நஞ்சில் நனைந்த வரலாற்றுத் தடங்கள்
'பிரபலமாவது எப்படி?' என்ற கேள்விக்கான பதிலை நாம் அனைவரும், அவரவருக்கு இயன்ற அளவில், தத்தமது பிரக்ஞைக்கு உட்பட்டோ, படாமலோ தேடியலைந்து கொண்டேதானிருக்கிறோம். அலுவலகத்தில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்து ஆர்க்குட்டில் புகைப்படங்களை ஏற்றுவது, GTalkன் ஸ்டேடஸ் மெஸேஜில் ரெண்டு வரி கவிதையில் மேதாவித்தனத்தைக் காட்டுவது என்பவை நானறிந்த வரையில் யோசிக்க சிரமமில்லாமல் சிக்கிய உதாரணங்கள்.
ஓரளவுக்கு சீன் போடவே இத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்க, ஒரு பிராந்தியத்தையே, ஏன் நாட்டையே தன் சொல்பேச்சுக்கு ஆட்டுவிக்கும் அளவுக்கு ஒரு குறியீடாக உருப்பெற எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கும். எம்ஜியார், ரஜினி, கமல், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கண்கூடாக நம் சமூகம் பார்த்திருக்க, தங்களுக்கானதொரு கூட்டத்தை உருவாக்கியதோடு அல்லாமல் நம் காலத்தின் தவிர்க்க முடியாத பிம்பங்களாக இருப்பவர்களில் சில உதாரணங்கள்.
இப்படி தங்கள் திறமையினாலும் (?), இருக்க வேண்டிய இடத்தில், இருக்க வேண்டிய நேரத்தில் தங்கள் இருப்பமைந்த அதிர்ஷ்டத்தாலும் எத்தனையோ பேர் மக்கள் தலைவர்களாக வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களில் அடால்ஃப் ஹிட்லர் எனும் தனிமனிதர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் இங்கே பதிப்பித்து வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் சகோதரி தமிழ்நதி ஈழத்து நிகழ்வுகளை, The Pianist என்ற திரைப்படம் பார்த்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி உயிரோசையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையைப் படித்தபின் படம் பார்த்தேன்.
எதையாவது எழுத வேண்டும் என்று கை பரபரத்தது. படம் ஏகத்துக்கும் தமிழ்நதியின் கட்டுரை நினைவுக்கு வந்து வருத்தியதையா, ஹிட்லர் என்ற திருநாமங் கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதரொருவர் வரலாற்றின் பக்கங்களில் தாயை வன்புணர்வதினும் கொடிய காட்சிகளை விட்டுச் சென்றதையா, மீட்க முடியாத கடந்த காலம் விட்டுச் சென்றிருக்கும் உணர்வுகளை, வன்முறை வெறியாட்டத்தின் கொடும் புழுதியைப் பதித்து வைக்க சினிமா என்ற ஊடகத்தின் சக்தியை மேலைநாட்டான் இத்தனை வீரியத்துடன் பயன்படுத்துவதையா, இதில் எதையெழுதுவது என்று ஏகப்பட்ட குழப்பம். வழக்கம் போல் ஒன்றையும் எழுதாமல் விட்டுவிட்டேன்.
ஒருவன் தலைவனாகவே இருக்கட்டும். அவன் கையில் அதிகாரம் அளவின்றி ஆர்ப்பரிக்கட்டும். அவன் சொடுக்குப் போட்டால் சொம்பைத் தூக்கிக் கொண்டு கழிவறையின் முன் தேசமே காவலிருக்கட்டும். ஆனால் அவன் சொல்கிறானென்பதற்காக எப்படி ஒரு இனத்தையே அழித்தொழிக்க மனம் வருகிறது இந்த அரசு / இராணுவ அதிகாரிகளுக்கு? ஜெர்மனியாயினும் சரி. இலங்கையாயினும் சரி.
கடமையைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யுமுன் பல்லாயிரம்பேரை வேரறுக்கும் பாதகத்துக்கு ஒத்தூதியும், அதிகப் பணமும் நேரமும் செலவில்லாமல் மக்களை மாய்த்தொழிப்பதெப்படி என்பதை ரூம் போட்டு ஆராய்ந்தும்தான் ஜீவனத்தை நடத்த வேண்டுமென்ற தேவையின் திண்மை என்னவென்று யோசிக்கத் தோன்றாதா?
எதிரியென்றாலும் பரவாயில்லை. உன் நாட்டு மக்களைக் காக்க அவர்களைக் கொல்கிறாய் எனலாம். அப்பாவிப் பொதுமக்களைப் போய் கொல்வானேன்?
The Pianist படத்தின் நாயகனான யூதனொருவன், நாஜிக்களுக்கு பயந்து ஓடுவான். ஓடுவானென்றால் ’ஓடுவான்’. அப்படி ஒரு ’ஓடுவான்’! உயிருடனிருக்க வேண்டும் என்பதைத் தவிர உயிருடனிருப்பதின் நோக்கம் வேறேதுமில்லை என்ற அவனது ஓட்டத்தின் முரண்நகையை அத்தனை அழகாகக் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குனர் Roman Polanski.
