உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
ஒரு பூ மலரும் அவசரத்தோடு
அவிழ்ந்து கொண்டிருந்தது அவ்விரவு
கிழக்கை விரும்பாத காலைகளுக்கே
உரித்தான அமானுஷ்யம்
இருட்டின் காதோர
ரோமங்களினுள் முத்தமிட்டு
அதிகாலை நியான் மஞ்சளில்
கனத்துக் கொண்டிருந்தது
ரோமாஞ்சனம் வழியும்
பார்வையைத் தொலைத்த அக்காலை
விடிதலை மறந்த
சுழற்சியில் நின்றுவிட்டிருக்கிறது
இக பர
பரமபதத்தின் மீது
ஒற்றைப் பகடையாய்
உருளத் துவங்கும் புள்ளியில்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம்
விடைபெறும் வைகறைகள்
புலர்ந்து விடுவதில்லை
அத்தனை சுலபத்தில்.
விக்ரமாதித்யன் நம்பியின் ‘பொருள்வயின் பிரிவு’ என்ற கவிதையின் பாதிப்பில்.
நன்றி: உயிரோசை 7/2/2011 மின்னிதழ்
Post a Comment