Wednesday, November 12, 2008

ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ்

பெங்களூர் நகரம். இனிக்கும் சாம்பாரும், பை-2 காபியும், குங்குமப் பொட்டு வைத்த, வெளுத்த மனிதர்களும் நிறைந்த ஊர். அப்போது இரண்டாண்டுகளாகி விட்டிருந்தது. அந்த ஊரில் அவன் ப்ரம்மச்சர்யத்தைக் (பேச்சலர்?!) கடைப்பிடிக்க ஆரம்பித்து. மடிவாலாவுக்குப் பின்புறம் இருக்கும் S G பாள்யா அலியாஸ் சடுகுண்டே பாள்யாவில் வாசம். அங்கிருந்து, பன்னர்கட்டா ரோட்டுக்குச் செல்லும் ஒரு குறுகலான, பாதையின், மிகச் சிக்கலான ஒரு முனையில் இருக்கும் ஹோட்டல்தான் நமது 'ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ்'.

பொதுவாகவே மலையாளக் கிறிஸ்துவர்கள் அதிகமான அந்தப் பகுதியில், கேரளா மெஸ்களே அதிகம். சற்றேனும் தமிழ் கலந்த சாப்பாடு வேண்டுமானால், அன்னபூர்ணேஸ்வரியைத் தான் நம்ப வேண்டும். பெரிய அரிசிச் சாதமும், கவுச்சி வாசமும் கமழும் கேரளா மெஸ்களுக்கு, சைவனான இவன் ஆரம்பத்தில் தெரியாமல் சென்றுவிட்டு பட்டபாடு சொல்லி மாளாது.

அந்தப் பகுதியில், தமிழர்களும் சற்று அதிகம்தான். பெரும்பாலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து பிழைப்புக்காக அங்கு வந்து, கட்டிட வேலையும், இதரபல விளிம்பு நிலைத் தொழில்களும் செய்வோர். அந்த பகுதியில் வசிக்கும் ஏனையோர்கள், இவனைப் போன்ற மென்பொருளாளர்களும், டை கட்டியபடி கல்லூரியில் படிக்கும், வட நாட்டுப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும், மற்றும் சில சீனா ஜப்பான் தோற்றமுடையவர்களும். இவ்வகையோர் அனைவரும் உணவுக்காய், ஒன்று கூடி, கலந்து கட்டி அடிக்கும் சமத்துவக்கூடம் தான் நமது அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ். பொதுவாக, மலையாளிகள் இங்கே வருவதில்லை. ஏனென்றால், இங்கே சாப்பிடும்போது விக்கினால் தண்ணீர் தான் கிடைக்கும். டீ கிடைக்காதே. அதனாலோ என்னவோ.

அன்னபூர்ணேஸ்வரியை நடத்துபவர் மதுரைக்காரர். 18 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் வந்து செட்டில் ஆனவர். பெயர் கந்தன். சற்று குள்ளமான, பருத்த மனிதர். அவருடைய சகோதரர்களும், அவருக்கு ஹோட்டல் தொழிலில் கைவேலைகளுக்கு உதவுகிறார்கள். சகோதரர்களுக்கு பழனிசாமி, குமரன், செந்தில் என்று எல்லாமே முருகன் பெயர்கள். அப்பா முருக பக்தர் போலும். அவரையும் அவ்வப்பொழுது அன்னபூர்ணேஸ்வரியில் காணலாம். கல்லாவில் அப்பாவை, இருத்தி, அவர் கொஞ்சமே கேட்கும் காதுடன், அமௌண்டைக் கேட்டு, சில்லறை கொடுப்பதைக் காண்பதில் கந்தண்ணனுக்கு ஒரு சந்தோஷம். அப்பா பெயரும் முருகன் பெயராக இருக்குமா என்றொரு ஐயப்பாடு இவனுக்கு.

சில சமயங்களில், கல்லாவில் கொடுத்த காசிற்கு மீதி கொடுக்கையில், சாஸ்தியா இருந்தா குடுத்துருங்க.. கம்மியா இருந்தா கேக்காதீக என்பார் கந்தண்ணன்.

பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும் எனும்படியெல்லாம் ஒன்றும் உணவிருக்காது அன்னபூர்ணேஸ்வரியில். காலையும், இரவும், இட்லி, பரோட்டா, தோசை வகையறாக்கள். மதியம் சாப்பாடு, சாம்பார், காரக்குழம்பு தொட்டு பொரியல், அப்பளம், வடை எல்லாம். மதிய உணவைப் பொறுத்த வரை அன்னபூர்ணேஸ்வரியை தாராளமாய் நம்பலாம். ஆனால், காலையும், இரவும் எப்போது வேகாத பரோட்டா கிடைக்கும், எப்போது புளித்த இட்லி கிடைக்கும் என்பதெல்லாம் அவரவர் புண்ணியம். இரவில், அன்னா சாம்பார் உண்பவர்களுக்கெல்லாம் தெரிந்த / தெரிய வேண்டிய உண்மை, மாலைக்கு மேல், சாம்பாரில், ரசத்தையும் கலந்து விடுவர் என்பது.

சக்திவேல், கோடீஸ்வரன், ராமராஜன், செல்வண்ணன் போன்றோர்தான் அன்னபூர்ணேஸ்வரியின் வழங்குநர்கள். அதாவது சப்ளையர்கள். ஓராண்டுக்கும் மேலாக இவன் அன்னபூர்ணேஸ்வரியின் வாடிக்கையாளன் என்பதால் அவர்கள் அனைவருக்குமே இவனை நன்றாகத் தெரியும். மற்றவர்களை விட, இவன் கேட்டது சீக்கிரம் கிடைக்கும். இவனுடன் உணவருந்த வரும் இவன் மாமாவுக்கு, இட்லியுடன் காரச்சட்னி என்பது அமிர்தத்துடன், அவிர்பாகம் போன்றது. சக்திவேல், மாமாவுக்காக காரச்சட்னியைத் தனியாக எடுத்து வைத்திருப்பான். அந்தக் காரச்சட்னியை எப்படித்தான் மாமாவுக்குப் பிடிக்கிறதோ என்று இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

சக்திவேலும், கோடீஸ்வரனும், ஒன்று விட்ட சகோதரர்கள். தர்மபுரிக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன தொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். சக்திவேல் 10 ஆவதும், கோடீஸ்வரன் 6 ஆவதும் படித்து, 'முடித்து' விட்டிருந்தார்கள். மேலே படிக்காமல், வேலை பார்ப்பதைப் பற்றி ஒருநாள் மாமா கேட்டபோது, சக்திவேல் அவன் வேலை பார்ப்பதால்தான் அவன் தம்பியைப் படிக்க வைக்க முடிகிறது என்றும், தான் தம்பியாகப் பிறக்காத வருத்தத்தையும் சொன்னான். வந்த இடத்தில், வாயைக் கட்டிக்கொண்டிருக்க முடியாதா என்று, இவன் மாமாவைப் பின்னால் கத்திய போதும், சக்திவேலின் வார்த்தைகள், உள்ளுக்குள் உறுத்திக் கொண்டுதான் இருந்தன. மற்றொரு நாள், அவன் பல்லில் இருந்த கறையைப் பற்றிக் கேட்டபோது, ஊரில் குடித்த தண்ணீரால் பல் கறைபட்டு விட்டதாகவும், தர்மபுரிப் பக்கம் இது மிகச் சாதாரணம் என்றும் கூறினான் சக்திவேல்.

என்னதான் வறுமையின் பிடியில், வளர்ந்திருந்தாலும், எந்த வேலையைச் செய்யும்போதும், சந்தோஷத்துடன் இருப்பான் சக்திவேல். அதிலும் இவனைக் கண்டால், வள வளவென்று எதையாவது பேசி, கந்தண்ணனிடம் கெட்ட வார்த்தை வாங்காவிட்டால், அடுத்த நாள் விடியாது சக்திவேலுக்கு. என்னுடைய சந்தோஷத்தின் சாவி அடுத்தவர்கள் கையில் இல்லை என்ற தத்துவம் தெரிந்தவன் போல, அவர் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

