வதந்தியா? ரகசியமா?
ஒரு வதந்தியைப் பரப்புவதற்கும்,
ஒரு ரகசியத்தைக் கசியச் செய்வதற்குமான
இடைவெளியில் நின்றுகொண்டு
எப்படி முடிவெடுக்கலாம்?
தேர்ந்தவொரு வதந்தி என்பது
மிகுந்த ஆர்ப்பாட்டத்துடனும்,
ரகசியம் என்பது மௌனித்த கண்களுடனும்
நிகழ வேண்டும் என்பதால்
நம் சொற்களைப் பொறுத்து..?
வதந்தி என்பது
கிளர்ச்சியைக் கிளப்புவதாகவும்,
ரகசியம் என்பது
பொறுமையை சோதிப்பதாகவும்
இருத்தலே சிறப்பென்றால்
உங்கள் சாதுரியத்தை ஒட்டி?
அல்லது கேட்பவனின் அறியாமையை ஒட்டி..?
உட்புகுத்தப்படும் காதுகளிடமிருந்து
வதந்தியிலிருக்கும் பொய்மை
வசதியாய் மறைந்து கொள்வதும்,
காதுகளை எதேச்சையாய் சந்தித்ததாகக்
காட்டிக் கொள்ளும் ரகசியத்தின் உண்மை
அக்காதுகளின் முன்
நர்த்தனம் செய்வதும்தான் சம்பிரதாயம் எனில்,
நம் பொய் மெய்களின் புஜபலத்தை உத்தேசித்து..?
சற்றே குழப்பமாக இருக்கிறது..
ஆனால்
ஒன்றை மாத்திரம்
மிக உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்..
தயவுசெய்து
நீங்களாவது ஒரு முடிவுக்கு
வந்து விடுங்கள்..
உங்கள் வதந்தியில் இருக்கும் பொய்
நிஜமாக இருந்துவிடுவதற்குள்..
உங்கள் ரகசியத்தில் இருக்கும் உண்மை
அப்படியில்லாமல் போய்விடுவதற்குள்..
நீங்களாவது ஒரு முடிவுக்கு
வந்து விடுங்கள்..
இதை
ஒரு வதந்தியாய்,
ஒரு ரகசியமாய்
எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.
1 மறுமொழிகள்:
அவரவர் மனதை பொறுத்தே.. வாழ்த்துக்கள்
Post a Comment