காட்சியின்போது, பக்கத்தில் இருந்த என் வாட்டர் பாட்டிலை இறுகப் பற்றிக் கொண்டேன்.

பஞ்ச பூதங்களின் முன் பச்சைக் குழந்தைகள் நாமெலாம்!

நம்மையெல்லாம் பிரசவித்து விட்ட போதும் நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கும் இயற்கைத் தாயின் பன்னீர்க்குடம்தானே மானுடத்திற்கு நீரைக் கொடுக்கிறது.

Franco சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்படியே பின்னால் வரும் கேமராக்கண்கள், சில ஆயிரம் அடி உயரம்வரை உயர்ந்து நின்றன. இரு மலைகளுக்கு இடையேயான பிளவுக்குள் கிடக்கிறான் Franco. தொண்டைக்குழி கிழியக் கத்திக் கொண்டிருக்கும் அவன் சத்தம் எவர் செவிகளையும் சேரவியலாத சூழலை மட்டும் உணர்த்தவில்லை அக்காட்சி.

வெறும் வார்த்தை ஜாலத்துக்காக சொல்லவில்லை. அப்பிளவு எனக்கு இயற்கை அன்னையின் பிறப்புறுப்பாகவே தோன்றியது. இங்கிருந்து தான் வந்தோம். அங்குதான் சென்று மடியப் போகிறோம் என்று தோன்றியதில் உள்ளே சற்று கிலி கிளம்பியது.

தாகம் ஒரு உடற் தேவை மாத்திரமல்ல. அது ஒரு தொப்புள் கொடி பந்தம். நாமே நினைத்தாலும் அறுத்துக் கொள்ள முடியாதவாறு பிணைக்கப்பட்டிருக்கிறோம் பெற்றவளோடு.

நான் பார்த்தவற்றுள், தாகமும் ஒரு பாத்திரமாகக் கூடவே பயணிக்கும் சில திரைப்படங்கள் Sahara (1995) - இரண்டாம் உலகப்போரின் போது ஒரு பீரங்கியில் சஹாரா பாலையைக் கடக்க முயற்சிக்கும் இராணுவ வீரர்களின் கதை மற்றும் The Alive (1993) - 1972ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு ரக்பி அணி மற்றும் உறவினர்கள் பனி மலைகளுக்கு நடுவே பரிதவிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகிய இரண்டும் சட்டென நினைவுத் திரையில் கீறல் விழச் செய்தவை.

127 Hours போலவே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு திரைப்படம் என்று நான் கருதுவது மிகப் பிரபலமான Cast Away (தல Tom Hanks!). Cast Awayல் மனோ வலி அதிகம். 127 Hoursல் உடல் வலி அதிகம். முன்னதில் ஐந்து ஆண்டுகள். பின்னதில் ஐந்து நாட்கள். வலியைத் தாங்குவதில் மனத்தின் மகத்துவம், உடலுக்கு மிகக் குறைவு என்பேன். உடல், வலியோடு மோதத் திராணியின்றி சிதைவுறுகிறது. மனம், வலியை விழுங்கிக் கொண்டு திண்மையுறுகிறது. இரண்டு படங்களிலும் ஸ்தூல உடல் தரும் வேதனையை மீறி மேலெழுந்து வரும் கிளர்ச்சியை நாயகர்களுக்கு அளிப்பது அவர்களின் மனோதிடமே.

என் கையின் மேல் விழத்தான் இந்தப் பாறை இலட்சம் ஆண்டுகளாகக் காத்திருந்தது. எனதொவ்வொரு மூச்சும், செயலும், இந்தக் கணத்தை நோக்கித்தான் தள்ளின என்ற வசனம் எனக்கு மிகப்பிடித்தது.

மற்றபடி, அம்மா, அப்பா, தங்கை, மனைவி ஆகியோரின் நினைவு, அவர்கள் அனைவரும் தன் முன்னிருப்பது போல் அவன் மனம் சிருஷ்டித்துக் கொள்ளும் காட்சிகள் இயல்பாய் அமைந்திருக்கின்றன. நம் மனம் ஒன்றிலிருந்து மிகத் தீவிரமாக, மிக ஆவேசமாகத் தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனித்து, அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள்கையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் நிகழ்கிறது. அச்சூழலில் இருந்து தற்காலிகமான விடுதலையைத் தனக்குத் தானே அளித்துக் கொள்ள ஒரு கனாச் சூழலை உருவாக்கிக் கொள்கிறது.

சிறிய வயதில் கிரிக்கெட் பைத்தியத்தில், இந்திய அணிக்காக ஆடுவது போலவும், அத்தனை பந்துகளிலும் சிக்சர் அடிப்பது போலவும் (விழித்திருக்கையில்!) கனவு கண்டு மொத்த பந்துகளை ஆறால் பெருக்கிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், இக்கனவுகள் மாறினவே தவிர கனவுகள் வருவது மாறவில்லை.

James Franco மிகையில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழுவதிலிருந்து, நரக ரணத்தில், கற்பனையில் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி வரை குறையாக எதுவும் படவில்லை. சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுப் பரிந்துரைக்குத் தகுதியான performanceதான் என்பது என் தாழ் அபி!

ரஹ்மான் ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார். மனிதருக்கு இன்னமும் அள்ளித்தர காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அறுத்துப் போட்ட கையை புகைப்படமெடுத்துக் கொண்டு திரும்பும்போது Franco சொல்லும் ஒரு Thank You நிறையச் சொன்னது எனக்கு. அந்தளவுக்கு நிறைவான Thank Youக்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சிக்கிறேன். உடலிலிருந்து உலகு வரை அனைத்துமாகி, அனைத்திலுமாகி, உறைந்திருக்கும் பஞ்ச பூதங்களுக்கும், அவற்றுள் உயிர்த்திருக்கும் பரம்பொருளுக்கும்!



2 மறுமொழிகள்:

Ravi Bala March 3, 2011 at 11:25 AM  

mathi enna oru vimarsanam. kalakare!

  ©Template by Dicas Blogger.

TOPO