ஒருநாள், மதியம் 2 மணியிருக்கும். இரைச்சல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்கும் சூழலில் பர பரத்துக் கொண்டிருந்தது அன்னபூர்ணேஸ்வரி. பாத்திரம் கழுவும் பாத்திரமான மல்லிகா அக்கா, எங்கேயோ, போய் விட்டு, அப்போதுதான் உள்ளே வந்துகொண்டிருந்தது. இன்னா மத்யானத்த்லயே தண்ணி அட்ச்சுனு வண்ட்டியா என்று மல்லிகா அக்காவைக் கேட்டான் சக்திவேல். அதுவும் கந்தண்ணனின் அப்பாவுக்கே கேட்கும் ஸ்தாயியில். அய்யே.. உனுக்கும் வேண்ணா வாயேன்.. ஊத்துறேன்.. என்று இவன் காதும், கேட்காததாகி விடும் டெசிபெலில் கூறி விட்டு மல்லிகா அக்கா உள்ளே சென்றுவிட்டது.

மற்றொரு நாள் இரவில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, இவன் தோழி, அலைபேசிக்கு அழைத்து, இவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, இவன் வேக, வேகமாய் சாப்பிட, அலைபேசியையும், அலைபாயும் இட்லியையும் கணக்கிட்டு, அண்ணா.. கூப்ட்டது கேர்ள் பிரெண்டா.. லவ் பிரெண்டா-ணா.. என்று ஒரு கேள்வியைக் கேட்டான் சக்திவேல். சென்னை-28 படத்தில், சண்முகசுந்தரம் பௌலிங்கா, பீல்டிங்கா.. என்று கேட்பாரே. அப்படி ஒரு கேள்வி. பீறிட்டு வந்த சிரிப்பைத் தவிர வேறு ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டான் இவன்.

சக்திவேலும், கோடீஸ்வரனும் தவிர வேறுசில சப்ளையிங் சிறார்களும் இருந்தனர். ஆனால் நிர்வாகம் எதிர்பார்த்த லாங் டெர்ம் கமிட்மென்ட் இல்லாத காரணத்தால், அதிகபட்சம் ஒரு மாதம்தான். சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவர். இப்படி நிகழும்போதெல்லாம், அதே வயதிலோ, இல்லை இன்னும் சிறியவர்களையோ, அடுத்த ஓரிரு நாட்களில் கொண்டுவந்து இறக்கிவிடுவார் கந்தண்ணன். புதிதாக வருபவர்களிடமும், பெயர், ஊர் என்று கேட்டுத் தெரிந்து கொள்வது இவன் வழக்கம். பெரும்பாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளாகத்தான் இருக்கும். இதற்கு இந்தப் பகுதி மக்களில் அதிகப்பேருக்கு கன்னடம் தெரிந்திருக்கிறது என்ற காரணம் மேலோட்டமாய்த் தெரிந்தாலும், இப்பகுதி மக்கள் வறுமைக்குத் தப்புவதற்காக குழந்தைகளை, பெங்களூருக்கு அடகு வைக்கத் தயங்குவதேயில்லை என்பதுதான், கந்தண்ணன் போன்றோருக்கு வசதியாய்ப் போய்விட்டது.

பையனுக்கு போடும் சாப்பாட்டு செலவும் மிச்சம். மாதம் 3000 ரூபாய் பணமும் கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பணத்தை சிறார்களிடம் கந்தண்ணன் தருவதே இல்லை. வாங்கிவிட்டு எங்கேனும் ஓடிவிட்டால் வீட்டுக்கும் இல்லாமல், கடைக்கும் இல்லாமல் ஒரு ரிஸோர்ஸ் வீணாகிவிடுமே என்ற நல்லெண்ணம்தான். முதல் வாரத்தில், அப்பா வந்து சம்பளத்தை பத்திரமாக வாங்கிக்கொள்வாராம். தகவல் உபயம் சக்திவேல்தான். 'டீ காசு' என்று தினமும் கிடைக்கும் 5, 10 ரூபாய்கள் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் சந்தோஷத்தின் ஒரே அடையாளம்.

கடிவாளமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கை சீரழிவதற்கு மாய மந்திரமா போட வேண்டும். கோடீஸ்வரன் ஒரே சமயத்தில் 2 பீடி குடிக்றாண்ணா என்று சக்திவேல் இவனிடம் கூறியபோது, நம்பவே முடியவில்லை. இல்லண்ணா என்று கூறிவிட்டு கோடீஸ்வரன் வெட்கத்துடன் உள்ளே ஓடிவிட்டான். ஒரு தலைமுறை சீரழிவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் பாரம் மனதை அழுத்தியது இவனுக்கு.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும். அப்பா வந்து, கந்தண்ணனிடம் 3500 ரூபாய் வாங்கிக்கொண்டு, தீபாவளிக்கு ஊருக்குக் கூட்டிச்செல்வார் என்று சக்திவேல் கூறினான். அன்று தொடங்கி ஒரே தீபாவளிப் பேச்சுதான். தங்கச்சி ராணிக்குப் பட்டாசு வாங்கித்தருவேன் என்று தொடங்கி, அவனையறியாமல் அவன் மனதில் பூட்டி வைத்திருந்த ஆசைகளையெல்லாம் இவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சக்திவேல். இவனைவிட சிறியவனான கோடீஸ்வரன் பீடி குடிக்கும்போது, சக்திவேலுக்கு மட்டும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதிருந்த காரணம், அவனுக்குள் மறைந்திருந்த கடமையுணர்வும், பாசமுந்தானென்று புரிந்தது இவனுக்கு.

தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இரவு. இவன் அன்று தான் ஊருக்குக் கிளம்புகிறான் என்று அனைவருக்கும் தெரியும். நீ இன்னிக்கு போணா.. ஞாயத்துக்கெலம ராத்ரி நம்மளும் போறோம்ல என்றபடியே, இவன் கேட்டிருந்த ஆனியனைக் கொண்டு தந்தான் சக்திவேல். சாம்பார் ஊற்றுகையில், என்னணா அந்தக்கா எப்டி க்குது.. என்று இவனைக் கலாய்த்துக் கொண்டே திரும்புகையில், அவ்வழியே எதேச்சையாக வந்த கந்தண்ணனின் மச்சான் பூபதியின் மேல் கையிலிருந்த சாம்பார் பக்கெட்டை தவற விட்டான்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சடுதியில் வந்த கந்தண்ணன், வந்த வேகத்தில், நிற்காமல், 'பொளேர்' என்று அறைந்து விட்டார் சக்திவேலை. எதிர்பாராமல் நடந்தேறிவிட்ட நிகழ்வுகளை இவன் புரிந்துகொள்வதற்குள், தன் வயதை மறந்து, அவமானத்தால் நெக்குருகி, சத்தமாக அழுதபடி அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தான் சக்திவேல். அதற்கு மேல், அந்த ஆனியனை சாப்பிடப் பிடிக்காமல், தங்கச்சி ராணி தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பாளா, லேட்டாக வந்தால் இனிமேல் மாமாவுக்கு காரச்சட்னி கிடைக்குமா, அடுத்து வரும் பையன் எந்த ஊரைச் சேர்ந்தவனாக இருப்பான் என்றெல்லாம், புதிதாய் ஊற்றிய தோசையில் முளைக்கும் ஓட்டைகளைப் போல, முளைத்துக் கொண்டே இருக்கும் கேள்விகளுடன், கை கழுவி விட்டு, பஸ்சைப் பிடிக்க நடக்கத் தொடங்கினான் இவன்.

உயிரோசை 02/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.



2 மறுமொழிகள்:

siva November 15, 2008 at 6:55 AM  

இனிய மதி உனது சேவைக்கு எனது பாராட்டுகள். நான் எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு மதன் உனக்குள் இருப்பான் என்று. ஆச்சர்யபடுகிறேன் ஆனந்தமடைகிறேன். அன்னபூரணி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ் எங்கு உள்ளது என்று மட்டும் எனக்கு தெரியவில்லை. நான் அங்கு வந்தவுடன் அதனை தெரிந்து கொள்கிறேன். இன்னும் எதிர் பார்க்கிறேன் உனது சேவைக்கு எனது பாராட்டுகள். சிவா பா

மதன் November 21, 2008 at 5:04 AM  

சிவா அண்ணா.. ரொம்ப பாராட்டிட்டிங்க.. Thanks Na..!

  ©Template by Dicas Blogger.

TOPO