Friday, February 26, 2010

அரூபத்தின் சித்திரம்



அரூபத்தை
வரைந்து கொண்டிருந்த
கடவுளின் ஆயிரம் கைகள்
இதற்கு முன் தீட்டியிருந்த
தனிமையின் ஓவியத்தில்
அரூபத்தின் சாயல் படிந்திருக்கிறதா
என்றொரு கணம் சிந்தித்தன

அவ்வோவியத்தினுள்
ஓசைப்படாது எட்டிப் பார்த்திருந்த
அரூபத்தை
சிருஷ்டிகர்த்தாவால்
உணர இயலாத கணத்தில்
மெலிதாய்
புன்னகைத்தது அரூபம்
அதே ஓவியத்தினுள்

தூரிகை தீட்டும் தன் கைகளை
வேடிக்கை பார்க்கத் துவங்கியது
இறை
தான் தொலைந்து போன
அரூப வெளி குறித்து
அறியாது


நன்றி: கீற்று

Tuesday, February 23, 2010

வார்த்தை விளையாடாமை - III

கண்ணே கத பேசுதே
என்றேன்.
என் மிகையின் எள்ளலை
அறிந்து கொண்டவள்
நான் கவிஞன் என்பதால்
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறுவதாகக்
குற்றம் சாட்டினாள்.
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறினாலும்,
இருப்பதை இருப்பதாகக்
கூற இயலாத
குற்றத்தை
ஒப்புக் கொண்டு விட்டேன்.



வார்த்தை விளையாடாமை - II

Thursday, February 4, 2010

தலைப்பு கவிதையிலேயே உள்ளது

சரிகளையும், தவறுகளையும்
பற்றி எழுதிய கவிதைக்கு
'சரியா தவறா?'
-என்று தலைப்பிட்டேன்.

பின்
'சரியா தவறா என்ற தலைப்பு சரியா தவறா?'
-என்று தலைப்பை மாற்றினேன்

பின்
'சரியா தவறா என்ற தலைப்பு சரியா தவறா? என்ற தலைப்பு சரியா தவறா?'
-என்று தலைப்பை மாற்றினேன்

பின்
.
.
.

சரியா தவறாக்களின்
விளைவுகளுக்கு
என் கவிதையும்
விலக்கல்ல.

  ©Template by Dicas Blogger.

TOPO