பதிவுலக நண்பர்களும், பகிர வேண்டிய சில நன்றிகளும்!
ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதி வந்தாலும் நான் ஒரு சொல்லிக் கொள்ளும்படியான பதிவன் என்றெனக்குத் தோன்றவில்லை. தொடர்ச்சியாக எழுதுவதில்லை. எழுதுவதும் உருப்படியாக இல்லை. சக பதிவர்கள் எவரையும் சந்தித்ததில்லை. பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. இலக்கியக் கூட்டங்களைப் பார்த்ததேயில்லை. ப்ப்பா.. எத்தனை இல்லைகள்!
அண்ணன் ஜோ அவர்கள் சில முறை பெங்களூர் பதிவர்கள் சந்திப்புக்கு அழைத்தார். என்னால்தான் சில தனிப்பட்ட காரணிகளால் கலந்து கொள்ள முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கு வராமல் நான் பெண் நண்பிகளுடன் (!) ஊர் சுற்றுவதாக அவதானித்து தன்னுடைய கூர் நுண்ணுணர்வின் வன்மையை நிரூபித்தார் அண்ணன் ஜோ அவர்கள்! அவர் வாக்கு பலித்தால் காதற் கடவுளாம் Eros-க்குப் பொங்க வைத்து சாமி கும்பிடுவதாக இந்த நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்.
இன்னும் நிறைய எழுத வேண்டும். இனியாவது வாசிக்கத் துவங்க வேண்டும். இவை போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய.. நேரமில்லை என்று சொல்ல மாட்டேன். மாறாக, சோம்பேறித்தனம் என்பதை ஒப்புக் கொள்வேன்.
இந்தச் சூழ்நிலையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரே பதிவர் அண்ணன் ஜீவா aka ஜீவ்ஸ் அவர்கள். பதிப்பித்த புத்தகங்களில் எனக்குத் தரவேண்டிய புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அண்ணன் பொன்.வாஸ் அவர்கள் பெங்களூர் வந்த போதென்று பார்த்து நான் கோவைக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆக அவரையும் சந்திக்க முடியவில்லை.
புத்தகங்களை ஜீவ்ஸிடம் கொடுத்துச் சென்றிருந்தார் வாசு அண்ணன். அவைகளை வாங்கச் சென்ற போதுதான் ஜீவ்ஸைப் பார்த்தேன்.
கூரான கண்கள். நேர்த்தியான வார்த்தைகள். வீடு முழுக்கப் புத்தகங்கள். இனிமையான நண்பர் ஜீவ்ஸ். கிட்டத்தட்ட ஒரு மாதம் புத்தகங்களை வைத்திருந்ததற்கு அவருக்கு நன்றி!
-0-
சென்ற முறை கோவைக்குச் சென்றிருந்த போதுதான் கலாப்ரியாவுக்காக விஷ்ணுபுரம் நண்பர்கள் நடத்திய கூட்டம் நிகழ்ந்தது. செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பாருங்கள்.. தூங்கித் தொலைத்து விட்டேன். ஞாயிறு இரவு கிளம்புகையில்தான் காந்திபுரத்தில் வலை நண்பர்கள் அந்நிகழ்வு குறித்து வைத்திருந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.
சந்தோஷமாக இருந்தது நிறையவே. ஊரெங்கும் குறிப்பிட்டவொரு மாநாட்டுக்கு அழைக்கும் போர்வையில் நிகழ்ந்திருந்த சுயமோக விளம்பரங்களை, கொள்கைக் கூவ(ங்)ல்களைக் கண்டு அடைந்திருந்த அலுப்புணர்வுக்கு செல்வேந்திரனும், வா.மணிகண்டனும் இன்னும் சிலரும் ஆறுதலளித்தார்கள். நிகழ்ச்சியை நடத்தியதோடு, அதற்கும் சேர்த்து அவர்களுக்கு நன்றி. மனதார!
