Tuesday, February 15, 2011

உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்




ஒரு பூ மலரும் அவசரத்தோடு
அவிழ்ந்து கொண்டிருந்தது அவ்விரவு

கிழக்கை விரும்பாத காலைகளுக்கே
உரித்தான அமானுஷ்யம்
இருட்டின் காதோர
ரோமங்களினுள் முத்தமிட்டு
அதிகாலை நியான் மஞ்சளில்
கனத்துக் கொண்டிருந்தது

ரோமாஞ்சனம் வழியும்
பார்வையைத் தொலைத்த அக்காலை
விடிதலை மறந்த
சுழற்சியில் நின்றுவிட்டிருக்கிறது

இக பர
பரமபதத்தின் மீது
ஒற்றைப் பகடையாய்
உருளத் துவங்கும் புள்ளியில்

உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம்
விடைபெறும் வைகறைகள்
புலர்ந்து விடுவதில்லை
அத்தனை சுலபத்தில்.


விக்ரமாதித்யன் நம்பியின் ‘பொருள்வயின் பிரிவு’ என்ற கவிதையின் பாதிப்பில்.

 நன்றி: உயிரோசை 7/2/2011 மின்னிதழ்

Wednesday, February 2, 2011

அதீதமாய் ஒரு கவிதை


அரந்து, பரந்து ஓடி, நாலு காசு பார்க்க மாட்டோமாவென்று அனைவரும் உழன்று கொண்டிருக்கும் எந்திர கதி வாழ்வுத் தளத்தில் ஒரு சிற்றிலக்கிய (இந்த ‘சிற்றிலக்கியம்’ என்ற சொல்லாடலிலேயே எனக்கு உடன்பாடில்லை) இதழைத் துவங்கும் எண்ணம் வருவதற்குத் தேவைப்படும் மனோ திடத்தைக் கற்பனை செய்து பார்ப்பதில் பெருமூச்சு மிஞ்சுகிறது.

இந்த வகையில் சகோதரி மீரா ப்ரியதர்ஷினியின் மின்னஞ்சலில் தெரிய வரப்பெற்றது அதீதம் என்ற இணைய இலக்கிய இதழ் குறித்து. மீரா மற்றும் அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், அனுப்பிய கவிதையைப் பிரசுரித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்க்க: http://www.atheetham.com

இனி கவிதை.

இசைய அமைத்தல்




வலுக்கட்டாயமாக 
ஏதேனுமொரு பாடலை யோசித்து
அறைத் தோழனுக்குக் 
கேட்கும்படி முணுமுணுப்பேன்.

மிக அணிச்சையாய் காட்டிக்கொள்ளப்பட்ட
அந்தப் பாடலுக்குப் பின்புறம்
மெல்லிழையாய் படிந்திருக்கும்
என் கயமை குறித்து
அவனுக்குத் தெரியாது,
சற்று நேரம் கழித்து
அதே பாடலை அவன்
முணுமுணுக்கையில்.

அப்போது நான் புன்னகைப்பதும்


Tuesday, February 1, 2011

பலூன்களிடம் உடைபடுதல்



அன்பின் போதையில்
சொருகிக் கிடந்த விழிகள்
திடுமென விழிப்புற்று மிரள்கின்றன
நீ உமிழ்ந்து சென்ற வார்த்தைகளில்

காற்றின் காவலாளியாகத்
தன்னை எண்ணிக் கொண்டிருந்த
பலூனைப் படாரென உடைத்து மகிழ்கிறது
பிறந்தநாள் கொண்டாடி முடித்த குழந்தை

ஊதி உயிர்ப்பித்த உடனேயே
உடைபடப்போகும் உண்மையை
பலூன்களுக்கு சொல்லிவிடும்
என் எண்ணத்தை
மிக மென்மையாய்
அழிக்கத் துவங்கினேன்

நீயும்
என்னிடம்
எதுவும்
சொல்லியிருக்கவில்லை

நன்றி: உயிரோசை 31/01/2011 மின்னிதழ்

  ©Template by Dicas Blogger.

TOPO