அழகர்சாமி? ஆர்க்குட்? அசிங்கம்? அடப்போங்கய்யா.. என்னத்தனு பேரு வெக்க!
இன்றைய இளைஞர்களில் சிலரின் தரக்குறைவான நடத்தை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை இங்கே பார்க்கலாம். இது பார்ட்-II என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
மேட்டர் இதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஃபார்வர்ட் மின்னஞ்சலில்தான் அறிமுகமானார் அழகர்சாமி காத்தவராயன். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இவருடைய மகனுக்குப் பெண் தேட ஆர்க்குட்டில் ஒரு கம்யூனிட்டியைத் துவக்குகிறார்.
ஆர்க்குட் ஒரு சோஷியல் நெட்வொர்க்கிங் சைட். அதாகப்பட்டது சமூக நட்புறவு வலைத்தளம். இங்கு வந்து இவர் ஏன் தன் மகனுக்குப் பெண் தேடுகிறார் என்ற சந்தேகத்துடனேயே அவருடைய ஸ்க்ராப் புக்கைத் திறந்தால் நமக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது.
சகிக்க / பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளிலெல்லாம் இவரைப் போட்டுக் காய்ச்சியெடுக்கிறார்கள் நம்முடைய so called இளைய தலைமுறையினர். அதாவது இவருக்கு ஆர்க்குட்டைப் பற்றித் தெரியவில்லையாம். இவரே ஒரு டப்பாத் தலையராம் (இதுதான் அங்கு இருப்பதிலேயே டீஸண்ட்டான வார்த்தையாக இருக்கிறது!). இவருக்குப் பெண் கிடைத்ததே பெருசாம். இந்த லட்சணத்தில் இவர் பையனுக்கு வேற பொண்ணு பாக்க வந்துட்டாராம். இவருக்கு ஆர்க்குட்டெல்லாம் ஒரு கேடா.. எனபதுதான் இவர்களின் பொதுவான நிலைப்பாடாக இருக்கிறது.
இதற்கு மேல் அங்கிருக்கும் ஸ்க்ராப்களை நீங்கள்தான் போய் படித்துக் கொள்ள வேண்டும். சாம்பிளுக்கு இந்தப் பக்கத்தை வேண்டுமானால் பாருங்கள். Vomit bag இருந்தால் அருகே வைத்துக் கொள்ளல் நலம்.
-
இந்த ப்ரொஃபைல் குறித்து இதுவரை எனக்குப் புரிந்தவைகள் பின்வருமாறு. முதலில் இது ஒரு fake ப்ரொஃபைல். முகம் தெரியாதவர்களின் புகைப்படங்களைக் கொண்டு இவனுங்களா அழகர்சாமி காத்தவராயன் என்றொரு டுபாக்கூர் ப்ரொஃபைலை க்ரியேட் செய்திருக்கிறார்கள். பெயர், புகைப்படம் என்று எல்லாமே எள்ளலுக்குரிய வகையிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அப்புறம் இவனுங்களா ஒரு பையன் ப்ரொஃபைல் (கனகரத்தினம் அழகர்சாமி). இவனுங்களா ஒரு அம்மா ப்ரொஃபைல் (அழகர்சாமியின் மனைவி தமிழரசி அழகர்சாமி என்ற பெயரில். Fake ப்ரொஃபைலுக்கு வெச்சானுங்க பாரு பேரு!). அப்புறம் இவனுங்களா முருகேசன் என்ற இன்னொரு மகனுக்குப் பெண் தேட wife for Murugesan என்ற பெயரில் ஒரு கம்யூனிட்டியும் க்ரியேட் செய்து அதை ஃபேமஸும் ஆக்கியிருக்கிறார்கள்.
எதுக்கு?
எல்லாம் விளம்பரத்துக்குத்தான். ஒரு தனியார் இணையதளம் செய்திருக்கிறது இத்தனை கூத்தையும். நம் மக்கள்தான் எதையாவது பார்த்து விட்டால் ஒடனே ஸ்க்ரீன் ஷாட்டெடுத்து மெயில்ல போட்டு, நாந்தான் மொதல்ல பாத்தேன்னு பல்லிளித்துக்கொண்டு ஊருக்கே அனுப்பும் கூட்டமாயிற்றே. இப்படியே ஃபார்வர்டில் பிரபலமாகி, வந்து பார்க்கும் இளஞ் சிங்கங்கள் எல்லாம் கண்ட மேனிக்குக் கெட்ட வார்த்தை ஸ்க்ராப்புகளைப் போட்டுப் போட்டு, அகில உலக ஃபேமஸாகி விட்டார் அழகர்சாமி.
சரி எல்லாம் செய்தார்களே. அந்த மூன்று ப்ரொஃபைல்களிலும் போட்ட புகைப்படங்களுக்கு உரியவர்களை நினைத்துப் பார்த்தார்களா? அவர்களோ, அவர்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால் என்னத்துக்கு ஆகும்? எவ்வளவு அவமானம் அது அவர்களுக்கு?
அதை விட அவமானமாக இருக்கிறது எனக்கு. இது போன்ற ஒரு இளைஞர் பட்டாளத்தில் ஒருவனாகத்தானே நானும் கருதப்படுவேன் என்று நினைத்தால்.
அழகர்சாமி ப்ரொஃபைல் மட்டுமல்ல. மூன்று ப்ரொஃபைல்களின் ஸ்க்ராப் புக்குகளையுமே படிப்பவர்கள் கூசிப்போகுமளவுக்குக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள் நம் பையன்கள். பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன. அவர்களும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹேய் மாமா.. உன் பையன் சூப்பராயிருக்கான்.. கட்டித் தரியா என்ற ரேஞ்சுக்கு.
இணையத்திலும், வலையுலகிலும் அனானிகளாக வந்து ஆபாசங்களை அரங்கேற்றுவதைப் பல நூறு முறை கண்டிருக்கிறோம். ஆனால் இங்கோ நிஜ ப்ரொஃபைலிலேயே வந்து, கூடியுட்கார்ந்து கும்மியடிக்கிறது நம் இளைஞர் சமுதாயம்.
ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த விளம்பர வேகம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுக் கடைசி ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த ஸ்க்ராப்பும் வரவில்லை. இருந்தாலும் இவைகளையெல்லாம் டெலிட் செய்து தொலைந்தார்களென்றால் தேவலை. நானே ஒரு ஆறேழு முறை அப்யூஸை ரிப்போர்ட்டி விட்டேன் ஆர்க்குட்டுக்கு. ஒன்றும் நடந்த பாட்டைத்தான் காணோம்.
நீங்களே சொல்லுங்கள்.. யாரைக் குற்றம் சொல்வது .. விளம்பரத்துக்காக எல்லாவற்றையும் துவக்கியவர்களையா.. இல்லை.. ஒரு public forumல் இப்படி லோக்கலாக நடந்து கொண்டவர்களையா?
வெட்கக் கேடு!
-
தொடர்புடைய லிங்க்குகள்
அழகர்சாமி
அவர் மகன்
அவர் மனைவி
அவர் தொடங்கிய கம்யூனிட்டி