2002ல் வந்த திரைப்படம். 1945ஐ அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பார்கள் ஒவ்வொரு அங்குலத்திலும். அந்தக் காலத்து ரயில் என்ஜினையெல்லாம் எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை.
பார்ப்போம். 'அவனிடம் காசிருக்கிறது.. செய்கிறான்..' என்ற சப்பைக் கட்டையே இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என்று. இப்பேர்ப்பட்ட படங்களை எடுக்கக் காசைத் தாண்டிய பேருழைப்பும், சிரத்தையோடு ஒரு நாவலெழுதும் எழுத்தாளனுக்கிருக்கும் அர்ப்பணிப்புணர்வும் தேவை என்பது நிதர்சனம்.
ஒரு காட்சியில் அவனை சந்தேகத்திற்குரியவன் என்று அடையாளங்கண்டு கொள்ளும் நடுத்தர வயது ஜெர்மானியப் பெண்மணி அவளின் கண்களில் காட்டிய குரூரம், ஹிட்லருக்கு மட்டும்தான் பித்தேறியிருந்ததா இல்லை ஒரு தேசத்தையே இனப்பித்து ஆட்டிவைத்திருந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது எனக்குள்.
அதோடு விட்டேனா? நானும் சும்மாயில்லாமல் Life is Beautiful, Defiance மற்றும் சமீபத்தைய Inglorious Basterds எல்லாம் பார்த்தேன். பார்க்க வேண்டிய பட்டியலோ Black Book, Europa Europa, The Longest Day, இன்னும் பலவென்று நீள்கிறது.
ரத்தத்தை நக்கிய பூனை மனதானது எனது. நாராய்க் கிழியும் நரம்புச் சரடுகளை சதைக் கூழில் குழப்பி விளையாடுவதைக் காண்பதில் ஒருவித ருசி. சிந்தித்துப் பார்க்கையில் வன்முறையைக் கையெடுப்பதன் விளைவுகளையும், குருதிச் சூடு குறையாமல் இருக்கும் பூமியின் கண்ணீரையும் குறைந்தபட்சம் நான் மறவாதிருக்கவேனும் இந்த வகைப் படங்கள் உதவுகின்றன என்று ஆற்றிக் கொள்கிறேன்.
The Pianistஐப் போலவே உண்மைச் சம்பவத்தைத் தழுவியெடுக்கப்பட்ட Defiance படத்தில் காட்டுக்குள் ஓடியொளிந்து வாழும் இரு சகோதரர்களை நம்பி அவர்களுடன் சிறிது சிறிதாக இணையத் துவங்கி, 1500 பேராகப் பெருகிவிடும் யூதப் பொதுமக்களின் கதை. ஆயுதங்களைத் திருடி முடிந்தளவுக்குப் போராடுவார்கள். அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு அடர் வனத்தினுள் 'வாழ்ந்து' வருவார்கள். அவ்விதிகளுள் ஒன்றின்படி பெண்களெவரும் கருத்தரிக்கக் கூடாது. சோறில்லாத பிரச்சினை மற்றும் கர்ப்பிணிகளை வைத்துக் கொண்டு போரிடவும், ஆபத்து வருகையில் ஓடித்தப்பவும் முடியாது என்பதால்.
இப்படியொரு நிலையில் தான் கருத்தரித்திருப்பதாக சக சகியிடம் சொல்லியழுவாள் ஒருத்தி. இது தப்பில்லையா என்று கேட்பவளிடம் சொல்வாள் கர்ப்பிணி, ’உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை’யென்று. நினைவிலிருந்த காட்சிக்கு நானே என் வார்த்தைகளைப் போட்டிருப்பதால் காட்சியின் இறுக்கத்தை எழுத்துகளுக்கு இடையிலிருக்கும் இடைவெளி கொண்டு விளக்க முடியவில்லை. திரையில் நெருடிக் கிழிக்கிறது வலி.
என் சகோதரி காயத்ரி சொன்னாள். 'ஜெர்மனி மேட்டர் கொஞ்சம் ஓவர் டோஸாயிடுச்சுடா..' என்று. ஹாலிவுட்டில் யூதப்படுகொலையை மையமாகக் கொண்டே அதிகப் படங்கள் எடுத்து விட்டார்கள் என்ற அர்த்தத்தில். என்னைக் கேட்டால் இந்த ஓவர் டோஸ் நமக்குள்ளும், நம் சமூகத்தினுள்ளும் புரையோடியிருக்கும் நேயமின்மையையும், வன்முறையையும் கணக்கிடும்போது மிக மிகக் குறைவேயென்று சொல்வேன்.
இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், இன்னும் எத்தனையாயிரம் பக்கங்கள் இந்தக் கொடுமைகளைப் பேசினாலும் லட்சம் பேரைக் கொன்ற வன்மமும், ஒரு இனம் 5 ஆண்டு காலம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டோடிய கொடூரமும் நாம் மறக்கக் கூடியவையில்லை என்பதற்காக.
செய்ய வேண்டியவைகளைக் காட்டிலும், செய்யக் கூடாதவைகளை நினைவுறுத்துவதுதான் இன்றைய தேவையாயிருக்கிறது.