-0-
அதே கோவை வாசத்தின் போது, அன்னபூர்ணாவில் அம்மாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசி அழைப்பு. அண்ணன் பா.ரா சவுதியிலிருந்து அழைத்து, என் புத்தகத்தைப் படித்ததாகவும், நன்றாக இருந்தது என்றும் பாராட்டினார். வாழ்த்தினார். நான் பேசிவிட்டு வைத்ததும், என் பேச்சிலிருந்து நடந்ததைப் புரிந்து கொண்ட அம்மாவின் கண்களில், மகனின் புத்தகத்தை ஒருவர் கண்காணாத தொலைவிலிருந்து அழைத்துப் பாராட்டுவதைக் கண்ட புளகத்தின் ஈரம் தெரிந்தது. என்னைப் பாராட்டியதை விட, இதற்குத்தான் நான் பா.ரா-வுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி பா.ரா!
-0-
சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் என் அலுவலக நண்பனொருவன் அவனுடைய நண்பரொருவர் CA இறுதித்தேர்வுக்காக திருப்பூரில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் நான் கோவையென்பதால் என்னால் உதவ முடியுமா என்றும் கேட்டான். அந்த நண்பர் சிரமப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அவன் குறிப்பிட மறக்கவில்லை. என் நண்பனும், அவன் நண்பரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். எனக்கோ திருப்பூரில் யாரையும் தெரியாது. சரி முயற்சிக்கிறேன் என்று மட்டும் கூறி வைத்தேன்.
திடீரென ஒரு மின்னல். கொஞ்சம் பழைய சமீபத்தில் சகோதரி அன்புடன் அருணா அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு பதிவர் கம் மருத்துவர் புரூனோ மற்றும் சில நண்பர்கள் உதவியதைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் சிங்கை நண்பர் ஒருவரின் உயிரைக் காக்கவெல்லாம் வலையில் உதவுகிறார்களே.. நாம் ஏன் பதிவுலகில் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்குத் தட்டுப்பட்டது அண்ணன் பரிசலும், வெயிலானும்தான். திருப்பூர் பதிவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் எனக்கு வேறு யாரையும் தெரியாது!
சரியென்று அவர்கள் தளத்திலேயே முகவரியைத் திருடி, ஒரு மின்னஞ்சல்தான் அனுப்பினேன். சற்று நேரத்திலேயே பரிசல் ஃபோன் செய்தார். கொங்குத் தமிழ் வாசத்தில் 'வரச் சொல்லுங்க.. பாத்துக்கலாம்' என்றார்.
'எம்மேல நம்பிக்க இருக்கல்ல.. நீங்க நேரா ரெக்கார்டிங் தியேட்டர் வந்துடுங்க' என்று ட்யூன் ஓக்கே ஆகும் முன்பே ராஜா சார் கண்மணி அன்போடு பாடலின்போது கமல்ஹாசனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது எனக்கு.
உபயம்: யூ ட்யூப்!
தேர்வு நடக்கவிருந்த ஜீவாபாய் மேனிலைப்பள்ளியருகேயே, தெலுங்கு பேசும் ஒருவருடனேயே தங்க வைத்து, எல்லா உதவிகளையும் செய்து வைத்திருக்கிறார் பரிசல். தேர்வுகளை முடித்துக் கொண்டு ஊருக்குச் சென்ற அந்நண்பர் ஃபோனில் எனக்கு நன்றி சொன்னபோது நெகிழ்ச்சி கேட்டது. அண்ணன் பரிசலுக்கும், வெயிலானுக்கும் நன்றி!
சரியான நேரத்தில் செய்யப்படும் உதவிக்கு, சரியான நேரத்திலேயே நன்றியும் செய்யப்பட வேண்டும். அவ்வகையில் நேரந்தப்பி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். பணிப்பளு மற்றும் இதர பல பிரச்சினைகளின் காரணமாக. பரிசலும், வெயிலானும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்!
சந்திப்போம்!
நல்ல பதிவு. பரிசலுக்கு நன்றி பார்சல்!
நன்றிகள் ததும்பும் பதிவாக இருக்கிறது
நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் அன்பும் மனிதமும் திறமையும் பிரியத்துக்கும் உரியவர்கள் வலையுலக கொடைகள்
அனைவருக்கும் என் வணக்கமும் அன்பும்
நல்ல பதிவு, நன்றி வெய்லான் :))
வெயிலான் - :)
நேஸ் - உங்களுக்கும் நன்றி!
எம்.எம்.அப்துல்லா - உங்களுக்கும் நன்றி!
குரல் கேட்டதே மனசில் நிற்கிறது மதன்.
அம்மாவும் அருகில், அதுவும் பசியாறிக் கொண்டிருந்த போது...
மனசு போக வயிறும் நிறைந்தது.
//
அதே கோவை வாசத்தின் போது, அன்னபூர்ணாவில் அம்மாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசி அழைப்பு. அண்ணன் பா.ரா சவுதியிலிருந்து அழைத்து, என் புத்தகத்தைப் படித்ததாகவும், நன்றாக இருந்தது என்றும் பாராட்டினார். வாழ்த்தினார். நான் பேசிவிட்டு வைத்ததும், என் பேச்சிலிருந்து நடந்ததைப் புரிந்து கொண்ட அம்மாவின் கண்களில், மகனின் புத்தகத்தை ஒருவர் கண்காணாத தொலைவிலிருந்து அழைத்துப் பாராட்டுவதைக் கண்ட புளகத்தின் ஈரம் தெரிந்தது.
//
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்!
//
பதிவர் சந்திப்புக்கு வராமல் நான் பெண் நண்பிகளுடன் (!) ஊர் சுற்றுவதாக அவதானித்து தன்னுடைய கூர் நுண்ணுணர்வின் வன்மையை நிரூபித்தார்
//
இந்த வயசில ஒரு ஆண்மகன் பெண்/பெண்களோடு தான் சுற்ற வேண்டும். என்ன செய்ய, வெளிநாட்டவர்கள் நம்மில் பெரும்பாலானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சந்தேகப்படும் அளவுக்கு, ஆண்கள் ஆண் நண்பர்களோடும், பெண்கள் தோழிகளோடும் சுற்றியே பொழுதைக் கழிக்கிறார்கள்.
/ப்ப்பா.. எத்தனை இல்லைகள்!/
நிறைய இல்லைகள் எனக்கும் பொருந்தும்!
தவிர வலையுலகம் அவசர காலங்களில் கைகொடுக்கும் அன்புலகமாகவே இருக்கிறது.
nalla eluthuringa ..... konjam somberithanatha vittutu innum nalla eluthunga....... ungal kavithai thoguthiyai padithu kalliga ( ki illa) poren... padithu vittu pathil podurenn........
ஜோ! - நீங்க பேச ஆரம்பிச்சாலே பயமா இருக்குங்க..! ‘வேல இருந்தா மட்டும்..’னு ஆரம்பிக்கிற சாந்தாமணி கமெண்ட்ட நெனச்சு நெனச்சு சிரிச்சுருக்க்கேன்! :D
அருணா - நீங்கள் சொன்னது சரிதான் சகோதரி!
பொன் சிவா - எழுத முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் வலையைப் பார்த்து இப்போதுதான் எழுதத் துவங்கியிருக்கிறீர்கள் என்றறிந்தேன். நீங்களும் எழுதுங்கள்!
பதிவர் சந்திப்பு ஏதாவது நடந்தால் எனக்கும் தெரிவியுங்கள்
இனியன் பாலாஜி
kpsbala8@yahoo.co.in
அன்பின் மதன்
வலையுலகம் நட்பின் சிறப்பினை அறிந்த உலகம். நலல் செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
நல்வாழ்த்துகள் மதன்
நட்புடன் சீனா
நல்ல பதிவு,
தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி சீனா அய்யா!
நன்றி அஹமது!
Post a Comment